என்ன
இது? உயிருடன் இருந்து கொண்டு இப்படி ஒரு குதர்க்கமான கேள்வி என்று என்று எண்ணுகின்றீர்களா?
நான்
கூறுவது, நாம் உயிரோடு நடமாடித் திரிவதற்கு மூலமாக இருக்கும் 'ஆன்மா' எனப்படும் அந்த
மகா சக்தி உண்மையில் நமக்குள் இருக்கின்றதா? இருந்தால் அது எங்கு இருக்கின்றது? அதை
உருவாக்க இயலுமா? என்பதுதான்!
ஞானிகளும், யோகிகளும் கூறுவார்கள், ஆன்மா உன் உள்ளேயே
உறைவது; அழியாதது; அநாதியானது. அதைப் பார்க்க, கேட்க, நினைக்க, அறிய இயலாது. அதுமட்டுமே
உன்னைப் பார்க்க, கேட்க, நினைக்க, அறிய வல்லது என்று.
இந்து
மதம் கூறுகின்றது, ஆன்மாவானது, பரம்பொருளில் இருந்து தோன்றி, கர்ம வினையறுக்கும் பல
பிறவிகள் எடுத்து, மோட்சம் பெற்று, முடிவில் இறைவனுடன் முடிவில்லாப் பேரானந்தத்தில்
மூழ்கி இருக்கும் என்று.
ஆபிரகாமிச்
சமயங்கள், ஆன்மா இறைவனில் இருந்து
மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு, இறந்தபின், இளைப்பாறுதல்
காலத்தின்பின்னர் நியாயத் தீர்ப்பு நாளில் உடலோடு இணைக்கப்பட்டு, சொர்க்கம் அல்லது
நரகம் என்று ஒன்றுக்கு அனுப்பப்படும் என்று கூறுகின்றன.
2400
வருடங்களுக்கு முன்னர், சோகிரடிஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, ஆன்மா என்று ஒன்று எதோ
இருக்கின்றது; அதுதான் நம்மைப் பகுத்தறிய வைக்கின்றது; ஆனால், அதை நம் ஐம்புலன்களால்
அறியமுடியாது என்றார்.
சரி,
ஆன்மாவைக் காணவே இயலாது; பகுத்தறிய முனைவோருக்கு, நவீன கதிரியக்க, நனோ தொழில் நுட்பங்களால்
ஏற்படுத்தக் கூடிய நிழலுருவங்களாகவோ அல்லது ரேடியோ, காந்த, மின் காந்த அலை வடிவங்களாகவோ
காட்டி, நிறுவி நிலைப்படுத்த முடியாத ஒரு பொருளாகவே இந்த ஆன்மா இருக்கின்றது.
ஒன்றை, 'உண்மை' என்று விஞ்ஞான பூர்வமாக நிறுவும்வரை
பகுத்தறிய விரும்புவோர் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேபோல, ஒன்று ,
'இல்லை' என்பதும் ஆதாரபூர்வமாக நிறுவப்படும்வரை அதை 'இல்லை' என்று ஒதிக்கி வைப்பதும்
பகுத்தறிவுத்தனம் என்று கூற இயலாது. ஏனென்றால், இன்று உண்மை என்று நினைத்தது நாளை பொய்
ஆகலாம்; பொய் என்று நம்பி இருந்தது நாளைக்கே உண்மையானதும் ஆகலாம்.
மனிதன் தன்னால் விளங்கிக்கொள்ள, உருவாக்கிக்கொள்ள,
கண்டுகொள்ள முடியாத எந்த விடயத்தையும், தனக்கு இஷ்டமான கடவுள் ஒருவரை உருவாக்கி, இது
அவரால்தான் முடியும்; நம்மால் இயலாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுவான். இவ்வாறே,
ஆன்மாவையும் கடவுளின் சிருஷ்டி என்று என்று சிந்தனைக்கு எட்டா நிலைக்கு தள்ளி வைத்துவிட்டான்.
மனிதன்
தன் சிந்தனைச் சக்தியை உபயோகிக்காது இருந்திருந்தால், பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றும்
இன்றி, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அடர்ந்த உரோமமும், ஆந்தை விழிகளும், முதலைப்
பற்களும், கூரிய நகங்களும் கொண்ட, வன ஜெந்துக்களாக காட்டு மரங்கள், செடிகள், புதர்களுக்கு
இடையில் இன்னமும் பதுங்கிக் கொண்டு இருந்திருப்பான்.
மனிதனின்
மூளை, காலம் காலமாக கூடிய சக்தியையும், கொள்திறனையும் கொண்டதாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டு
போய்க்கொண்டே இருக்கின்றது. (உதாரணம்: நமது கணணி போலவே! ஓர் 25 வருடத்துக்கு
முன்னர்
40 Mb மிகவும் சக்தி வாய்ந்தது என்று
நினைத்தோம்; இப்போது 1000 Mb என்பது படு சாதாரணம்).
நமது மூளையானது மிக, மிக அபார சக்தி வாய்ந்தது. ஆனால், இன்னமும் மூளையின் ஓர் அற்ப
10% க்கும் குறைவான பகுதியைத்தான், மிக புத்திசாலி என்று கொள்ளப்படும் நாம், அன்றாட
தொழில் நுட்பங்களிடையே உபயோகித்துக் கொண்டு இருக்கின்றோம்.
பழைய
காலத்திலே, மந்தமான மூளைத்திறனுடன்தான் மக்கள் இருந்தனர். அந்த மந்தமூளையின் 2% பகுதியையே
எல்லோரும் தங்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு உபயோகித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, தற்செயலாக
ஒருவர், பிறப்பினாலோ அல்லது தியானப் பயிற்சியினாலோ ஒரு கூடிய 4-5% மான மூளைத்திறன்
(அதாவது அப்போதைய மூளையின் 4-5%) கிடைக்கப்பெற்று, அதை உபயோகித்துப் பேசத் தொடகியதும்
உடனே அவரை கடவுள் என்றும், கடவுளின் மைந்தன், தூதுவன், அவதாரம் என்றும் வணங்கி, அவர்
உதிரும் வார்த்தைகள் எல்லாம் தேவ வாக்கியம் என்று கண்மூடிக்கொண்டு நமபத் தொடங்கி விடுவார்கள்.
இப்படியானவர்களால் உருவாகப் பட்டதுதான் இந்த ஆன்மாக் கதைகளும்.
தற்போதைய ‘10%’ மனிதனுக்கு (பழைய அலகில் 100 மடங்கு?)
இந்த ஆன்மாவை அறிய இயலவே இயலாது என்பது உண்மைதான். என்றாலும், ஆன்மாவை ஓரளவுக்கு அறிய
இன்னும் ஒரு 10% ஆவது மூளையில் இருந்து தேவைப்படும். (எல்லாம் ஓர் அனுமானம்தான்!).
கடைசியில், ஆன்மா ஒன்றைப் புதிதாக உருவாக்குவதற்கு மேலும் ஓர் 50% மூளையாவது தேவைப்படும்
என்பதுதான் எனது கருத்து. அத்தருணத்தில், மனிதன் புதிய ஆன்மாக்களை உருவாகுவதன்மூலம்
பிடித்தமான வெவ்வேறு உயிரினங்களை - மனித இனம் உட்பட- உருவாக்கத் தொடங்கிவிடுவான்.
ஆன்மாவைப்
புதிதாக உருவாக்குவதா? என்ன, பிதற்றல் என்றா தோன்றுகிறது? அப்படி அல்ல! மிக விரைவில்
மனிதன், ஆன்மா என்றால் என்ன, எப்படிப்பட்டது, அதை உருவாக்குவது எப்படி என்று கண்டுபிடிக்கும்
அணுகுமுறையில்
முன்னேறிக் கொண்டு இருக்கின்றான் என்று காட்டுவதற்கு ஒப்புமைகள் சிலவற்றைப் பரிசீலிப்போம்.
மனிதனின்
உடம்பு ஒக்சிசன், கார்பன், ஐதரசன். நைதரசன், கல்சியம், பொஸ்பரஸ் எனப் பல தனிமங்களால்
உருவானது. இவ்வுடம்பினுள்ளே வெவ்வேறு தொழில்கள் செய்யவல்ல பல்வேறு உறுப்புகள் உள்ளன.
இவ்வுறுப்புகள் எல்லாம் பிழைவிடாமல் தொடர்ந்து கூட்டாக இயங்கிக் கொண்டு இருந்தால்தான்
இந்த உடம்பு 'உயிரோடு' இருக்கும். இந்த உறுப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பவர்
திருவாளர் 'மூளை' தான்.
இந்த மூளையை நான்தான் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும்.
உறுப்புகள் எல்லாம் செவ்வனே தொழில்பட அதற்குத் தேவையான சக்தியினைத் தவறாது கொடுத்துக்
கொண்டு இருக்க வேண்டும். அதற்காக, உணவு, நீர், காற்று, பராமரிப்பு என்பன வழங்கப்பட,
அவை சரியான விதத்தில் பதப்படுத்தப்பட்டுச் சக்தியாக மாற்றப்பட்டு, உறுப்புகள் ஊடே பாய்ச்சப்பட்டு
இயங்க வழி செய்கிறது. மூளையானது பழுது பட்டாலோ, கடுமையான போதைப் பொருள் நுகர்வினால்
மயங்கிப் போனாலோ உறுப்புகள் எல்லாம் பிரஜோசனம் இல்லாதவைகளாக மாறிவிடும். இந்த மூளையின்
உதவியோடு உடம்பை 'உயிரோடு' தொடர்ந்து வைத்திருக்கும் அந்த' நான்' தான் 'ஆன்மா' என்று
வைத்துக் கொள்ளலாம்.அந்த 'நான்' என்ற ஆன்மா உடம்பை விட்டு அகன்ற உடனேயே உயிரும் பிரிகின்றது.
இதேபோல,
ஒரு மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டால், இது எம் உடல் போலவே உருக்கு, அலுமினியம்,
மக்னீசியம், கார்பன் எனப் பலவேறு தனிமங்களால் உருவானது. உள்ளே பலவிதமான உறுப்புகள்
வெவ்வேறு தொழில்பாடுகளுக்கு என்று பொருத்தப்பட்டிருக்கின்றன. பெட்ரோல், ஒயில், காற்று,
தண்ணீர், பராமரிப்பு என்பன கொடுக்கப்பட்டு, நான் ஏறி, அல்லது தன்னியக்குக் கருவி மூலம்
முறைப்படி ஓட்டினால், உறுப்புக்களின் கூட்டு இயக்கத்தால் வண்டி சீராக ஓடும். ஏதாவது
உறுப்பு பழுதடைந்தால் வண்டி ஓடாது 'உயிர்' போய் விடும். நான் இறங்கினால் அல்லது த.
இ. கருவியை அகற்றினாலும் உயிர் போய்விடும். இங்கே,
இந்த
வண்டியின் இயக்கம்தான் அதன் 'உயிர்' ஆகும். அதை இயக்கும் நான்தான் அதன் 'ஆன்மா' என்று
கூறலாம்.
இவ்விரு
ஒப்புமைகளிலும் ஒரே விடயம்தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது என்பதை ஏன்தான் ஒப்புக்கொள்ள
முடியாது? ஆன்மீக வாதிகள் கூறுவார்கள், ஏற்கனவே இருக்கும் பொருட்களைக் கொண்டுதான் வண்டி
ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் ஆன்மா அப்படி அல்ல என்று. அது தவறு. ஒன்றை முழுமையாக
விளங்கும்வரை அது காட்டப்பட முடியாத ஒன்றாகத்தான் இருக்கும். இன்னமும், எங்களுக்கு
அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லலாம் என்பதுதான் உண்மை.
தொலைவில்
இருக்கும் ஒருவருடன் எங்கு நின்றும் -அண்டவெளி உட்பட- நேரில் பார்த்துக் கதைக்கக் கடவுளால்தான்
முடியும் என்று இருந்த காலம் போய்விட்டது. இப்பொழுது நம்மாலும் முடியும். வெகு விரைவில்,
முப்பரிமாண உருவ நிழலே எங்கள் முன் திரையில், பின்னர் நேரிலும் நின்று கதைக்கும் வசதி
வரும். அதன் பின்னர், சாட்சாத் உங்கள் அன்புக்குரியவர்கள் அங்கே மறைந்து, இங்கே தோன்றி,
உங்களுடன் இருந்துவிட்டுத் திரும்பவும் போகவல்ல தொழில் நுட்பம் வந்துவிடும் என்பதில்
சந்தேகமே இல்லை.
இவ்வசதிகள்
காலம், காலமாய் இருந்திருந்தும், மனிதனால் கண்டு பிடிக்கப்படவில்லையே ஒழிய அது இல்லாமலோ,
முடியாமலோ இருந்ததில்லை.
ஆன்மாவோ,
எது ஒன்றோ இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், அது என்ன வழியில், என்ன பொருளால்
'செய்ய'ப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க, ஏற்ற தொழில் நுட்ப சாதனம் ஒன்றும் இன்னமும்
எங்களால் கண்டுபிடிக்கப் படவில்லையே ஒழிய, வேறொன்றும் அங்கு ஒன்றும் பெரிய இடத்து விடயம்
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
மனிதன்,
ஆன்மாவை உருவாக்கத் தெரிந்ததும் தன்னிலும் சக்திவாய்ந்த மனிதரைப் படைப்பான். அம்மனிதர்
மேலும் சக்திவாய்ந்த சூப்பர் மனிதரைப் படைக்க, அவர்களும் இன்னும் கூடிய மகா சக்தி வாய்ந்த
சூரர்களைப் படைக்க.....
அப்பப்பா...
கடவுளே கதிகலங்கப் போகின்றார் என்றால் பாருங்களேன்!
எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்தான்.அதற்கும் காலம் கைகொடுக்காதே!
ReplyDeleteஏதோ ஒரு பெரிய சக்தி ஒன்று இருப்பதால்தானே அண்டம் எல்லாம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த வளர்ச்சிகள், முன்னேற்றங்கள் எல்லாமே இறைவனின் செயல்தான். ஆன்மாவும் அவன் செயல்தான்; அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
ReplyDelete