பிச்சைக்காரன் -விமர்சனம்


அம்மாவைக் காப்பாற்றுவதற்காகப் பிச்சைக்காரனாக வாழும் ஒரு மகனின் கதைதான் இயக்குநர் சசியின் பிச்சைக்காரன். அடையாளம், அந்தஸ்து ஆகியவற்றைத் துறப்பதுடன், தான் எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பதை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது ஆகியவை இதற்கான நிபந்தனைகள்.
அம்மாவுக்காக இவற்றை ஏற்றுப் பிச்சைக்காரனாக மாறும் விஜய் ஆண் டனிக்குத் தொழில் எதிரி, காதல், உள்ளூர் ரவுடிகள் எனப் பல தடைகள். இவற்றைத் தாண்டி நினைத்ததை முடித்தாரா, அவரது அம்மா குணமடைந்தாரா?
படம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களை முழுமையாகத் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது இயக்குநர் சசியின் திரைக்கதை. ஒரு கோடீஸ்வரன் பிச்சைக்காரனாக வாழ்வதெல்லாம் நடக் கிற கதையா என்ற கேள்வி எழாத வண்ணம் திரைக்கதையை அமைக்கிறார். கதையின் பின்புலத்தின் மீதும் கதாபாத்திரங்களின் மீதும் போதுமான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் சாதிக்கிறார்.
பிச்சைக்காரர்கள் என்றால் அழுக்கான வர்கள், அவர்களுக்கென்று மனமோ தனித்த உலகமோ இல்லை என்ற பொதுப்பார்வையை மறுக்கும் விதத்தில் அவர்களைச் சித்தரித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது.
தாய்ப்பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் தாய்ப்பாசத்தைக் காட் டும் காட்சிகள் மிகை உணர்ச்சி இல்லாமல் அமைந்துள்ளன. ஆனால் நாயகனின் சாகசங்கள் மிகையாகவே உள்ளன. பல காட்சிகளில் விஜய் ஆண்டனியின் உடைகளும் திரைக்கதையின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கு கின்றன. உலகத்தில் எத்தனையோ பிச்சைக்காரர்கள் இருக்க, நமது நாயகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று தெரியவில்லை. ரவுடிகளின் பங்கு திரைக்கதையில் சரியாகப் பொருந்தவில்லை.
எனினும் நாயகனின் நிஜ அடை யாளம் தெரியாமல் பிறர் அவனுடன் உற வாடுவதைச் சித்தரித்துள்ள விதமும் கதையோடு இழையோடும் நகைச்சுவை யும் சுவை கூட்டுகின்றன. வசனங்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. பெரி யப்பாவின் பாத்திரச் சித்தரிப்பு, பணக் காரனாக இருப்பதற்காக வேதனைப்படு கிறேன் என்று விஜய் ஆண்டனி போலீஸ் காரரிடம் சொல்வது ஆகியவை மனதில் நிற்கின்றன. ரவுடிகளின் தலைவன் தனது வலது கையாக இருப்பவனை ‘இனிமே நீ லெஃப்ட்டுதான்’ என்று சொல்லும் காட்சி, பிச்சைக்காரர்களின் உரையாடல்கள் என்று ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார் சசி.
பிச்சைக்காரன் என்று தெரிந்தும் காதலைத் துறக்க முடியாமல் தவிக்கிறாள் காதலி. அவள் தரும் உதவியை ஏற்க மறுக் கிறான் காதலன். “நான் பிச்சையாகக் கொடுத்தா இதை வாங்கிக்கிறியா?” என்று அவள் பணத்தை நீட்ட, மண்டியிட்டு இரண்டு கைகளையும் ஏந்தி நிற்கும் அவனது கரங்களில் தன் முகம் புதைத் துக் காதலை அர்ப்பணிக்கும் காட்சி கவித்துவமானது.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னை நன்கு பொருத்திக்கொண்டுள் ளார் விஜய் ஆண்டனி. ஆனால் சில காட்சிகளில் சலனமற்ற முகத்துடன் அவர் நிற்பது காட்சிகளின் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. இசையைக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார்.
முதல் படம் என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார் நாயகி சாத்னா. பெரியப்பாவாக வரும் முத்துராமன், பிச்சைக்காரராக வரும் இயக்குநர் மூர்த்தி ஆகியோரும் நன்கு நடித்திருக் கிறார்கள், நண்பன் பகவதி பெருமாள், கார் டிரைவர் சிவதாணு எனச் சின்ன வேடங்களில் வருபவர்களும் அழுத்த மான முத்திரை பதிக்கிறார்கள். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் கலை இயக்கு நரின் பங்களிப்பும் படத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
நேர்த்தியான திரைக்கதை, நகைச் சுவை, வசனங்கள் ஆகியவற்றால் இந்தப் பிச்சைக்காரன் ஈர்க்கிறான். நாயக பிம்பத்தை முன்னிறுத்தும் காட்சிகளைக் குறைத்து யதார்த்தத்தைக் கூட்டியிருந்தால் படம் அலாதியான அனுபவமாக அமைந்திருக்கும்.                                                                                  

No comments:

Post a Comment