முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.
இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.
ஞான முத்திரை
கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும்
நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
வருண முத்திரை
பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண
முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.
சூன்ய முத்திரை
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த
விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த
இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை
கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு
விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.
இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.
அபான முத்திரை
கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின்
நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.
இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.
அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப
பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது
இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
லிங்க முத்திரை
படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய
நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.
சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.
முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.
பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.
இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.
இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.
ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கண்டிப்பாக இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச்சைக்கு இணை என்று சொல்லும் அளவு பரிசோதனைகள் முடிவு விஞ்ஞான பூர்வமாக முழுமையாக வெளியாகி விடவில்லை. ஆனால் நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரிசோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?
நன்றி:- என்.கணேசன்
0 comments:
Post a Comment