[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
பேராசிரியர் வரங்ஹத்தின்[ Professor Wrangham] கூற்றின் படி,ஆதி மனிதன் எப்படி சமைப்பது என்பதை கற்றுக்கொண்டது,எமது குடலை சிறிதாக்கியது.நாம் எமது உணவை சமைத்ததும்,சமிபாடு நிகழ,பெரிய குடல் அவசியம் இல்லாமல் போய்விட்டது.எமது இந்த ஜீரண[செரிமான] அமைப்பின் மாற்றம் எமது மூளை பெரிதாக உதவியது.சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட சமை என்ற வினைச் சொல்லுடன் தொடர்புடைய
சொல்லாகும்.குறுகிய பொருளில் இது,உணவுப்பொருளின் சுவை,தோற்றம்,ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன் படுத்தி மாற்றுவதாகும்.கிரிஸ் ஓர்கன்,சார்லஸ் நுன்,சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் வரங்ஹம்[Chris Organ,Charles Nunn,Zarin Machanda,
and Richard Wrangham] ஆகிய ஆய்வாளர்கள்,சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர்.சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்பின் முக்கிய அம்சம் என வரங்ஹம் முன்வைக்கின்றனர்.நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு,துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன.இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப்படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன.உணவுப் பண்டத்தை முதன்முதலாக வாயில் கடிக்கும்போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது.வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறுசிறு உருண்டைகளாகிறது.இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப்படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன.இங்குதான் உணவு பெருமளவு செரிமானமடைகிறது.குடலில் இருக்கும் பல நுண்ணுயிர்கள் (சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு[cells/உயிரணு] ஆற்றலை விநியோகிக்கிறது.ஆகவே சமைத்த உணவை சாப்பிடும் போது, ஊட்டக்கூறுகளை அல்லது போசாக்கை விடுவிக்க எமது வயிறு பெரிதாக வேலை செய்யத் தேவையில்லை.ஆகவே மூளைக்கு சக்தி கொடுக்க அங்கு நிறைய சக்தி இருந்தது.மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது.மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது.மேலும் சமத்த உணவு கூடிய ஆற்றலை விடுவிப்பதுடன்,அதை ஜீரணிக்க குறைந்த ஆற்றலையே உடம்பு பாவிக்கிறது,அது மட்டும் அல்ல,சமையல் செய்து சாப்பிடும் ஒரு பிராணி,பூமியின் அதி உன்னத புத்திசாலி உயிர் இனமான மனிதன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
பண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடைமுறைகளில் இருந்தும் ஒரு
அறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள்,எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர்.ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக,மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன,எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள்.மேலும் ஒரு உணவு அது உட்கொண்டபின் நோயை உண்டாக்கினால்,அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள்.இப்படியான சோதனை மற்றும் பிழை[trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர்.எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக-திரும்பவும் சோதனை மற்றும் பிழை அடிப்படையில்-தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது உதாரணமாக இறைச்சி பதப்படுத்தப்பட்டது,கொட்டைகள்
வீட்டுவளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை,பார்லி,அரிசி,தினை,கம்பு,உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது.ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர்-ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும்.ஆனால்,சமைத்தபின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன.ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியதுதான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும்.அத்துடன் இது மேம்படுத்தப்பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது.உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என- நாம் முன்பு குறிப்பிட்டவாறு-கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும்.
பகுதி :07 தொடரும்
No comments:
Post a Comment