தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:10


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
உலகின் முதலாவது சமையல் புத்தகம் என கருதப்படும்,மது தெய்வம்- நின்காசியை துதித்துப் போற்றும் சிறப்பு மிக்க பாடல்,தனது வர்ணனையை இப்படி தொடர்கிறது:

".......நின்காசி,நியே பிசைந்த மாவை[dough] ஒரு பெரிய மண்வாரி[shovel] மூலம் குழியில் ஒன்று சேர்க்கிறாய்-பார்லி ரொட்டியையும்[bappir] தேனையும்-நின்காசி,நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக்கிறாய்-உமி தானியங்களை[hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து-நியே பார்லி முளைதானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்-அங்கு பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது-நின்காசி,நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்-அலைகள் ஏறுகின்றன,அலைகள் இறங்குகின்றன-நின்காசி,நியே சமைத்த கூழாகிய களியை[cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்-சூடு தணிகிறது,குளிர்ச்சி வெற்றி கொள்கிறது-நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை[great sweet wort] வைத்து இருக்கிறாய்-அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்-நின்காசி,வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது-நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில்[ large collector vat] சரியாக வைக்கிறாய்...  " 

மேலும் இந்த பாடலில் இரண்டாவது வரியில் குறிக்கப்பட்ட தேன்,அதிகமாக
பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? என பொதுவாக கருதப்படுகிறது.வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்பட்டு இருக்கலாம்?.மேலும் இந்த பியர் மது வடித்தலின் போது சேர்க்கப்பட்ட சுமேரியரின் இரு தடவை வேகவைத்த பார்லி ரொட்டி அல்லது "பப்பிர்"[bappir] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை  நிறைவேற்றுகிறது.ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது.மற்றது அரைத்தலுக்கான புரதத்தையும்,பியர் மது பானத்திற்கு சுவையையும் தருகிறது,எட்டாவது வரியில் வரும் அலைகள் ஏறி இறங்குகின்றன என்ற அசைவு-மறை முகமாக அங்கு நடைபெற்ற அரைத்தலை குறிக்கலாம்?அத்துடன் மேல் அதிக பார்லி உடன் முளை தானியமும் பப்பிரும் அப்பொழுது சேர்க்கப்பட்டு இருக்கலாம்?அத்துடன் இந்த கடைந்து செய்த மசியல் அதிகமாக சூடாகியும் இருக்கலாம்?.கூழாகிய களியை பாயில் பரப்புவது,உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் உதவி இருக்கலாம்?அது மட்டும் அல்ல,சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால்,நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும்.ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast/புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால் ஆகும்.கடைசியில் வரும்,தேனுடனும் திராட்சை
ரசத்துடனும் வடிக்கிறாய் என்பதில்,கட்டாயம் அது திராட்சை ரசமாக இருக்க முடியாது.ஏனென்றால்,திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்"['yeast'] காணப்படுகிறது.ஆனால் வைனில்[wine] அப்படி அல்ல.அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது.ஆகவே இது திராட்சை ரசமாக இருக்கமுடியாது.அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?மரத்தொட்டி தரும் இன்பமான ஒலி அதிகமாக,சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பியர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?.

அது மட்டும் அல்ல,இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை,"பியர் மதுபான பெண் தெய்வம்[beer goddess]" பெற்றால் என்பதையும் அறிய முடிகிறது.

"நின்காசியே,நியே,வடித்த பியர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய்.அது டைகிரிஸ்,யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது".மற்றது "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும். மேலும் மெசொப்பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது,சாடி ஒன்றில் இருந்து,பியர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.

மெசொப்பொத்தேமியா,நகர்ப்புற உயர் வகுப்பினர் காலையிலும்,அந்தியிலும்
இரண்டு முக்கிய உணவையும்,அத்துடன் இரண்டு சிறிய சிற்றுண்டிகளையும் சேர்த்து மொத்தமாக நாலு வேளை உணவு அருந்தினாலும்,பொது மக்கள்,வேலையாட்கள்,குறிப்பாக விவசாயிகள் அப்படியில்லை.அவர்கள் பொதுவாக இரண்டு வேலை உணவு மட்டுமே அருந்தினார்கள்.மேலும் அவர்கள் சாப்பிடும் போது,இன்றைய முள்ளுக் கரண்டிகளைப் போல-ரொட்டித் துண்டுகளை,பல உணவுகளை கூட்டி எடுக்க அதிகமாக பாவித்தாலும்,பெரும்பாலும் அவர்கள் கைகளாலேயே உணவை எடுத்து உட்கொண்டார்கள்.அது மட்டும் அல்ல,இறைச்சிகள்,எடுத்து உண்பதற்கு ஏற்றவாறு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்பே பரிமாறப்பட்டது.மெசொப்பொத்தேமியா நகரங்கள் முழுவதும் தவறணைகள் இருந்தன,அங்கு வைன்,பியருடன் உணவு பண்டங்களும் கூட இருந்தன.சுமேரியாவில்,பெண்களே பொதுவாக,வீட்டு சமையலுக்கு பொறுப்பாக இருந்தனர்."என் மனைவி திறந்த வெளி ஆண்டவன் சன்னதியில்,என் தாய் ஆற்றங்கரையில்,நான் பசியில் சாகிறேன்!["Since my wife is at the outdoor shrine and my mother is at the river,I shall die at hunger"]-என்ற சுமேரியன் பழமொழி இதை
மேலும்உறுதிப்படுத்துகிறது.அத்துடன்,அரண்மனை,ஆலய உயர் வகுப்பினர் பெரிய விலங்குகளின் மாமிசத்தை உட்கொள்ளுவதை அதிக வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், வேலையாட்களும் விவசாயிகளும் அப்படி இல்லை.மன்னர்கள் இரவில்,விளக்கொளியில் அல்லது பந்த ஒளியில் விருந்துகள்[இது உலகின் முதலாவது மெல்லொளி இரவு விருந்தாக-Twilight Dinner- இருக்கலாம்?] வைத்தார்கள்.இவை கை கழுவுதலுடன் ஆரம்பித்து,கை கழுவுதலுடன் முடிந்தன.மேலும் இந்த விருந்தில்,விருந்தினர் தமது வகுப்புப் படிநிலைப்படி,தமது தொழில்,இனம்,மற்றும் அவர்களின் சமுக பொருளாதார நிலையின் படி,அந்த அந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர்.

சுமேரிய இலக்கியத்தில் ஆண்டவனின் உணவு,ஒரு பிரபலமான உட் பொருளாகவும் உள்ளது.மனிதனின் தேவைகளை ஒத்த தேவைகள் ஆண்டவனுக்கும் உண்டு என்ற நம்பிக்கை மெசொப்பொத்தேமியரிடம் காணப்பட்டன.ஆண்டவனுக்கு பொதுவாக நாலு வேளை உணவு படைக்கப்பட்டன.பெரிதும் சிறிதுமாக காலையில் இரு உணவும், மீண்டும் பெரிதும் சிறிதுமாக பிற்பகலிலும்,பின்னேரத்திலும் இரு உணவும் படைக்கப்பட்டன.ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் பின் மத குரு படையலை திருப்பி எடுத்து-அப்படி எடுத்த மிச்சத்தை?-அரச குடும்பத்தினருக்கு வழங்கினர்.இதனால் இந்த உயர் வர்க்கத்தினர்கள் நாலு வேளை உணவு முறைக்கு அதிகமாக பழக்கப்பட்டு இருக்கலாம்?.பொதுவாக ஆண்டவன் உணவில்-பானங்கள்,கஞ்சி,ரொட்டி,பியர்,வைன்,தண்ணீர்,போன்றவை எல்லா நாலு வேளை படையல் உணவுடனும் சேர்க்கப்பட்டன. பால் அதிகமாக காலையில் மட்டுமே படைக்கப்பட்டன.இவ்வாறே பண்டைய சுமேரியர்களின் உணவு பழக்கங்கள் பொதுவாக காணப்பட்டன என எம்மால் அறிய முடிகிறது.

பகுதி:11 தொடரும்

1 comments:

  1. ஆண்டவன் உணவில்-பானங்கள்,கஞ்சி,ரொட்டி,பியர்,வைன்,தண்ணீர்,போன்றவை எல்லா நாலு வேளை படையல் உணவுடனும் சேர்க்கப்பட்டன.

    ReplyDelete