ஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்

                                         (Tamil Short Story)


வழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை  இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதிக் காற்றினை சுவாசிக்க ஆரம்பித்திருந்தார் கனகர்.

 

குசினிக்குள் சமைத்துக்கொண்டிருக்கும் தன் மனைவி கனகம்மாவை  அடிக்கொரு தடவை கனகர் எட்டிப் பார்த்துகொண்டது  காரணம் இல்லாமலில்லை.

''கனகம்அப்ப வாசிகசாலைக்கு போயிட்டு வரட்டே?''

கனகருக்கு அங்குபோய் ஒருமுறை அங்கு போடப்படும் பத்திரிக்கைகளையும் வாசித்து, அங்கு வரும்  நண்பன் தியாகரோடும் இருந்து, நாலு விதமான அரசியலையும் அலசி ஆராய்ந்து கொள்வதில் ஒரு அலாதிப் பிரியம்அவருக்கு.  கனகம்மாவின் மதிய சமையலின் தாமதம்  எங்கே தன் சந்திப்பினை தாமதப்படுத்திவிடுமோ என்ற பயம் . எனவேதான் அமளியாகச் சமைத்துகொண்டிருந்த  கனகம்மாவிடம் தன்  சொல் அம்பினை ஒருமுறை அன்பாக ஏவி ஞாபகப் படுத்திக்கொண்டார் கனகர்.

 

''கொஞ்சம் பொறுங்கோ, சமையல் முடியுது, சாப்பிட்டுவிட்டுப் போங்கோ'' என்ற கனகம்மா, 'இந்த மனுசனுக்குப் பொறுமையில்லை. எப்பவும்  அவசரம்தான். எதோ ஒவ்வீசுக்கு போறவர்மாதிரி ' என்று தனக்குள்முணுமுணுத்துக்கொண்டாள் கனகம்மா .

 

ஒய்யாரமாக (easy chair) சாய்மனை    நாற்காலியில் படுத்திருந்த கனகருக்கு, தட்டினில் உணவினை போட்டுக் கொண்டுவந்து கொடுத்த கனகம்மா, தானும் ஒரு தட்டில் உணவினை எடுத்துவந்து கனகருக்குப் பக்கத்தில் கதிரையினை இழுத்துப் போட்டுஅதில் இருந்து சாப்பிட்டுக்கொண்டே  தன் பேச்சினை ஆரம்பித்துக்கொண்டாள்.

 

''ஏன் பாருங்கோ, உங்கட கூட்டாளி  தியாகாரின்ர 5 பிள்ளையளும் லண்டனில, நல்லாத்தானே இருக்கினம்?''

 

''ஆர் இல்லையெண்டது''

 

''அந்த மனுஷனுக்கு மனிசியும் இல்லை. 5 மேனவை வெளிநாட்டில 30 வரியமாய் இருந்தும், அந்தாளைக்   கூப்பிட, ஒரு பிள்ளைக்கும் முடியயேலையோ?''

 

''கூப்பிட முடியாதாக்கும்'' என்று சமாளித்துக்கொண்டார் கனகர்.

 

ஆனால் கனகம்மா விடவில்லை ,தொடர்ந்தாள்.

 

''இஞ்சாருங்கோ, நியாயத்தை சொல்லுங்கோ!   4 மேனவையும்  கலியாணம்கட்டின  மனுசி மாரின்ர  தாய் தகப்பன் போகமுடிஞ்ச லண்டனுக்கு, இவங்களின்ர தகப்பன் போகமுடியாதோ? சொல்லுங்கோ பார்ப்பம்!!''

 

பதில் கூறமுடியாத கனகர், வாயில் வைத்த உணவினை முழுவதும் விழுங்கியவாறேசிறு புன்னகையை மட்டும்  கனகம்மா மேல் உதிர்ந்து கொண்டார்.

 

''கேட்டியலே ,அவங்கள் எல்லாரும்  காசுப் பிசாசுகளாம். அங்க கூப்பிட்டால் பவுணிலை சிலவு எண்டுதான்அந்த இந்தச்  சாட்டுச்  சொல்லி, அந்த மனுஷனை இங்க அனாதையா அலைய விட்டிருக்கிறான்கள் எண்டு ஆக்கள் பேசுகினம்.''

 

உணவை முடித்ததும் அவசரம் அவசரமாக வாசிகசாலை நோக்கிப்  புறப்பட்ட கனகரின் நெஞ்சினில், கனகம் கூறிய வரிகள் மீண்டும் மீண்டும் ஒலித்து அவர் நெஞ்சினில் பாரத்தினை கொடுத்துக் கொண்டிருந்தது.

 

''எப்படி வாழ்ந்த உலகம் எப்படி மாறிவிட்டது. பாசத்துடன்  கூடி வாழ்ந்த  அன்றய ஊரும் , காசோடு சாகும் இன்றய உலகமும், ......! எங்களுக்கும் எதிர்காலத்தில் எப்படியோ?'' என்று எண்ணிய அவருக்கு   துக்கம் தொண்டையினை அடைத்துக் கொண்டது.

 

வந்து, வாசிகசாலைக் குந்தில்  குந்திய  கனகர் சுற்றுமுற்றும் பார்த்தார். வழமையில் அவருடன் வந்திருந்து பேசும் தியாகர் அப்பொழுதுதான் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். தியாகரைக் காணும் வேளையில்,     வாசிகசாலையில் வைக்கப்பட்டிருந்த  பாரத்தின்கீழ்   கவனிப்பாரற்று அனாதையாகக் கிடந்து காற்றுக்கு சலசலப்பு சத்தம் கொடுத்துக்கொண்டிருந்த  பத்திரிகைகளையும் கனகரின் கண்கள் அவரை அறியாமலேயே ஒருமுறை சுற்றி வந்தன..தியாகரையும் ,பத்திரிகையையும் மாறி,மாறிப்  பார்த்த கனகரின் மூளை கடுமையாக வேலை செய்தது. அவருக்கு உதித்த ஒரு எண்ணத்தினை தியாகரிடம் வெளிப்படுத்துவது எப்படி என்று தருணம் பார்த்துக் காத்திருந்தார்.


வயதுபோன நேரத்தில், பிள்ளைகளால் அவர் கைவிடப்பட்டநிலையில், அப்பத்திரிகைகளே தியாகருக்கு நல்ல உறவுகளாக இருந்து வந்தன. முதலில் பத்திரிகையின் தலைப்புகளைப் புரட்டிப் படித்தவர்   ''இந்தப் பத்திரிகைகளும் என்னைப்போலதான்'' என்றவாறே  ஒரு பெரு மூச்சு விட்டார் தியாகர்.

 

அந்நேரத்தினை பயன்படுத்திய கனகர் "என்ன தியாகர்  பெருமூச்சு" என்றவாறே  தியாகரின்   அருகில் வந்து குந்திக்கொண்டர். "என்ன தியாகர் பிள்ளயளிண்ட நினைப்பு வந்திட்டு போல."

 

''ம், அதைப் பற்றிப் பேசித்தான் என்ன பிரயோசனம் கனகு'' என்று கூறிய தியாகர் தன் கண்ணாடிகளை கழற்றி ,கண்களை ஒருமுறை துடைத்துக்கொண்டார்.

 

சுற்றும் முற்றும் பார்த்த கனகர்  தொடர்ந்தார்" தியாகு  நீ தப்பாய் நினைக்கேல்லை எண்டா நான் ஒரு ஐடியா சொல்லட்டே?" என்றவரை ஆவலுடன் நிமிர்ந்து பார்த்தார் தியாகர். 


கனகரின் திட்டம்  திறமையாக வேலை செய்தது.

இலண்டனில்  வசிக்கும் தியாகரின் கடைசி   மகன் கல்யாண வயதை எட்டியிருந்தது நல்லதாய் போய்விட்டது. கனகர் கூறியபடி  யுத்தகாலத்தில் பெற்றோர்களை இழந்த ஒரு பெண்ணினை, அவனுக்கு  பார்த்துப்  பேசி மகனது சம்மதத்தையும் பெற்றுக்கொண்டார் தியாகர். திருமணம்  குறிக்கப்பட்ட நாளில் ஊருக்கு வந்து தடல் புடலாய் திருமணத்தை முடித்துக்கொண்டான் தியாகரின் மகன்.

 ஐயாவை இனியும்  ஊரில தனிய விடமுடியாது என்று ஒரு போடு போட்டு, தன் மனுசியுடன் சேர்த்து தியாகரையும் இலண்டனுக்கு  அழைத்துக்கொண்டான் தியாகரின் மகன். 

கனகர் சொன்னது சரியாகவே  நடந்தது. நாலு மகனவையும் தங்கள் தங்கள் மனைவிமாரின் பெற்றோர்களைத்தானே லண்டனுக்கு எடுத்தவர்கள். ஐந்தாவது மகனுக்கு   பெற்றோர் இல்லாத பெண்ணை எடுத்ததால்தான் பிள்ளைகளோடு சென்று வாழும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தையிட்டு, தியாகர் மனதார கனகருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

லண்டன்  மண்ணில் பல தமிழ் முதியோர்கள் வாழுகிறார்கள். தான் மட்டும் வாழமுடியாதா என்று இலண்டன்  வந்த தியாகருக்கு நாட்கள் பல கடந்த பின்னர் மெல்ல மெல்ல ஒன்றுமட்டும் புரிந்தது. தன் உணர்வுகள்,விருப்பங்கள், தேவைகள் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவனது மாளிகைக்கும், மனைவிக்கும் அவனது பிள்ளைக்கும், அவர்களது விருப்பப்படி,   ஒரு   காவற்காரனாக மட்டுமே  வாழ வேண்டியுள்ளது என்பதை மட்டும் உணர்ந்து கொண்டார்.

 

எப்படியோ, பிள்ளைகளின்  அருகில் வாழும் மன நிறைவில் இலண்டனில்  அவரும்  வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்....ஒரு காவற்காரனாக!

-செ.மனுவேந்தன் 












No comments:

Post a Comment