தமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
 நீண்ட கால மனித வரலாற்றில்,எமது உணவின் முக்கிய மூலப் பொருட்கள் அவ்வளவாக மாற்றம் அடையவில்லை என்றும், ஆனால் அவை தயார் செய்யப்பட்ட விதம் அல்லது சமைக்கப்பட்ட முறைதான்,எமது தாவர,விலங்கு  இனங்கள் முழுமை யான  மற்றம் அடைய வழிவகுத்தது என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக(Harvard University)  பேராசிரியர் ரிச்சர்ட் வரங்ஹம் நம்புகிறார்.எமது பழைய கற்கால முதாதையர்கள் தவறுதலாக தமது புலால் உணவை நெருப்பில் போட்டு இருக்கலாம்.அதை பின் ஒருவாறு தட்டி எடுத்து உட்கொள்ளும் போது,அது இன்சுவை மிகுந்த ஒன்றாக மாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கலாம். அதுவே உணவை சமைத்து உண்ணும்- ஒரு புது திருப்பத்தை-ஏற்படுத்தி இருக்கலாம்.மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு என்பது உணவைச் சமைத்து உண்பதும்,மனித இனத்தின் தகவல் பரிமாற்ற மொழியும்தான். முக்கியமாக சமைப்பது என்பது,மொழியையும் விடவும் கூட தனித்துவமானதாக,சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.ஏனெனில் எந்த விலங்கும் உணவை சமைத்து உண்பதில்லை.கிடைப்பதை அப்படியே விழுங்கி வைக்கிறது. மனிதன் மட்டுமே விலங் கினத்தில் உணவை சமைத்து உண்கிறான்.மனித இனம்தான்,கொதிக்க வைத்து, சுட்டு, பொரித்து, வறுத்து,இப்படி எல்லாம் செய்து சாப்பிடுகிறது.மொழி/குரல்வளத்தில்,மற்ற விலங்குகள், தொடர்புக்காக,மிரட்ட அல்லது  தன் உணர்வைக்காட்ட குரைக்கின்றன, கனைக்கின்றன, உறுமுகின்றன, ஊளை யிடுகின்றன அல்லது ஏதாவது ஓர் ஒலியை எழுப்பி தகவலை பரிமாறுகின்றன. இதுதான் இயற்கை.சமைத்து உண்பது இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று.இந்த விடயம்தான் நாகரிகத்தின் இதயமாக வரலாற்றில் கருதப்படுகிறது.என்றாலும் துவக்க காலத்தில் பச்சை இலை தழைகளையும். பழங்களையும் உண்ட மனிதன் எப்போது சமைத்து உண்ணத் தொடங்கினான் என்பது துல்லியமாகத் தெரியவில்லை.துவக்க கால மனிதன்-முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட் (Hominids),  என்று சொல்கிறார்கள்- ஏதோ ஒரு சந்தர்ப் பத்தில்,முன்பு கூறியவாறு,
எப்படியோ மாமிசத்தை நெருப்பிலிட்டு உண்டிருக்கிறான்.பின் சுட்டிருக்கிறான். அவன் கொன்ற விலங்கு தற்செயலாக காட்டுத்தீயில் மாட்டி சுடப்பட்டு கூட இருக்கலாம்?அப்படி சுடப்பட்ட மாமிசம் பல்லுக்கு மிக மெதுவாக இருந்ததுடன்,நாவுக்கும் சுவையாகவும் இருந்திருக்கிறது.அது மட்டுமா?அந்த மாமிசம் வழக்கமான பச்சை
மாமிசத்தை விட,மிக எளிதில் சீரணமும் ஆகிவிட்டது. ஆகவே,முதல் சமையல்காரர் என்பவர் தற்செயலாக எதிர் பாராமல்தான் உருவாகி இருப்பார்.அது பெண்ணா,ஆணா,என்பதும் தெரியவில்லை.ஆனால் சமைத்து உணவை உண்பது என்பதை மனிதன் தவிர வேறு எந்த விலங்கும் செய்யவில்லை.இந்த சமையல்தான் மனிதனின் பரிணாமப் பாத்திரத்தில் பெரும் பங்கு வகிப்பதாகும்.அன்றில் இருந்து அவர்கள் எரியும் நெருப்பை சுற்றி கூடியிருந்து,அதிகமாக தமது தொன்மையான, பண்டைய வடிவ  கேபப்[ kebab] செய்து,அதை மற்றவர்களுடன் பகிர்ந்து பல்லால் அரைத்து அல்லது சப்பி உட் கொண்டிருப்பார்கள். உண்ணுதலை சூடாமணி நிகண்டு,


"பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும்
மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே" 

என கூறுகிறது.
இந்த செய்யுள் வழி உண்ணல் வகையில் கடித்துண்பது,நக்கியுண்பது,பருகியுண்பது,விழுங்கியுண்பது,சப்பியுண்பது என பலவகை உண்டு என விளக்குகிறது.மேலும் சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு ஆகும்.அவர்கள் இந்த சப்பி சாப்பிடும் சாப்பாட்டை அதன் பிறகு தொடர்ந்து இருக்கலாம்.இப்படி சமைத்த சாப்பாடு,இந்த முன்னைய மனித இனம் சமைக்காத மூலப்பொருளை பல்லால் கொறித்து கொறித்து சாப்பிடுவதிலும் அதை ஜீரணிப்பதிலும் பார்க்க குறைந்த நேரத்தை செலவளிப்பதற்கு வழி சமைத்தது.இது மற்றவைகளை செய்ய,உதாரணமாக கூடிப்பழக,போதுமான காலத்தையும் பலத்தையும் கொடுத்தது.இந்த ஒருவரோடு ஒருவர்
தொடர்பு கொண்டும் கூடிப்பழகும் செயல் அல்லது அறிவுத்திறன், மிகவும் பலம்வாய்ந்த மூளையை மேம்படுத்த அந்த முன்னைய மனித இனத்தை தூண்டியது.சமைத்த உணவு அதற்கு தேவையான சத்தியை, கலோரியை கொடுத்தது.எம்மை ஒரு அறிவுத் திறன் படைத்த மனிதனாக வளர்ச்சி பெற இந்த சமையல் இடம் கொடுத்தது. சமைத்தலில் உள்ள மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நெருப்பைக் கண்டு பிடித்ததும்,அதனைக் கட்டுப்படுத்தியதும்தான்.இந்த நெருப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் முன்னைய மனித இனம் சமைக்க மட்டும் அல்ல,குளிர் காயவும் வழிசமைத்தது.மேலும் நம் முன்னோர்கள் சூட்டை தணித்துக் கொள்ள முடியினை இழந்ததாகவும் கருதப்படுகிறது.நாம் சமைக்காத பச்சை உணவு சாப்பிட்டு இருந்தால்,எமது உடல் அளவையும் எமது மூளை வைத்திருக்கும் நியூரான்களையும் [neurons], பராமரிக்க, குறைந்தது 9 மணித்தியாலத்திற்கு மேலாக நாம் சாப்பிட வேண்டி இருந்து இருக்கும்.-மூளையின் அடிப்படை துகள்கள், நியூரான்கள் ஆகும்.தகவல்களை உடலின் பாகங்களுக்குக் கொண்டு செல்வது இந்த நியூரான்கள் தான்.அனைத்துத் தகவல்களும் மின் சைகைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது.-ஆகவே இந்த நெருக்கடியை தாண்ட சமைத்த உணவு ஹோமோ எரக்டஸ் (Homo erectus) இற்கு உதவியது.இதனால் சமூக கட்டமைப்பை கட்டமைக்க அவர்களுக்கு நேரம் மிகுதியாக இருந்தது.சமையலை எதோ எங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்று என நம்புகிறோம். ஆனால்,இந்த சமையலை நாம் அறிந்துகொள்ளா விட்டால்,நாம் இன்னும் சிம்ப்பன்சி போன்றே காட்சி அளிப்பதும் மட்டும் இன்றி,அவை போன்றே ஒரு நாளின் பெரும் பகுதியை உணவை சப்பிக் கொண்டு இருப்பதற்கு செலவழித்திருப்போம். அது மட்டும் அல்ல,ஒரு சராசரி மனிதன் வாழ,தனக்கு தேவையான கலோரியை[உணவினால் உடலுக்குக் கிடைக்கும் சக்தியின் அளவு/calories] பெற, குறைந்தது 5 கில்லோ பச்சை உணவை சாப்பிட வேண்டி இருந்து இருக்கும்,
 
எமது உடல் எப்படி எப்பொழுது மாற்றம் அடைந்தது என்பதை முழுமையாக கண்டறியவும்,எமது முதாதையர் என்னத்தை பெரும்பாலும் உட்கொண்டார்கள் என்பதை அறியவும்,தொல்லுயிர் எச்சங்களை/புதைபடிவங்களை[fossil] நாம் ஆய்வு செய்ய வேண்டும். எமது முன்னைய முதாதையர் வாலில்லாக்குரங்கினம் போன்ற ஆசுத்திராலோபித்தசினெசுச் [Australopithecus ] ஆகும்.இது ஹோமோ எரக்டஸிற்கும் கொரில்லாவிற்கும் இடைப்பட்ட தாகும்.இது பெரிய பெருங்குடலைக்கொண்ட பெரிய தொந்தியை கொண்டிருக்கிறது.இது பலமான தாவரப் பொருள்களை சமிக்க உதவுகிறது.மேலும் கடினமான தாவரப் பொருட்களை அரைக்கவும் நொறுக்கவும் ஏற்றவாறு இதன் பற்கள் பெரிய தட்டையாக உள்ளது.இந்த ஆசுத்திராலோ பித்தசினெசுச் தான் முதல் முதல் மரத்தில் இருந்து ஆப்ரிக்கா வனாந்தரத்திற்கு கீழ் இறங்கி வந்து,அங்கு,சமதளப் புல் வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த விலங்குகளை சாப்பிட ஆரம்பித்த இன்றைய மனிதனின் முதாதையர் ஆகும்.இந்த மாற்றம் தான்,அதன் உடல் உட்கூறு அமைப்பில்[anatomy] பெரும் மாற்றத்தை ஏற் படுத்த அடியெடுத்துக் கொடுத்தது. ஹொமினிடுகளில்,முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக்கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக்கொண்டு வருவதையும்,முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன.2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது பரிணாம மாற்றத்தை கண்டு மனிதன் போன்ற அமைப்பையும் கூர்மையான பற்களையும் 30% பெரிய மூளையையும் பெற்றது. மூளையின் முக்கியத்துவத்தை“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்ற ஒரு பழமை வரி சுட்டிக்காட்டுகிறது.இந்த மாற்றம் அடைந்த ஹொமினிட்டுகளை [hominids]  ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) என அழைத்தனர். என்றாலும் மிக முக்கியத் துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய,எமது முதல் மனித முதாதையர் என நம்பப்படும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் எழுநிலை தொல்முன்மாந்தன் ஆகும்.இது இன்னும் பெரிய மூளை யையும்,சிறிய தாடையையும் சிறிய பற்களையும் கொண்டிருந்தன.இதற்கு காரணம் கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது ஆகும்.இந்த ஹோமோ எரக்டஸ் எம்மைப்போன்ற உடல் அமைப்பை கொண்டிருந்ததுடன் குட்டையான கையையும் நீண்ட கால்களையும் கொண்டிருந்தன.மேலும் பெரிய தாவரப் பொருட்களை பதப்படுத்தும் குடலை இழந்தன.இதனால் இப்ப இந்த ஹோமோ எரக்டஸ் நிமிர்ந்து நடக்கவும் மட்டும் அல்ல,அவை ஓடக்கூடியதாகவும் புத்திசாலியாகவும் இருந்தன.
பகுதி :06 தொடரும்..

No comments:

Post a Comment