காரைதீவில் நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு..[அனுப்பியவர்:கோணேஸ்வரன்,மாணிக்கவாசகர்].

காரைதீவிலும் நாகர் ஆட்சியின் கீழ் ஒரு சிற்றரசு....



இலங்கையின் எப்பகுதியிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலும் இல்லாத நாகர் காலத்து கல்வெட்டுக்கள் காரைதீவில். 
2000 வருடங்களுக்கு முற்பட்ட நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வெட்டுக்கள் காரைதீவில் சான்றுகளுடன் கண்டுபிடிப்பு..: #வீடியோ
கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ் பல்கலைக்கழகம்) அவர்களால் உறுதிசெய்யப்பட்டது..

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நாகர் காலத்து சில அரும் பொருட்களும் , கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரியவந்ததையடுத்தும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடும் காரைதீவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும் எழில்வாணி பத்மகுமார் (இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் மட்டக்களப்பு) அவர்களும், வ.குணபாலசிங்கம் ஆசிரியர் அவர்களும் விஜயம் ஒன்றினை இன்று (05.10.2015) மேற்கொண்டிருந்தனர்.
அந்த ஆராய்ச்சியின் விளைவாக காரைதீவிலே 2000 வருடங்களுக்கு முற்பட்ட நகர் காலத்து சில அரும் பொருட்களும், கல்வெட்டுக்களும் இருப்பதாகவும் மற்றும் இலங்கையின் எப்பகுதியிலும் , இந்தியாவின் தமிழ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்படாத கல்வெட்டுக்கள் கிழக்கிலங்கை காரைதீவிலே ஆதாரங்களுடன் இருக்கின்றன எனவும் தகைசார் பேராசிரியர்.சி.பத்மநாதன் அவர்கள் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வழாகத்தில் காணப்பட்ட அரும் பொருட்களை ஆராய்ச்சி செய்த பின் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.
தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன மேலும் தெரிவிக்கையில்..
நாம் இங்கு வந்தபோது காரைதீவிலே மிக அற்புதமான விடயங்கள் பலவும் பொருட்கள் பலவும் இருக்கின்றன என்பதை எண்ணிக்கொண்டு வரவில்லை. ஆக இங்கு நாக தேவனுக்கு யானைகள் இரு பக்கங்களிலும் நின்று அபிசேகம் செய்கின்ற சிறப்பினை சித்தரிக்கின்ற சிற்பங்களை தாங்கி நிற்கின்ற கல்வெட்டு காணப்படுகின்றது. இச் சிற்பத்தைப் போன்ற ஒரு சிற்பம் இலங்கையிலோ அல்லது தமிழ் நாட்டிலோ வேறெங்கும் காணப்படவில்லை. அத்தோடு நாகர்கள் நாக வழிபாடுடையவர்கள் தங்கள் கடவுளை மணிநாகன் என்று கூறி வழிபட்டார்கள். அதேபோன்று இங்கு மணிநாகனைச் சுற்றி நின்று யானைகள் நீரால் அபிசேகம் செய்கின்ற காட்சியை பார்க்கின்ற போது அது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிற்பம் அமைந்திருக்கின்ற கல்லின் நாற்புறங்களிலும் அதன் மேற் பாகத்திலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்களில் எழுதிய தமிழ்ச் சொற்கள் பல அமைந்திருக்கின்றன. நாகர்களுடைய மரபிற்கேற்ப நாக அரசர்களுடைய பெயர்கள், மூன்று தலைமுறையினரின் பெயர்கள் அக் கல்வெட்டிலே காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் அவர்கள் அதை எழுதுவது வழக்கம்.
இந்த சிற்பக் கல்லுக்கு சமீபமாக வேறு இரு கற்கள் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று வட்டமானது மற்றொன்று நீள்சதுரமாக அமைந்திருக்கின்றன. அவற்றிலும் தமிழ்ப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு ஆலயத்தினுடைய உள்வீதி மண்டபத்தின் அருகிலே ஒரு பெரும் தூண் ஒன்றை பார்வையிட்டேன். அதிலும் எல்லாப் பகுதிகளிலும் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. முற்காலங்களில் அதாவது சில இடங்களிலே கற்களின் நடுவிலே குழிவுகள் காணப்படுகின்றன. முன்பு தூண்களுக்கு மரத்தினால் அமைந்த தூண்களை அவற்றிலே பொருத்தினார்கள் என்று கருதினோம் ஆனால் இங்கு இந்த தூணைக் கண்டதும் மரத்தினாலன்றி இந்த குழிவு அமைக்கப்பட்ட கற்களின் மேல் கற்றூண்களை நிறுவினார்கள் என்பது நிருபணமாகிவிட்டது.
இதற்கு பின்பு ஆலயத்தின் இன்னொரு புறத்திலே மூன்று உரல்களினைக் பார்வையிட்டேன் இரண்டு பாரிய அளவில் அமைந்தவை, ஒன்று ஒப்பீட்டளவில் சிறியது அது இப்பொழுது அண்மைக்காலம் வரை எங்களது வீடுகளில் பயன்படுத்திய மர உரல்களைப் போன்றது .
நெல்லுக் குற்றுதல், மா இடித்தல், அரிசி தீட்டுதல் போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றதை போன்றது. ஆனால் ஏனைய இரண்டும் பிரமாண்டமான அளவினை உடையவை. பலர் நின்று உலக்கை போட்டு நெல் குற்றக்கூடிய வகையில் அவை அமைக்கபட்பட்டுள்ளன. இந்த உரல்களின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் அவை எல்லாவற்றிலும் உட்புறமாகவும் பக்கங்களிலும் மேல் விளிம்புகளிலும் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவையும் நாக மன்னர்களைப் பற்றியவை. இந்த எழுத்துக்களின் வரி வடிவங்களைக் கொண்டு இவை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெளிவாக தெரிகின்றது.
ஆனால் இவற்றிற்கு இன்னுமொரு சிறப்பு உண்டு இன்றும் இவை பயன்பாட்டில் இருக்கின்றன. கண்ணகை அம்மன் ஆலய உற்சவ காலங்களில் நெல் குற்றுவதற்கு இந்த 3 உரல்களையும் பயன்படுத்துகின்றார்கள். அதாவது ஆதிகாலத்தில் நாகர்கள் பயன்படுத்திய வேறு எந்த உபகரணமும் இப்பொழுதும் பயன்பாட்டில் இருப்பதை நாங்கள் காணவில்லை. இந்தியாவிற் கூட நாகர்களின் பெயர்கள் பொறித்த இவ்விதமான உரல்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே இந்த உரல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களாகும்.
தொடர்ச்சியாகப் பயன்பட்டு வந்திருப்பதால் நாகர் காலம் முதலாக 2000 வருடங்களாக காரைதீவிலே மக்கள் இடையறாது வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக நாம் அறிகின்ற ஒரு சிறப்பம்சமாகும்.
இவற்றுக்கப்பால் ஒரு மரத்தின் அருகிலே (அதாவது கண்ணகை அம்மன் ஆலய தல விருட்சமான வேம்பு மரத்தின் அடியிலே) ஒரு புராதனமான செங்கல்லை வைத்து அதற்கு வழிபாடாற்றுகிறார்கள். அதனுடைய சிறப்பு என்னவென்றால் அதிலே ஒருவனுடைய உருவம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதிலே அவன் ஒரு கையிலே வில்லை ஏந்தியவண்ணமும் மறு கையிலே அம்பை எடுத்த வண்ணமும் காணப்படுகின்றான். இது பழந்தமிழ் நாட்டில் உள்ள வீரக் கற்கள், நடு கற்கள் போன்றவற்றை எமக்கு நினைவுபடுத்துகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் ராஜன் இப்பொழுது பாண்டிச்சேரியில் தொல்லியல் துறை பேராசிரியராக இருக்கின்றார்.
அவர் மலையாள கரையோரத்திற்கு அண்மையிலுள்ள ஓரிடத்திலே சாசனம் பொறித்த வீரக்கல்லினை அடையாளம் கண்டு அதைப்பற்றி விளக்கியிருக்கின்றார். ஆனால் செங்கல்லிலே இவ்வாறான ஒரு கல் இருப்பதனை இப்பொழுது தான் நாம் அறிகின்றோம். அது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு வரலாற்றுச் சின்னமாகும்.
நாகர் மூலமாக இந்த நடுகற்களை அமைக்கின்ற முறை எமது நாட்டிலும் பரவியிருந்ததென்று கொள்ளத்தக்க ஒரு நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக கூறப்போனால் புராதனமான மட்டக்களப்பு பிரதேசத்தின் எல்லா பகுதிகளிலும் படுவான்கரை, எழுவான்கரை என்பவற்றிலுள்ள ஊர்கள், மலைச்சாரல்கள் வயல்கள் கரையோரப் புறங்கள் என்பவற்றிலும், வடக்கிலே கதிரவெளியிலிருந்து தென்பால் தெற்கிலே சங்கமன்கண்டி வரையான பகுதிகளில் நாகர்களுடைய சின்னங்களை நாங்கள் கண்டிருக்கின்றோம்.
இவற்றிலே நாகர் வேள்நாகரைப்பற்றி கூறப்படுகின்றது. வேள் என்பது சிற்றரசர்களுக்குரிய பட்டம். பழம் தமிழ் இலக்கியங்களிலே பல வேளர்களை பற்றி சொல்லப்படுகின்றது . மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏறக்குறைய 10 மரபுவழியைச் சேர்ந்த வேளர்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து ஆட்சிசெய்தார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் வண்ணமாக மகாவம்சமானது துட்டகாமினி பற்றி சொல்லுகின்ற பொழுது கிழக்கு கரையோரத்தில் ஆட்சி புரிந்த 32 தமிழ் அரசர்களை பற்றி கூறுகின்றது.
எனவே அந் நூல் கூறுகின்ற அண்மையிலே கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமியச் சாசனங்கள் மூலமாக உறுதிபெறுகின்றன.
இன்றைய எமது காரைதீவு ஆய்வின் மூலமாக காரைதீவிலும் நாகர் ஆட்சியின் கீழ் ஒரு சிற்றரசு அமைந்திருந்ததென்பது தெளிவாகின்றது என குறிப்பிட்டார்..

0 comments:

Post a Comment