ஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் 
சக மனிதனை நேசிக்கத் தெரியாதவர்,
எத்தனை ஜெபமாலை உருட்டினாலும்---
காலமெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு
காயத்ரி மந்திரம் ஜெபித்தாலும்---
ஐந்து வேளை அல்ல--
ஐம்பது வேளை தொழுது மண்டியிட்டாலும்---
ஒரு பயனும் விளையாது!

இது கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களின் கருத்து.நேசித்தல் அற்ற நிலையானது  இன்று குடும்ப அங்கத்தவர்களிடையே மட்டுமல்ல அது ஆன்மீக வாதிகளாக தம்மை காட்டிக்கொள்வோரினையும் கடந்து அரசியல் வாதிகள் வரை பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மனிதனிடம் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும் ,பேராசைக்கான முன்னெடுப்புக்களும், அடுத்தவர் மீது இருக்கும் அர்த்தமற்ற அவநம்பிக்கைகளும் காரணங்களாக இருக்கலாம். இதனாலேயே மனிதருக்கிடையில் முட்டல்களும் ,மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மனம் உண்டானால் இடமுண்டு என்பர் பெரியோர். ஆமாம்.மனிதன் மாறவேண்டும்.அவன் மனிதம் உள்ள மனிதனாக வேண்டும். இப்புதிய புத்தாண்டில் புதிய சிந்தனைகளுடன் நல்வாழ்வு வாழ அனைவரையும் நேசத்துடன் வாழ்த்துகிறோம்.

  please click 'like' on theebam magazine-thanks 


உங்கள் வருகைக்கு நன்றி


www.theebam.com

வீரனும் அறவழி போரும்:

உலகில் எந்த ஒரு பெண்ணும்/தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள்,உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட,விவாஹ சுக்தம்-மண்டலம் 10,சுக்தம் 85 பாடல் 44 இல்"Not evileyed-,no slayer of thy husband,bring weal to cattle,radiant, gentle hearted;Loving the Gods, delightful,bearing heroes,bring blessing to our quadrupeds and bipeds."இப்படி கூறுகிறது.அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி,இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”["சத்ரபதி சிவாஜி"/பாரதியார்]
என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார்.அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000/2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது,சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது.இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய்.ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!(கீதை 2-37)"மேலும் போரில் மடிந்த,பெரும் வீரர்களை புதைத்த இடத்தில்,அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும்,போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி,எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை,எம் மூதாதையர்கள்,தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது.எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது.அந்த நிலை இன்று அருகிப் போயிற்று.இதை நாம் கண்டு,கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.
சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும்.இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு.அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன.எனினும்,முழுமையான தரவுகள் இல்லை.அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன.சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து,பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார்.இதனால்,புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள்,குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.
அதில் அரசர்களின் வீர செயல்கள்,தன் நாட்டிற்காக,தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு,அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு,அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை,இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று.இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை.போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள்.குழந்தைகள்,முதியோர்கள், பெண்கள்,தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள்.அது மட்டும் அல்ல வைத்தியசாலை,பாடசாலை,பாதுகாப்பு இல்லங்கள்/இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன.சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள்.போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள்.இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது.அது தான் அந்த முக்கிய தகவல்.அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும்,தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம்.இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும்(Epic of Gilgamesh) இது காணப்படுகிறது.[Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும்.போர் தொடுக்கப்போகிறேன்.ஆனிரை[பசுக் கூட்டம்],ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள்[பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர்,மக்கட்செல்வம் இல்லாதவர்,ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம்.இதோ அந்த பாடல்:
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"

பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்,பெண்களும், நோயுடையவர்களும்,இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/"இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்]பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.அதுதான் யுத்த தருமமாகும்.பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது.இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக”என மேலும் அவனை வாழ்த்துகிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின்
பெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

இனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவிக்கும் சமஷ்டி


நன்றி;விளம்பரம் 
:தமிழர் பிரச்னைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தினை சிறிலங்கா அரசு எதிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதனை உணராது தங்கள் அரசியல் எதிர்காலத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாத ரீதியில் பெரும்பான்மை இனத்தவரை இட்டுச் சென்று  தொடர்ந்து நாட்டினை குட்டிச் சுவராக்கி வருகின்றனர்.

ஒளி பெறுமா என் வாழ்வு.


என் இதயம்
உன் பிரிவை தாங்க 
ஒன்றும்
 வலி தாங்கும்
சுவர் இல்லை பெண்ணே!

நீ இல்லாத இந்த நேரம் 
என் விழி
இரண்டும் சோர்வடைந்து 
உன் எண்ணங்களை சுமந்து
நான்   படும் பாடு
 உனக்கு எப்படிப் புரியும்!

வாசம் இன்றி மலர்
 உயிர்  பெறாது  பெண்ணே! 
உன் சுவாசம்  இன்றி நானும்
 உயிர் வாழ்வது
முடியாது கண்ணே!

நீ மீண்டும்
வந்து சேர்ந்து விட்டால்
வையகம்
 என் வசம் ஆகும். 
இல்லை எனில்

என் வாழ்வும் இருள் கொள்ளும்.
 [அகிலன் தமிழன்] 

காசேதான் கடவுளடா!

திருப்பதி கோயில் பொம்மைக்குப் புதிய துணி அணிவிப்பது "வஸ்த்ரம்" எனும் சடங்கு. சிறீவாரி வஸ்த்ரம் என்று கூறப்படுவது.
அது போல சிறீவாரி அபிசேகம் என்பது ஒரு சடங்கு.

அதன்படி பொம்மையைக் கழுவிக் குளிப்பாட்டித் துணி கட்டுவது இந்த இரண்டு சடங்குகளும். இந்தச் சடங்குகளைச் செய்திட இப்போது முடியாதாம்.
குளிப்பாட்டும் சடங்குக்குக் கட்டணம் 750 ரூபாய். இது 2028 ஆண்டு  முடிய புக் ஆகிவிட்டதாம்!
துணி கட்டும் சடங்குக்கு 12 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணம். இது 2042 
ஆண்டு வரை புக் ஆகிவிட்டதாம்!
ஆனால், குளிப்பாட்டும் சடங்குக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தந்தால் இப்போதே  சடங்கு செய்யலாம். துணி கட்டும் சடங்குக்கு 50 ஆயிரம் ரூபாய் தந்தால் இப்போதே  செய்யலாம்
பணம் உள்ளவர்களுக்குத்தான் பக்தி! பகவான் சடங்கு! எல்லாமே!

 ஆஹா !இப்பிடி ஒன்றை இங்கையும் தொடங்கினால் பிழைக்க முடியாதா!!என்ன?
                                                                                                   

உங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க...

உங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது நோயெதிர்ப்பு மண்டலம் தான். இத்தகைய நோயெதிர்ப்பு மண்டலம் நமது ஒருசில செயல்களால் பாதிக்கப்பட்டு அழிவிற்குள்ளாகிறது. இச்செயல்கள் அப்படியே நீடித்தால், பின் கடுமையான நோய்க்கிருமிகளால் உடல் பாதிக்கப்பட்டு, அதனால் அபாயத்தை சந்திக்க நேரிடும்.

ஆகவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செயல்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இங்கு நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் பழக்கவழக்கங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அளவுக்கு அதிகமாக ஒருவர் பயணத்தை மேற்கொண்டால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலமானது கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்க கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக புதிய இடத்தில் உள்ள உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றால் கிருமிகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். எனவே பயணம் செய்யும் முன் யோசியுங்கள்.

பலர் வயிற்று பிரச்சனைகளுக்கு ஆன்டாசிட்டுகளை எடுப்பார்கள். இப்படி எதற்கு எடுத்தாலும் ஆன்டாசிட்டுகளை எடுத்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதிக்கப்படும். எனவே மருத்துவர்களின் பரிந்துரையின்றி ஆன்டாசிட் மாத்திரை, மருந்துகளை எடுக்காதீர்கள்.

மதுபானம் இரத்த செல்களின் உற்பத்தியைக் குறைக்கும் என்பது தெரியுமா? இப்படி இரத்த செல்களின் உற்பத்தி குறைந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவாறு பாதிக்கப்படும்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், தனிமையாக வாழ்க்கை வாழ்பவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே ஆரோக்கியமாக வாழ தனிமையில் இருப்பதைத் தவிர்த்து, சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழுங்கள்.

எடையைக் குறைக்கிறேன் என்ற கடுமையான டயட்டுகளை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் கடுமையான டயட்டுகளால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்காமல், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிப்பிற்குள்ளாகும்.

சில உடல் நல பிரச்சனைகளுக்கு ஆன்டி-பயாடிக்ஸ் எடுக்க வேண்டி வரும். ஆனால், இப்படி ஆன்டி-பயாடிக்குகளை அதிகமாக எடுத்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் அழியக்கூடும். எனவே இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

தொடர்ச்சியாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து வருவதனால், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தொல்லை ஏற்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பிற்குள்ளாகும். எனவே எதற்கெடுத்தாலும் மருந்து, மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், அதனால் முதலில் பாதிக்கப்படுவது நோயெதிர்ப்பு மண்டலம் தான். நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் தான், தூக்கமின்மையால் மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடுகிறது.

எம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]


மனம் உடைந்து போய் இருந்த மதிக்கும் வெண்ணிலாவிடம் மனம் விட்டுப் பேசியதில் சிறு ஆறுதல் கிடைத்தது. வாடி வதங்கிய மரம் துளிர்ப்பது போல ,அவளும் சற்றுப் புன்னகை கொண்டு மனம் நிம்மதி அடைந்து இருந்தாள். 
மதியின் கதையைக் கேட்ட வெண்ணிலாவோ , “கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா , வெந்த புண்ணிலேயே மீண்டும் வேலைப் பாச்சுகிறாயோ, நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என்று முணுமுணுத்தபடி, மனதில் வெறுப்பு வர அதை மனதில் அடக்கிக் கொண்டு” மதி ,நீ ஒன்றுக்கும் கவலைப்படாத,கடவுள் ஒரு நல்ல வழி காட்டுவார்” 

என்று ஆறுதல் கூறினாள், மதியின் முகமும் வாடி களைப்பாக இருந்ததை அவதானித்த வெண்ணிலாவும் ஒரு டீ குடிச்சா நல்லாயிருக்கும் என எண்ணியபடி , “மதி வாரும் , ஒரு டீ குடித்துக் கொண்டே கதைப்போம் என்று கூற ..பறி போன உறவின் பாசம் மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் “ஓம் அக்கா வாங்கோ, ஒரு டீ குடிச்சால் கொஞ்சம் தெம்பாகவும் இருக்கும்” என்றபடி இருவரும் தேனீர் கடையை நோக்கி நடந்தனர். . வெண்ணிலா … 

“ஐயா இரண்டு டீ தாங்கோ” என்று கேட்க ..கடைக்காரனும் ,பரிதாபத்துடன் அவர்கள் இருவரையும் உற்று நோக்கி விட்டு இரண்டு தேனீரை தயாரித்த வண்ணம், “பிள்ளை வெண்ணிலா நீ வேலை தேடி கொண்டு திரிந்தாய், வேலை ஏதாவது கிடைத்ததா?” என்று கேட்கவும்,தன்னுடைய கஷ்டம் எதுவும் மதிக்கு தெரிந்து விடக் கூடாது ,அது அவளை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என எண்ணியபடி கதையை வேறு திசைக்கு மாற்ற முயற்சித்தாள் .”ஐயா அதை விடுங்கோ” என்று சமாளிக்கவும் முயன்றாள் . 

அப்பொழுது அந்த பெரியவர் “பிள்ளை உம்மடை கஷ்டம் எனக்கு புரியும், நானும் உந்த யுத்தத்தாலை என்னுடைய பிள்ளையையும் மருமகன் பேரப்பிள்ளை என்று எல்லோரயும் தொலைத்துவிட்டு ,என்னுடைய காலையும் இழந்து போட்டு இப்ப இருக்கிற ஒரு பேத்தியை வாழ வைக்க முடியமால் திண்டாடிக் கொண்டிருக்கிறன். இறைவன் காட்டிய கருணையோ என்னவோ , என்ர நிலைமையை அறிந்து எங்கடை மண்ணில இருந்து ,இன்று நோர்வேயில புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் 

காலையடி நெற் இன் உதவும் கரங்கள் என்ற அமைப்பு ஒன்று இந்தக் கடையைப் போட்டு தந்தவை, அதனால் என்ர வாழ்க்கையை ஓரளவு கொண்டு செல்ல கூடியதாக இருக்குது பிள்ளை” என்று பெரியவர் சொல்லி முடிக்கவும் , தன்னை மறந்த வெண்ணிலா “ஐயா உங்களுக்கு எதாவது உதவி செய்ய கூடிய தமிழ் அமைப்பு .தெரிந்தால், அவர்களிடம் கேட்டு பாருங்கோ எங்களின்ரை நிலை உங்களுக்கு தெரியும் தானே , இரண்டு பிள்ளைகளோடு அன்றாட வாழ்க்கையை ஓட்ட நான் படும்பாடு” மனமுடைந்து கண்ணீர் சிந்தியவாறு பெரியவரை நோக்கி கேட்டாள். 
இதைக் கேட்டு கொண்டு இருந்த மதிக்கோ .. பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்ப வரை என்ர பிரச்சனைகளையும் , வேதனைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருந்து விட்டேனே , வெண்ணிலா அக்காவைப் பற்றி நான் எதுவுமே யோசிக்கவில்லையே; எப்படிப்பட்ட நல்ல மனசு அக்காவுக்கு , அக்கா தன்னுடைய பிரச்சனையை மறைத்து ஒரு தாயைப் போல இருந்து எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறா , என்னை மன்னித்து கொள்ளுங்கோ அக்கா , என்று வெண்ணிலாவிடம் மனதுக்குள்ளேயே மன்னிப்புக் கோரினாள். 

காலம் மனிதன் மனங்களை எவ்வாறு மாற்றிவிடுகின்றது?, எதற்காக நாங்கள் எங்கள் உணர்வை தொலைத்து, உறவை பிரிந்து போராடினோம் ? இந்த மக்களுக்காகத் தானே ,அவர்களோ இன்று எந்த நன்றி உணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணிக் கண் கலங்கியவாறு வெண்ணிலா அக்காவின் கடந்த கால பசுமையான வாழ்க்கையை மனதில் நினைத்தபடி என் சிந்தனையை அக்காவின் கடந்தகால வாழ்வை நோக்கி திருப்பினேன்.... ....................
..[தொடரும்..- கவி நிலவன்]