ஒட்டுக்கேட்பாரெல்லாம் மறுபிறப்பில் பாம்பு ஆகப் பிறப்பாரோ!!!
இணையம் அமோக வளர்ச்சி கண்டுள்ள இவ்வேளையில் இணையதளக் கண்காணிப்பும் உச்சம் அடைந்துள்ளது. இணையதளக் குற்றச் செயல்கள் (Internet Crimes) என்ற புதிய குற்றவியல் துறையும் உருவாகியுள்ளது. தகவல் யுகம் பெற்றெடுத்த இணையக் கண்காணிப்பு ஒரு அத்து மீறலாக அமைந்தாலும் சில சமயங்களில் அவசியமாகப் படுகிறது.
அமெரிக்க சிஐஏ உளவமைப்பு மாத்திரம் நாளென்றுக்கு ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட இணைய உரையாடல்களை பதிவு செய்து அலசுகிறது. இதில் மொழி மற்றும் நாடு பற்றிய வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. எல்லா நாட்டிற்கும் மொழிக்குமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வடிகட்டப் படுகின்றன.
தேவைப்பட்டவை சேமிக்கப்டுகின்றன. மிகுதி வெளியேற்றப்படுகிறது. இது மனிதர்களால் மாத்திரம் செய்யக் கூடிய பணியல்ல. இணையக் கண்காணிப்புக் கணினிகள் (Internet Surveillance Computers) உருவாக்கப்பட்டுள்ளன.
எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எதை நிராகரிக்க வேண்டும் என்று இந்தக் கணினிகளுக்கு கட்டளையிடப் பட்டுள்ளது. கட்டளையை நிறைவேற்றி மனிதர்களுக்கு இந்த கண்காணிப்புக் கணினிகள் தமது பதிவுகளைக் கொடுக்கின்றன.
கணினிகள் எப்படிச் செயற்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது. சில குறிப்பிட்ட சொற்களைக் கேட்டால் அல்லது படித்தால் பதிவு செய்யவும் என்று பெரும்பாலும் கட்டளைகள் அமைகின்றன. கட்டளைகள் சுருக்கமாகவும் நீளமாகவும் தேவைக்கு ஏற்ற விதமாகவும் இடம் பெறுகின்றன.
கணினிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களும் அமைப்புகளும் இணையதளங்களும் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றன.
குற்றத் தடுப்பிற்கு இது மிகவும் முக்கியம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தனி மனிதர்களுடைய கணினிகளும் அவர்கள் அறியாமல் கண்காணிக்கப்படுகின்றன. கணினிகளில் சேமிக்கப்பட்ட தரவுகளையும் பெறும் நோக்கில் இந்த வகை கண்காணிப்பு நடத்தப்படுகிறது.
தனி மனிதர்களுடைய கணினிகளில் சேமிக்கப்பட்டவற்றை ஒரு மென்பொருள் மூலம் திருடுகிறார்கள். உண்மையில் இதை திருட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எந்தவொரு கணினி உரிமையாளரும் தான் சேமித்த தரவையும் தகவலையும் பிறருக்கு மனமொத்து வழங்கப் போவதில்லை.
உளவுத் துறையினர் எப்படியோ தனி மனிதர் கணினிக்குள் நுளைந்து ஒரு மென்பொருளைப் புகுத்திவிடுவார்கள். அதன் பிறகு கணினியில் உள்ளவற்றை உறிஞ்சி எடுத்து விடுவார்கள். இது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையானாலும் இந்த விதத்தில் பெறப்பட்ட ஆதாரங்கள் நீதி மன்றத்தில் அனுமதிக்கப்படுகின்றன. இதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இன்று தொலைபேசி ஒட்டுக்கேட்டல் (Telephone Tapping) நடவாத நாடே இல்லை எனலாம். அமெரிக்காவின் தொலைபேசி வசதி வழங்கும் நிறுவனங்களுக்கு அவற்றின் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை தரும்படி உத்தரவிடும் உரிமை உள்நாட்டு உளவமைப்பு எப்.பி.ஐ யுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எப்பிஐ இந்த உரிமையைச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்டல் மனிதர்களால் (Humint) விசேட கருவிகளின் உதவியோடு செய்யப்படுகிறது. தொலைபேசி ஒட்டுக்கேட்டல் இருவகைப் படும். ஒன்று உத்தியோகபூர்வமாகச் செய்யப்படுவது. அடுத்தது அதற்குப் புறம்பானது.
இணையத்தைக் கண்காணிப்பதற்கு கணினிகள் (Surveillance Computers) இருப்பது போல தொலைபேசிகளை கண்காணிப்பதற்கும் கணினிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்தக் கணினிகள் எல்லா உரையாடல்களையும் பதிவு செய்கின்றன. பிறகு மென்பொருளின் வழிகாட்டலில் வடிகட்டி தேவையானவற்றை உளவுத் துறையினர் பார்வைக்கு வழங்குகின்றன.
நீங்கள் பாவித்தாலென்ன பாவிக்காவிட்டாலென்ன உங்கள் கைபேசிகள் கண்காணிக்கப்படுகின்றன. உலக நாடுகளில் கைபேசிப் பாவனை 2011ம் ஆண்டில் 500கோடி என்று மதிப்பிடப் படுகிறது. உலக மக்கள் தொகைக்கு நிகராக ஆளுக்கு ஒரு கைபேசி என்று வரலாம்.
வளர்ந்து வரும் நாடுகளில்100 பேரில் 58பேர் கைபேசிகளை வைத்திருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் சராசரி ஒவ்வொருவரிடமும் ஒரு கைபேசி இருக்கிறது. ஏழை நாடுகளிலும் 100 பேரில் 25பேர் கைபேசி வைத்திருக்கிறார்கள. கைபேசியைக் காவித்திரிய முடியும் என்பதால் அதை”மொபைல் போன்” (Mobile phone) என்கிறார்கள்.
அத்தோடு மக்களைத் தொடுக்கும் கருவி (Connecting People)என்ற சிறப்பும் அதற்கு உண்டு. கைபேசிகள் மீதான கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் அரசுகள் சட்டங்கள் மூலமாகவும் சட்ட ஒழுங்கைப் பேணும் அதிகாரிகளுக்கு வழங்கிய அனுமதிகள் வாயிலாகவும் இறுக்கியுள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். கைபேசிகள், சிம் அட்டைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அவற்றைக் கொள்வனவு செய்வோரின் பெயர், முகவரி மற்றும் அடையாள அட்டை விவரங்களைப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
இதைவிட தொடர்பு வசதியை ஏற்படுத்தும் நிறுவனங்கள் (Providers) மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. மேற்கூறிய வசதியை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மாதமொரு முறை அரசின் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்திய கைபேசிகளின் இலக்கங்கள் மற்றும் எத்தனை தடவை பயன்படுத்தப்பட்டன உள்ளடங்கிய விவரத்தைக் கொடுக்க வேண்டும். சில நாடுகளில் வாடிக்கையாளர்களின் உரையாடல்களின் சாராம் சத்தையும் அறிக்கையில் உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
அரச அதிகாரிகளுக்கு தொலைபேசி இணைப்பு வசதி வழங்கும் நிறுவனத்திற்குச் சென்று பார்வையிடும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கைபேசிப் பாவனையைக் கண்கானிக்கும் நடவடிக்கையின் அங்கமாகப் பார்க்க வேண்டும்.
சில தொலைபேசி வசதி வழங்கும் நிறுவனங்கள் உளவுத்துறைக்குச் சொந்தமானவை என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது. இதைத் தட்டிக் கழிக்க முடியாதிருக்கிறது. கைபேசியில் உள்ள ஒலி பெருக்கிக் கருவியின் (Speakers) ஒலியை தூரத்தில் இருந்தவாறு கூட்டுவது மூலம் ஒட்டுக் கேட்கும் வசதியை ஜக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து போன்றவற்றின் உளவுத்துறையினர் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் கைபேசி உரையாடல்களை உளவுத்துறையினர் பதிவு செய்து கைபேசி உரிமையாளருக்கு எதிராகத் தேவைப்படும் போது பயன் படுத்தமுடியும்.
நீங்கள் இரகசியமாகப் பேசுவது இரகசியமல்ல. மாறாகப் பரகசியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். கைபேசியின் மின்கலம் திடீர் என்று இறங்குவதாக இருந்தால் யாரோ உங்கள் கைபேசியின் ஒலிபெருக்கி கருவியை முடுக்கி விட்டுள்ளார்கள் என்று நீங்கள் சந்தேகிக்கலாம்.
கைபேசி உரிமையாளரின் இருப்பிடத்தை (Location) அவருடைய கைபேசி மூலம் தீர்மானிக்க முடியும். அவர் கைபேசியை உரையாடலுக்குப் பயன் படுத்தாவிட்டாலும் அவர் அதைத் தன்னோடு எடுத்துச் சொல்லாவிட்டாலும் கூட இருப்பிடத்தை மிக எளிதாக நிர்ணயம் செய்ய முடியும்.
குறிப்பிட்ட கைபேசிக்கும் தொலைத் தொடர்புக் கோபுரத்திற்கும் இடையிலான தூரத்தைக் கணக்கில் எடுத்து அதன் அடிப்படையில் கைபேசியின் இருப்பிடத்தை துல்லியமாக மதிப்பிட முடியும்.
கைபேசி உரிமையாளர் எங்கே வழமையாகத் தங்கியிருக்கிறார், அவருடைய நடமாட்டத்தின் பாதை போன்றவற்றையும் அதே போல மதிப்பிட முடியும்.சிம் அட்டை நீங்கள் யாருடன் பேசினீர்கள், எந்தக் காலப்பகுதியில் பேசினீர்கள் என்பதை காட்டிக் கொடுக்கும்.
அதில் இந்தத் தகவல்கள் பதிவாகின்றன. காவல்துறையினர் குற்றவாளிகளின் சிம் அட்டை மூலம் தமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment