பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் கட்டுரை]

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம்  வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான்.

இருந்தாலும்,  அன்றும், இன்றும் [புலம்பெயர்ந்து வளர்ந்த நாடுகளில் வாழ்வோர்கூட]பிள்ளைகளின் சில விடயங்களில் பெற்றோரின் அளவுக்கு அதிக கவனங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு  தடங்கலாக நடந்து கொள்வது அவதானிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.அவையாவன:
  1.குழந்தைகள் பேச ஆரம்பித்தும்,அவர்கள் காணும் காட்சிகளினை  வைத்து கேட்கும் கேள்விகள் கொஞ்சம் துடுக்குத்தனமாகவே இருக்கும்.அதற்கு உங்கள் பதில் புத்திசாலித்தனமாகவும்,பிள்ளையின் அறிவினை வளர்க்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
-ஆனால் எமது பெற்றோர்கள் என்ன கேள்வியிது என பிள்ளையின் வாயை மூடும் அளவிற்கு அதட்டி,உரப்பி அப்பிள்ளையின் வாய்க்கு  மட்டுமல்ல அப்பிள்ளையின் சுயசிந்தனை  வளர்ச்சிக்கும் சேர்த்துப்பூட்டுப் போட்டுவிடுகிறார்கள்.
  2.வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளுக்கு தேவையான சாதனங்களைமட்டும் குறிப்பிட்ட காலத்திற் கொருதடவை வாங்கிக் கொடுங்கள்.
-ஆனால் எமது பெற்றோர் ஒரு ''game'புதிதாக வருகிறது எனில் பிள்ளை கேட்கமுதலே அதனை வாங்கிவந்து அதன் பொறுமையினை பூச்சியமாக்கிக் கொள்வர்.
  3.பிள்ளைகளின் சுட்டித்தனங்களின்போது அவற்றினை பொறுத்துக்கொள்ள ப்பழகுங்கள்.
ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகள் ஏறினாலும் ,குற்றம், இறங்கினாலும் குற்றம் கூறி பய உணர்வுகளையும்,கூச்ச உணர்வுகளையும் பிள்ளையிடம் வளர்த்துவிடுகிரார்கள்.
  4.ஆரம்பக் கல்விக்காக ஆரம்பிக்கும் பிள்ளைகளுக்கான [அநேகமாக அருகில் அமைந்திருக்கும்]  பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது, பிள்ளைகளை சுதந்திரமாக நடந்துசெல்ல அனுமதியுங்கள். இங்கே பிள்ளைகள் நடந்து செல்கின்றபோழுது  பாதையில் சுய கவனத்தினை கற்றுக் கொள்ள முடிகிறது. 
-ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளை ஒருகையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குடுகுடு வென்று இழுத்துக்கொண்டு பாடசாலை செல்வதன் மூலம் பிள்ளைகளின் கவனக்குறைவுக்கு காரணமாகிறார்கள்.
  5.கல்விக்கான வீட்டு வேலைகளோ,அல்லது அவர்களுடைய அன்றாட கடமைகளிலும் தேவைக்கு அதிகமாகத் தலையிடுவதனை தவிர்ப்பதன் மூலம்  பிள்ளைகளினது பிரச்சைனகளுக்கான தீர்வை தானாக கண்டுபிடிக்கும்  அல்லது துணிந்து முடிவெடுக்கும் திறமையினை பிள்ளைகள் பெற்றுவிடுகிறார்கள்.
-ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளின் மேற்படி விடயங்களில் அதிக தலையீடுகளையே கொண்டுள்ளார்கள்.
  6.ஆரம்பக் கல்விக் காலத்திலேயே அவர்களின் புத்தகப் பையையும் அவர்களே சுமந்துகொண்டு செல்லப் பழக விடுங்கள்.இதன்மூலம் பிள்ளைகளிடம் அவர்களுக்கென்றும் சில சொந்த சுமைகள் என்ற பொறுப்புணர்வு சிறுவயதினிலேயே உருவாக வழி கொடுங்கள்.
-ஆனால் எமது பெற்றோர்கள் மறுகையில் பிள்ளையின் புத்தகப்பையினை தாங்கிச் செல்வதன்மூலம்,பிள்ளைக்கு எல்லாக் காலத்திலும், எல்லாத்தேவைகளுக்கும் ஒரு எடுபிடி தேவை என்பதினை நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள்.இப்பழக்கம் பெற்றோரின் வயதுபோன காலத்திலும் பிள்ளையினால்  பேணப்படும்போது பெற்றோர் மனம்நோக வேண்டிவரும். 
       7.பிள்ளைகள் பரீட்சையில் எடுக்கும் புள்ளிகள் குறித்து அவர்களைப் பாராட்டி இன்னும் முயற்சிபன்ணினால் அடுத்தமுறை இன்னும் கூடப் புள்ளிகள் எடுக்கலாம் எண்டு  ஊக்குவியுங்கள்.


-ஆனால் எமது பெற்றோர்கள் பரீட்சையில் பிள்ளை 99 எடுத்தாலும் ஏன் 100 எடுக்கவில்லை என்று கடிந்து பிள்ளைக்கு ஏமாற்றத்தினை வழங்குகிறார்கள்.
     8 பல்கலைக்கழகம் நுழைவதற்கான கல்வி தெரிவு செய்யும் விடயத்தை பிள்ளையின் கையிலே விட்டுவிடுங்கள்.வளர்ந்த நாடுகளில் அதனைத் தெரிவுசெய்ய அவர்களுக்குதவியாக அவர்கள் கற்கும் பாடசாலையிலேயே இதற்கென வழிகாட்டி ஆசிரியர்கள் சேவைசெய்ய முழுமனதுடன் காத்திருக்கிறார்கள்.
-ஆனால்பிள்ளையின் கல்வி தெரிவுசெய்யும் களத்திலேயே  எமது பெற்றோர்கள் குதித்துடுவர்.அம்மா 'டொக்டர்' என அப்பா 'என்ஜினியர் 'என வீடே போர்க்களமாக, இனியும் படிக்கவேணுமோ என்றே  சிந்திக்குமளவுக்கு பிள்ளை நிலை வந்துவிடும்.
மேலும்,இங்கே நான் அவதானித்துள்ளேன்.பிள்ளைகள் தமிழ் வகுப்புக்களுக்கு காரில் அழைத்து வரும் பெற்றோர்கள் காரை அங்கு நிறுத்தியதும் இறங்கி ஓடிவந்து கதவைத்திறந்து ஒருகையினால்  பிள்ளையின் கையினைப்  பிடித்து இறக்கிக்கொண்டு,மறுகையினால் பிள்ளையின் புத்தகப் பையினை எடுத்துக் காவிக்கொண்டும் செல்வர்.
இச்செயலெல்லாம் ஏன்?
அத்துடன்,கடன்காரர்களாக புலம்பெயர்ந்து கால்பதித்த நாங்கள் வந்த காலத்திலிருந்து அடிப்படைவேதனத்தில் வேலைபார்த்து அக்கடனையும் கடந்து பிள்ளைகளின் கல்வியினையும் கடந்து வசதியுடன் வாழ்கிறோ மெனில்,இங்கேயே கல்விமுடித்து,எம்மைவிட அதிக வேதனத்தில் தொழில் செய்து வாழப்போகும் இப்பிள்ளைகள் எப்படிவாழமுடியும் என்பதனை நாம் குறிப்பிட்டுச் சொல்லத்தேவையில்லை.ஆனால் அன்றுபோல் இன்றும்  பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுஅடிப்படைவேதனத்தில் பல தொழில்கொண்டு வாங்கின வீட்டிலும் வாழாது அலைவது, பிள்ளைகள் மத்தியில் விசனத்தினையே ஏற்படுத்தி வருகிறது.இவ்விடத்திலும் பிள்ளைகளை சோம்பேறிகளாக்கவும்,அவர்களுக்கும் தமக்கும் இடையில் ஒரு இடைவெளியினை உருவாக்கவே  பெற்றோர்கள் சிரமப்பட்டுகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.
பிள்ளைகளின் அனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெற்றோர்கள் செய்யவேண்டியவை.

  1. உற்சாகப்படுத்தல். 
  2. தன்னம்பிக்கை ஊட்டுதல்.
  3. பொறுமையை வளர்த்தல்.
  4. பலவகை சூழல்களில் அவர்களை ஈடுபடச் செய்து தீர்வு காணல்.
  5. அவர்களுடைய சுயமரியாதைக்கு.. மதிப்பளித்தல்.
  6. அவர்களுடன் கலந்துரையாடல்.
  7. நல்ல நண்பர்கள் தொடர்பாக பாராட்டுதல்.
  8. திறமைகளுக்குப் பரிசளித்தல்.
  9. அவர்களுக்குரிய செயல்களில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தல்.
                                    என்பனவாம்.
பெற்றோரிடம் என்றும் பிள்ளைகளிடம் உள்ள அன்பு அளவிடமுடியாததுதான்.அதற்காக பிள்ளைகளை தம் திறமைகளிலும் முயற்சியிலும் நொண்டியாக்க அந்த அன்பு காரணமாகிவிடக் கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
-எண்ணம்:செல்லத்துரை,மனுவேந்தன்.

0 comments:

Post a Comment