பலாலி விமான நிலையத்தில் ....சண்டியன் சரவணை

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்க இலங்கை அரசின் முயற்சி தொடர்பாக  வடமாகாண   முதலமைச்சரின்  எதிர்ப்பும் ,வடபுல மக்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தேகமும் போராட்டமும் அறிந்து ஊரில் வாழும் சண்டியன் சரவணை யுடன் தொடர்புகொண்டேன்.

மனுஷன் சற்றுக் கடுகடுப்பாகவே இருந்தார்.
''இப்பிடித்தான் எங்கடையள்.வெள்ளைக்காரன் ஆட்சியில முதன்முதல் யாழ்ப்பாணத்துக்கு றெயின்  வரப்போகுது எண்டு அறிஞ்சு போராட்டம் நடத்தினவை.போராடி,போராடி இப்ப இந்தப்போராட்டத்தில வந்து நிக்கினம். எங்களுக்கு கிட்ட ஒரு சர்வதேச விமானநிலையம் வருகுது எண்டால் வரவேற்க வேண்டாமோ!''
எந்தவித பயமுமில்லாமல் சத்தமாகவே தொலைபேசியில் கத்தி த்தன் ஆத்திரத்தினை கொட்டித் தீர்த்துக் கொண்டார் சரவணையார்.

கொஞ்சம் பொறுங்கோ!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 3350 மீற்றர்கள் நீளமான ஓடு பாதை
திருகோணமலை உள்ளூர் விமான நிலையம் 2397 மீற்றர் நீள ஓடுபாதை
இரத்மலான விமான நிலையம் வெறும் 2000 மீற்றர்கள் நீளமான ஓடுபாதை 
ஆனால் 
பலாலி விமான நிலைய ஓடு பாதை 2305 மீற்றர் நீளமானது என்று இருக்கையில் காணி சுவிகரிப்பு என்பது எதற்காக?
நானும் அறித்ததை சொல்லிப் பார்த்தேன்.
சண்டியனும் எனை விட்டபாடில்லை.
''என்ன காணும்!வெளிநாட்டில தானே இருக்கிறாய்.ஓடுற பாதை இருந்தா சரியே.விமானங்கள் தரிச்சு நிக்கிறேல்லையே .எரிபொருள்,மற்றும் தேவைகளுக்கான இடவசதி தேவையிலையோ? 
அது போக 1984 இலை கொஞ்சக்காணி,2016 இல்லை கொஞ்சக்காணி எண்டு கேட்டுக் கேட்டு எத்தினை தரமாம் ஒரு எயர்போட்டுக்கு நிலம் ஒதுக்கிறது..விஷயம் இல்லாமலே  வெள்ளைக்காரன் நீங்க வாழுற நாட்டில அந்தக்காலத்திலேயே விமானநிலையங்களுக்கு  பெரிய தேசங்களை ஒதுக்கி வைச்சிருக்கிறான். ''
கனடாவில் வதியும் மகனிடம் சுப்பர் விசாவில வந்து கனடாவை ஒருமுறை கலக்கி சென்றவர்தான் சண்டியன் சரவணை,
''அப்போ அரசு சுவிகரிக்கும் காணிகளில் வாழ்ந்தோர் நிலை என்ன? நானும் அடுத்த படிக்கு வந்தேன்.
சண்டியனும் சளைக்கவில்லை.''உங்களைபோல எத்தினை லட்சம் சனம் இன்று நாட்டிலை இல்லைத்தெரியுமே!எத்தினை லட்சம் வீடுகள் சும்மா கிடக்குது தெரியுமே!''
''இன்னொருத்தன் வீட்டில களவாய் இருக்கச் சொல்லுறியளோ?''
''அப்பிடி நான் சொல்லேல்லை.சிங்கப்பூரிலை தரை வீடுகளிலை இருந்த மக்களை அவ்வீடுகளிளிருந்து அகற்றி மாடி களுக்கு கொண்டு செல்ல வில்லையோ!அதேபோல இலங்கை அரசு பாதிக்கப் பட்ட மக்களுக்கு  ஆளில்லா வீடுகளை சொந்தமாக்கி வழங்கவேண்டும்.''
''ஐயோ சரவணையாருக்கு திரும்பவும் கனடா வரும் எண்ணம் இல்லைப்போலும், இதை தீபத்தில் எப்படி போடமுடியும்''  என்று எனக்குள் முணுமுணுத்தது எப்படியோ அவருக்கு விளங்கிவிட்டதோ என்னவோ, மறுமுனையில் இருந்து ஒரு எச்சரிக்கை எனக்கு வந்தது.!
''ஓய் காணும், இண்டைக்கு நான் சொன்னது அப்பிடியே,அப்பிடியே உந்த சஞ்சிகையில  போடவேணும். இல்லையெண்டா தம்பி யாழ்ப்பாணப் பக்கம் தலை வைச்சுப் படுக்கமாட்டாய்.''
''அடக் கடவுளே! கனடாவில படுக்கிறதுக்கு க்கூட பக்கம் தேட வந்துடுமோ'' என்று எண்ணியவாறே தொலைபேசித் தொடர்பினை முறித்துக்கொண்டேன்.
தொடர்பு;செல்லத்துரை மனுவேந்தன்                                                                   

1 comment:

  1. நாதன்Sunday, March 13, 2016

    அப்ப, இனி கோவில் திருவிழாவுக்கு நேரை போய் யாழ்ப்பாணத்திலை இறங்கலாம் என்று சொல்லுங்கோவன்!
    அது சரி, ஏதாவது தொழில் சம்பந்தமாய் ஏதாவதைத் தொடக்காமல் உந்த airport தான் உடனடித் தேவையோ இப்ப?
    சும்மாப் புலுடாக் கதையளை ஒருத்தரும் நம்பாதேங்கோ!

    ReplyDelete