கேரளாவில் வெற்றி பெற்ற மலையாளப் படங்கள் தமிழில் மறுஆக்கம் செய்யப்படும்போது , அவை படுதோல்வி அடைகின்றன என்பது தமிழ் திரையுலகின் சமீபத்திய வரலாறு .
அதுபோல் , ஹீரோயினை முதன்மைப்படுத்தும் கதைகளை தமிழர்கள் வீட்டில் அமர்ந்தபடியே தொலைக்காட்சித் தொடர்களாக இலவசமாக பார்ப்பார்களே தவிர , திரையரங்குக்குச் சென்று காசு கொடுத்து பார்ப்பதில்லை என்பதும்கூட தமிழ் திரையுலகின் சமீபத்திய வரலாறுதான் .
இது புரியாமல் தயாரிக்கப்படும் படம் தான் ’ 36 வயதினிலே ’ .
ஆடிய கால்கள் சும்மா இருக்காது என்ற சொலவடைக்கு ஏற்ப , நடிப்புக்கு முழுக்குப் போட்டு , நடிகர் சூர்யாவை மணந்து , 2 குழந்தைகளுக்குத் தாயான ஜோதிகா , 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு , இப்படத்தில் நாயகியாக ரீ - எண்ட்ரி ஆகிறார் .
கடந்த வருடம் மே மாதம் கேரளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ ஹவ் ஓல்டு ஆர் யூ ’ என்ற மலையாளப் படம்தான் , சிற்சில மாற்றங்களுடன் தமிழில் ’ 36 வயதினிலே ’ படமாக உருவாகி வருகிறது . இத்தமிழ் படத்தின் கதை என்பதாக சமூகவலைத் தளங்களில் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . அவற்றின்படி பார்த்தால் , இது முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட் . இதன் கதை மூன்று பகுதிகளைக் கொண்டது . முதல் பகுதி – தொலைக்காட்சித் தொடருக்கான குடும்பக் கதை பகுதி . இரண்டாம் பகுதி – எல்லோராலும் “ போர் ” என்று கருதப்படும் ‘ வயலும் வாழ்வும் ’ தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற பகுதி . மூன்றாம் பகுதி – மீண்டும் தொலைக்காட்சித் தொடருக்கான கதை பகுதி . இனி இவற்றை சற்று விரிவாக பார்ப்போம் .
36 வயதாகும் ஜோதிகா தாலுகா ஆபீசில் கிளார்க்காக கடுமையாக வேலை பார்க்கிறார் . வீட்டில் குடும்பத் தலைவியாக பொறுப்புகளைச் சுமக்கிறார் . அவரது கணவர் ரகுமான் மத்திய அரசு ஊழியர் . இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார் . ரகுமானுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி அங்கு குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்பது லட்சியம் . ரகுமானின் முயற்சியால் அவருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது . குடும்பத்தோடு வெளிநாடு செல்ல திட்டமிடும்போது ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட ரகுமான் , மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார் . தனித்து விடப்படும் ஜோதிகா மன உளைச்சலுக்கு ஆளாகிறார் . படிக்கிற காலத்தில் கனவுகளோடும் , லட்சியங்களோடும் இருந்த ஜோதிகா இப்போது
சுமைதாங்கியாக வாழ்ந்த வாழ்க்கையையும் இழந்து நிற்பது வெறுமையை ஏற்படுத்துகிறது . இது படத்தின் முதல் பகுதி .
வாழ்க்கையில் பிடிப்பை இழந்து நிற்கும் ஜோதிகா தன் வீட்டு மாடியில் போட்டிருந்த காய்கறி தோட்டத்தை அழிக்க நினைக்கிறார் . அதனால் அதில் இருந்த காய்கறிகளை பறித்து வேலைக்காரியிடம் கொடுக்கிறார் . வேலைக்காரி அந்த காய்கறிகளை இன்னொரு பணக்காரர் வீட்டில் விற்கிறார் . இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்ட அந்த காய்கறிகளின் சுவை , அந்த பணக்காரரை ஆச்சரியப்படுத்துகிறது . அவர் ஜோதிகாவை சந்தித்து பேசுகிறார் . “ இதுபோல நிறைய உற்பத்தி செய்து தாருங்கள் . நான் விற்பனை செய்து தருகிறேன் ” என்கிறார் . அதற்கு ஜோதிகாவின் பள்ளிக்கால தோழி ஒருவரும் உதவுகிறார் . இதனால் ஜோதிகா காய்கறி விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி புகழ் பெறுகிறார் . மாநில அரசு அவரை விவசாய ஆலோசகராக நியமிக்கிறது . ஜனாதிபதி விருது கொடுத்து கவுரவிக்கிறார் . தன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் ஜோதிகா . இது படத்தின் இரண்டாம் பகுதி .
ஜோதிகாவின் வளர்ச்சி பற்றி கேள்விப்பட்ட கணவர் ரகுமான் , மகளுடன் இந்தியா திரும்புகிறார் . மனைவியின் வளர்ச்சியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது படத்தின் மூன்றாவது பகுதி .
கதை எப்படி இருக்கு ? தேறுமா … ? .பொறுத்திருந்து பார்ப்போம்.
பாடல்கள் கேட்க கீழே செல்லுங்கள் -
VIDEO
0 comments:
Post a Comment