இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி


அன்று சிலோன் அன்றழைக்கப்பட்ட இலங்கையில் அன்றைய ரயில்வே இலங்கை மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இலங்கை முழுவதையும் ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை தோட்டங்களுக்கும் மற்றைய ஏற்றுமதிப் பொருட்கள் விளையும் முக்கிய இடங்களுக்கும் கொழும்பை மையமாக வைத்துப் புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக் காலத்தில் அடி அங்குலம் அகலம் கொண்ட  குறுகிய ரெயில் பாதைகளே அமைக்கப்பட்டன.இந்த ரயில்வே பற்றி சில சுவாரசியமான செய்திகளைப் பகிரலாம் என்றிருக்கிறேன்.

இங்கிலாந்தில் நீராவிப் புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதலாவது நீராவிப் புகையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் மருதானைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது. இது அன்று அம்பேபுச வரையில் சென்றது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன.

இப்புகையிரதம் எப்படி இலங்கைக்கு அறிமுகமானது?

இந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் கவர்னராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.

மிக மெதுவாகவே இப்புகையிரதம் செல்லும். இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (யாழ்ப்பாணத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலைகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது,  புகையிரத்தால் மனித உயிருக்கு ஆபத்து என சிலர் புகையிரத சேவைக்கு எதிராக அதற்கும் யாழில் ஆர்ப்பாட்டம் செய்தனராம்.)

அன்றைய புகையிரதங்களில் உணவகங்கள் அற்புதமானவை. ஒரு முழுப் பெட்டியே உணவகமாக மாற்றப்பட்டிருக்கும். சமையலறை, இருந்து உண்ண மேசைகள், சீருடை அணிந்த சேவகர்கள்.( 30, 40 களில் Sir Donatus Victoria's Catering Service என்ற நிறுவனமே இந்த உணவகங்களைப் பராமரித்து வந்தது). யாழ்ப்பாண இரவு மெயில் வண்டியில் இந்த உணவகம் மிகவும் பிரசித்தம். மதுபான வகைகள், சிற்றுண்டி வகைகள், தேநீர் அனைத்தும் கிடைக்கும்.

அக்காலத்தில் புகையிரத ஓட்டிகள் பலர் பிரித்தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர். நீராவி இயந்திரத்தில் இருந்து ஓட்டுனர் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வழமை. (இன்று Thomas The Tank Engine இல் இக்காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்). இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அப்போது எரிவிறகுகளே புகையிரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்துடன் எழுபதுகளின் முன்னர்  புகைவண்டியில் நிலக்கரி,விறகுக்கரி  பாவனை இருக்கும் வரையில் காங்கேசன்துறையில்  புகைவண்டியில் ஏறி கொழும்பில் இறங்கினால் முதலில் நாம் எல்லோரும்   நீரில் முழுகுவதற்கு வரிசையில் நிற்போம்.ஏனெனில் நமது முகம்,கை அணிந்திருந்த உடை முழுவதும் புகைவண்டியின் புகை படிந்து நாம் கறுப்பர் போல் காட்சியளிப்போம்.          

சில சம்பவங்களைத் தவிர ரயில் பிரயாணம் அநேகமாக சொகுசானது மட்டுமல்ல மிகவும் விரைவானதும் பாதுகாப்பானதுமாக இருந்தது,இருக்கிறது. 

👉படித்ததில் பிடித்தது 

1 comment: