தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:12

[பண்டைய சிந்து சம வெளி அல்லது ஹரப்பானின் உணவு பழக்கங்கள்-தொடர்கிறது]
தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
சிந்துவெளியில் காணப்படும் வீடுகளில் தனி சமையல் அறை,படுக்கை அறை,குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன.அங்கு,வீடுகளின் சமையல் அறையின் வாசல் முற்றத்தை அண்டி இருந்தன.அவை செங்கல்களால் கட்டப்பட்ட அடுப்பை கொண்டிருந்தன.அங்கு பலவித மண் பாண்டங்கள்,வெவேறு அளவிலும் வெவ்வேறு வடிவத்திலும் காணப்பட்டன.பெரும் பாலான மண்பாண்டம் சக்கரத்தை சுற்றி வார்தெடுக்கப்பட்டவை.அவை நேர்த்தியான மற்றும் வழுவழுப்பான தோற்றம் உள்ளவையாகவும்,அதே நேரம் அவை சுடப்பட்டதால் நல்ல வலிமையாகவும் இருந்தன.அது மட்டும் அல்ல அவை கருப்பு அல்லது சிவப்பு வர்ணம் பூசப்பட்டு இருந்தன.இவை கிண்ணம்,குவளை, கோப்பை, தட்டு,பெரிய அகலமான பாத்திரம்,ஜாடி போன்றவையாகும்.அத்துடன் செம்பு,வெள்ளி,ஈயம் போன்றவையால் செய்யப்பட்ட பாத்திரங்களும் தோண்டி எடுக்கப்பட்டன.அவை பணக்கார குடும்பங்களால் பாவிக்கப்பட்டு இருக்கலாம்.சிந்து வெளி மக்கள் தமது சமையலுக்கு எண்ணெயுடன் மற்றும் இஞ்சி,உப்பு,பச்சை குடைமிளகாய்,மஞ்சள் தூள் போன்றவை பாவித்தனர்.என்றாலும் அவர்கள் நாளாந்த வாழ்க்கையில் அல்லது ஏதாவது ஒரு சிறப்பு தினத்தில் அல்லது ஆண்டவனுக்கான காணிக்கையில் அல்லது படையலில் எப்படியான உணவு சமைத்தார்கள் என்பதோ அல்லது அவையின் பெயரோ எமக்கு இன்னும் தெரியாது.ஆனால் அவையின் சேர்மானங்கள்,அதாவது என்ன என்ன
சேர்க்கப்பட்டன என்பதை நன்றாக அறியக் கூடியதாக உள்ளது.மெஹெர்கரில்[Mehrgarh] நடைபெற்ற அகழ்வு ஆராச்சியில்,அரைக்கும் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அவை கோதுமை,பார்லி போன்றவை அரைக்கப் பாவிக்கப்பட்டு இருக்கலாம்.எனவே,அவர்கள் மாவை பாவித்து அதிகமாக ரொட்டி போன்ற ஒரு உணவை சமைத்து இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.அதே போல ஹரப்பா அகழாய்வில் களிமண் கருவிகளும் தானியங்களை அரைக்கும் கல் யந்திரங்களும் அம்மி போன்ற அமைப்புடைய கல்கருவியும் கிடைத்துள்ளன.இந்த அம்மி இன்னும் இந்தியா,இலங்கை நாடுகளில்
பாவனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இது கடுகு,கொத்தமல்லி,போன்ற வாசனைத் திரவியம் பாவித்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.அங்கு கண்டு பிடிக்கப்பட்ட மட்பாண்ட சமையல் பாத்திரங்கள்,அவர்கள் கொதிக்கவைத்தும் வேகவைத்தும் சமைத்ததை காட்டுகிறது.அத்துடன் எரிந்த எலும்பு எச்சங்கள்,அவர்கள் இறைச்சியை சுட்டு சமைத்ததை- பார்பிக்யூ[BBQ] மாதிரி-எடுத்து காட்டுகிறது.மேலும் அங்கு தந்தூரி அடுப்பை போன்ற ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.இது அதிகமாக இன்றைய தந்தூரி அடுப்பின் பழைய வடிவமாக இருக்கலாம்?அன்றைய நாளாந்த வாழ்விற்கு அடிப்படை உணவான ரொட்டி செய்ய அது பாவிக்கப்பட்டு இருக்கலாம்.மேலும் கி மு 3000 ஆண்டை சேர்ந்த,தானியங்களை அரைப்பதற்க்கான மேடையும் ஹரப்பாவில் காணப்பட்டது.இது பெரும் அளவில் மா அரைத்து ரொட்டி செய்ய நகரங்களுக்கு வழங்கியதை காட்டுகிறது.இந்த நாகரிகம் மிகவும் மேம்பட்டது.இதனால்,இவர்கள் உடலிற்கு ஏற்ற தகுந்த உணவின் முக்கியத்தை கட்டாயம் அறிந்து இருக்கலாம் எனவும் நாம் நம்பலாம்.
கறி (Curry) பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு,பிரட்டல்,பருப்பு,கீரை,மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை- வெங்காயம், இஞ்சி,மஞ்சள், உள்ளி, குடைமிளகாய்,மிளகாய்,கொத்தமல்லி,சீரகம்,மற்றும் இது போன்ற வாசனைத் திரவியங்களுடன் சமைத்த ஒரு சமையலை குறிக்கிறது.ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது.இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்லாகும்.இதன் சரித்திரம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.சிந்து சம வெளி மக்கள்,தமது உச்ச நாகரிக கட்டத்தில்,மூன்று முக்கிய சேர்மானங்களான-இஞ்சி,உள்ளி,மஞ்சள் போன்றவற்றை பாவித்து பண்டைய-கறி சமைத்துள்ளார்கள்.மேற்கு தில்லி பகுதியில் அமைந்த பண்டைய கி மு 3000 ஆண்டை சேர்ந்த சிந்து வெளி நாகரிக நகரமான பார்மான[Farmana]வில் தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பின் பல்லையும் சமையல்
பானையில் ஒட்டியிருந்த எச்சங்களையும் பரிசோதித்ததில்,தொல்பொருள் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் மஞ்சள்,இஞ்சிக்கான அடையாளத்தை கண்டுள்ளார்கள்.வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம்,வான்கூவர், அமெரிக்காவின்,தொல்பொருள் ஆய்வாளரான அருனிமா காஷ்யப்[Arunima Kashyap] அவர்களும்,ஸ்டீவ் வெபரும்[Steve Weber] சேர்ந்து இந்த முன்னைய கறியை கண்டு பிடித்தனர்.அவர்கள் மேலும் பகுதியாக எரிந்த பூண்டு உள்ளியும் அங்கு கண்டார்கள்.மற்றும் ஒரு சான்றாக,இஞ்சியும் மஞ்சளும், ஹரப்பாவில் தோண்டி எடுக்கப்பட்ட மாட்டின் பல்லிலும் கண்டனர்.கால் நடைகள் ஏன் கறி மாதிரி ஒரு உணவை உண்டான என்பது சரியாக புரியாவிட்டாலும்,ஸ்டீவ் வெபர் அதற்கு ஒரு நியாயம் கற்பிக்கிறார். இன்றும் இந்த பகுதிகளிலும் மற்றும் இதர பகுதிகளிலும் மக்கள் தாம்
சாப்பிட்ட உணவின் மிகுதியை தமது வீட்டிற்கு வெளியே அங்கும் இங்குமாக   திரியும் மாடுகளுக்கு போடுகின்றனர்.அது போல முன்பும் நடந்து இருக்கலாம் என்கிறர்.ஹரப்பன் இடிபாடுகளில் வீட்டுக் கோழி அங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.இது ஒரு வேளை,அங்கு கண்டு பிடித்த தந்தூரி போன்ற அடுப்பில் சமைக்கப்பட்டு இருக்கலாம்.சோறு இல்லாமல் கறியா என்று நீங்கள் ஜோசிக்கலாம்?அப்படித்தான் பல தொல்பொருள் ஆய்வாளர்கள் நினைத்தார்கள்.சிந்து வெளி மக்கள் ஓர் சில தானியங்களுக்கு மட்டும்-அதிகமாக கோதுமை,பார்லி போன்றவைக்கு மட்டும் கட்டுப் பட்டு இருந்ததாகவே கருதினர்.ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தொல் பொருள் ஆய்வாளர் ஜெனிபர் பேட்ஸ்[Jennifer Bates] இதை மாற்றி அமைத்துள்ளார்.அவர் இந்தியா-பிரித்தானியா கூட்டு குழுவுடன் சேர்ந்து,மேற்கு தில்லி பகுதியில் ஆய்வு செய்யும் போது,அங்கு சிந்து வெளி மக்கள் அரிசி,பயறு,பாசிப் பயறு உட்பட பல தானியங்கள் பயிரிட்டது தெரிய வந்தது.ஆகவே கறி உலகின் மிகவும் பிரபலமான உணவு மட்டும் இன்றி,அது மிகப் பழைய தொடர்ந்து பாவனையில் இருக்கும் ஒரு உணவும் ஆகும்.
நீங்கள் ஒரு பாரம்பரிய தமிழ் அல்லது இந்திய மதிய அல்லது இரவு உணவு ஒன்றை சாப்பிடுகிறீர்கள் என்றால் அங்கு கட்டாயம் இஞ்சி,மஞ்சள்,பருப்பு இருக்கும்.அத்துடன் சோறு அல்லது தினையும் அதிகமாக முடிவில் வாழைப்பழமும் இருக்கும்.அப்படியானால்,நாம் இன்று சாப்பிடும் உணவு,எம் முதாதையர் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட உணவிற்கும் பெரும் வேறுபாடு கிடையாது எனலாம்.
 பகுதி/PART :13 தொடரும்/WILL FOLLOW

No comments:

Post a Comment