சந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு?


சந்திரனுக்கு 1969 முதல் 1972  வரை ஆறு தடவை சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கு நட்டு வந்த அமெரிக்க தேசியக் கொடிகள் 40 ஆண்டுகள் ஆகியும் அப்படியே தான் இருக்கின்றன.

சந்திரனை இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் வானிலிருந்து எடுத்த படங்கள் இதைக் காட்டுகின்றன. நம்மூரில் பறக்கவிடப்படுகின்ற தேசியக் கொடியாகட்டும் அல்லது கட்சிக் கொடியாகட்டும் இப்படி 40 ஆண்டுகள் தாங்குமா என்பது சந்தேகமே.

அமெரிக்கா 2009 ஆம் ஆண்டில் LRO எனப்படும் (Lunar Reconnaissance Orbiter)     ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரனின் நிலப் பரப்பை விரிவாக அத்துடன் மேலும் துல்லியமாகப் படம் எடுப்பது இந்த விண்கலத்தின் நோக்கமாகும்.சந்திரனுக்கு மறுபடி அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவதென்றால் அதற்கான உகந்த இடங்களைத் தேர்வு செய்வதும் இந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியதன் நோக்கமாகும்.

சந்திரனில் அமெரிக்கக் கொடியை நாட்டிய் பின்
கொடிக்கு வணக்கம் செலுத்தும் விண்வெளி வீரர் ஜான் யங்
இந்த விண்கலம்  சந்திரனில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நாட்டிய கொடிகளின் நிழல்களைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.  1969 ஜூலையில் அப்போலோ 11 விண்கலம் மூலம் சென்று முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங் மற்றும் ஆல்ட்ரின் நாட்டிய கொடியின் நிழல் மட்டும் காணப்படவில்லை.

இந்த இருவரும் சந்திரனில் பணியை முடித்துக் கொண்டு உயரே
கிளம்புகையில் அவர்கள் அமர்ந்திருந்த விண்கலம் நெருப்பைப் பீச்சிட்ட போது அந்த வேகத்தில் கொடி சாய்ந்து விட்டது என்று அப்போதே ஆல்ட்ரின் கூறியிருந்தார். ஆகவே தான் அதன் நிழல் LRO எடுத்த படங்களில் காணப்படவில்லை.

அமெரிக்காவின் LRO விண்கலத்தில் இடம் பெற்றுள்ள கேமராவுக்குப் பொறுப்பான தலமை விஞ்ஞானி டாக்டர் மார்க் ராபின்சன் கூறுகையில் இந்த விண்கலம் எடுத்த படங்கள் அப்போலோ 11 விண்வெளி வீரர்கள் நாட்டிய கொடி நீங்கலாக மற்ற ஐந்து குழுவினரும் நாட்டிய கொடிகள் நிலையாக  நிற்கின்றன என்பதைக் காட்டுகின்றன என்றார்.

சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் எடுத்துச் சென்ற கொடிகளில் விசேஷ ஏற்பாடு பின்பற்றப்பட்டது. சந்திரனில் காற்று கிடையாது என்பதால் அது அசைந்தாடிபட்டொளிவீச வழியில்லை. எனவே கொடியின் மேற்புறத்தில் நீள வாட்டில் ஒரு கம்பி பொருத்தப்ப்ட்டது. கொடியின் கீழ்ப்புறத்திலும் அதே போல கம்பி கொடுக்கப்பட்டது.கொடி தொங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு பின்பற்றப்பட்டது.

சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கும் LRO விண்கலம்
அமெரிக்க விண்வெளி வீரர்கள்நாட்டிய  கொடிகள் நைந்து போய் விட்டனவா சந்திரனில்  வீசும் கடும் வெயில் காரணமாக வெளிறிப் போய் விட்ட்னவா என்பது தெரியவில்லை.LRO  எடுத்த படங்களில் கொடிகளின் நிழல் சந்திரனின் தரையில் விழுவது நன்கு பதிவாகியிருக்கிறது. இதிலிருந்து கொடிகள் நட்டது நட்டபடி உள்ளன என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி  சந்திரனில் காற்று கிடையாது. மழை கிடையாது. நுண்ணுயிர்களும் கிடையாது. பூமியிலோ ஒரு குப்பை மேட்டில் சாக்கு வீசி எறியப்பட்டால் சில மாதங்களில் அது நைந்து போய் விடும். நுண்ணுயிர்கள் அதை சிதைத்து  துண்டு துண்டாக்கி விடும். பின்னர் பார்த்தால் சாக்கு மண்ணோடு மணணாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

 பூமியுடன் ஒப்பிட்டால் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் சந்திரனைக் கடுமையாகத் தாக்குகின்றன. பூமியின் காற்று மண்டலம் சூரியனின் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் த்ரைக்கு வந்து சேராதபடி தடுத்து விடுகின்றன.

ஆகவே விண்வெளி வீரர்கள் நட்ட கொடிகள் எவ்விதம் புற ஊதாக் கதிர்களைத் தாங்கி நிற்கின்றன என்பதும் சந்திரனில் வீசும் கடும் வெயிலையும் தாங்கி நிற்கின்றன என்பது புதிராக உள்ளது என்று மார்க் ராபின்சன் கூறியுள்ளார்.

சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் அங்கு அமெரிக்க தேசியக் கொடியை நாட்டியதில் ஒரு சுவையான விஷயம் உள்ளது. இவர்கள் எடுத்துச் செல்வதற்காக நாஸா அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு இக்கொடியை வடிவமைத்து தயார் செயதது. இதற்குப் பொறுப்பான  டாம் மோசரிடம் இந்த விஷயம் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டது.

காரணம் இது தான். சந்திரன் மீது எந்த நாடும் உரிமை கோரக்கூடாது என்று  சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது. ஆகவே சந்திரனுக்குச் செல்லும் குழுவினர் அமெரிக்க தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் விஷயம் வெளியே தெரிந்தால் சந்திரனில் அமெரிக்க தேசியக் கொடியை நாட்டக்கூடாது என உலகில் பல நாடுகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சந்திரனுக்கு ஆறு தடவை சென்ற குழுவினர் ஒவ்வொரு தடவையும் அமெரிக்கக் கொடியை சந்திரனில் நாட்டியதற்கு பெரிதாக் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை.

மனித குலத்தின் சார்பாகவே இவ்விதம் அமெரிக்கக் கொடி நடப்பட்டதாகப் பின்னர் அமெரிக்கா விளக்கம் கூறியது. அப்படியானால் மனித குலத்தின் அடையாளமாக . நா கொடியை அல்லவா சந்திரனில் நாட்டியிருக்க வேண்டும் என்று பின்னர் ஒரு சமயம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அக்கேள்விக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

1 comment:

  1. 1969 ஜூலையில் அப்போலோ 11 விண்கலம் மூலம் சென்று முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங் மற்றும் ஆல்ட்ரின் நாட்டிய கொடியின் நிழல் மட்டும் காணப்படவில்லை.

    இந்த இருவரும் சந்திரனில் பணியை முடித்துக் கொண்டு உயரே

    கிளம்புகையில் அவர்கள் அமர்ந்திருந்த விண்கலம் நெருப்பைப் பீச்சிட்ட போது அந்த வேகத்தில் கொடி சாய்ந்து விட்டது என்று அப்போதே ஆல்ட்ரின் கூறியிருந்தார். ஆகவே தான் அதன் நிழல் LRO எடுத்த படங்களில் காணப்படவில்லை.
    இதற்க்கு உண்மையான காரணம் என்னவென்று இந்த கண்ணொளியை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
    DID WE LAND ON THE MOON?
    https://www.youtube.com/watch?v=ybJMuowl0UU

    ReplyDelete