ஒரு பிரபல ஜோதிடரும், இவர் கூறும் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கேட்கும் ஒரு சாதாரண பொது அறிவாளரும் சந்தித்தால் நடக்கக்கூடிய ஒரு சம்பாஷனை:
ஜோதிடர்:
உங்களினதும், உங்களைச் சார்ந்தவர்களினதும் கடந்த
காலம். நிகழகாலம், எதிர் காலம் எல்லாவற்றையும் துல்லியமாக,
100% சரியாக கணித்துச் சொல்லுவேன்.
பொது அறிவாளர்:
ஆஹா, ஆஹா நீங்கள் ஒரு திரிகால ஞானி!
ஜோ:
என்னால், உங்கள் ஜாதகம், பஞ்சாங்கம், குறிப்பு, கணிதம்,
இயற்கை,ஆருடம், முகம், அங்கம், விரல் அடையாளம், கை ரேகை,
நாடி என்பனவற்றில் எதை வைத்தும் விரிவான, விளக்கமான ஜாதகம் துல்லியமாகப் பார்த்துச்
சொல்ல முடியும்.
பொது:
அடடா, நீங்கள் ஒரு சர்வ லோக, சர்வ கலா வல்லவன்தான்!
ஜோ:
என்னால் உங்களதும், உங்களைச் சார்ந்தவர்களினதும்
என்ன விதமான பிரச்சனைகள்
என்றாலும், அதாவது, கஷ்டம், வறுமை, கவலை, சுகயீனம், துர்ரதிஷ்டம், விரக்தி, மன உளைச்சல்,
அமைதி இன்மை, மன அழுத்தம்,வேலை இன்மை,
கல்வித் தடை, பரீட்சையில் தேர்ச்சி இன்மை, வேலை
உயர்வில் தடை, தொழில் நஷ்டம், பணக் கஷ்டம், திருமணம்அமையாமை,மணப்பொருத்தம், வீட்டுப் பொருத்தம், வாஸ்து,
குடும்பச்சச்சரவு,
பிரிவு, குடி, புகைப் பழக்கம், போதைப் பொருள்களுக்கு அடிமை, விவாகரத்து, மகப்பேறு இன்மை,
பிள்ளைகள், நண்பர்கள், சுற்றத்தவர்கள் பிணக்கு, காணிப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை,
சட்டச் சிக்கல், வெளிநாட்டுப் பயணத் தடை, விசாப் பிரச்சனை. பில்லி, சூனியம்,
பேய், பிசாசுத் தொல்லை, கெட்ட ஆவிகள் தொந்தரவு என்று எது என்றாலும் அப்படியே கண்டுபிடித்துக்
காட்டிவிடுவேன்.
பொது:
அப்பப்பா, நீங்களும் ஒரு கடவுள் என்று சொல்லுங்கோ!
ஜோ:
இந்தப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் அழித்தொழித்து,ஒவ்வொன்றையும் இலகுவில் வெல்லுவதற்கான தீர்வுகள்,வழிவகைகள்,
வழிபாடுகள், பூஜைகள், மந்திரித்த தகடுகள், யந்திரங்கள், தாயத்துகள், கற்கள், மணிகள், மாலைகள் என்பன ஊடாகப்
பரிகாரம்செய்யும் வழிமுறைகளும் உடனுக்குடன் செய்து தரப்படும்.
பொது:
ஆ.. ,அப்படியா? உண்மையாகவா?
ஜோ:
ஆமாம்; சத்தியமாக! 100% உத்தரவாதம்!
பொது:
அப்போ நீங்கள் கடவுளிலும் உயர்ந்தவர் என்று சொல்லுங்கோ.
ஜோ:
ஈ.. ஈ.. அப்படிச் சொல்லாபடாது பாருங்கோ. அவர்தான்
எல்லாவற்றிலும்உயர்ந்தவர்.
பொது:
பார்த்தால், உலகத்தில் உள்ள அதி உயர் பதவியில் இருக்கும்
எல்லோருமேஉங்க காலடியில்தான்
போலும்! மனவுள, மனோதத்துவ, குழந்தைப் பேறு,இதய, வைத்திய
மேலதிகாரிகள், கல்வி, சட்ட, சுகாதார,
உணவு, காணி, போக்குவரத்து , விவசாய, போலிஸ், வேலை வாய்ப்பு, பொது நல, சுங்க,குடி பெயர்வு
அமைச்சர்கள், பரீட்சைத் தாள் திருத்தும் ஆசிரியர்கள்,
புனர்வாழ்வு மையங்கள், தொழில் ஸ்தாபன அதிபர்கள், வங்கிகளின் பணம்வழங்குவோர், வட்டி, நகை, மளிகை, புடவைக் கடைக்காரர்கள்
என்று இந்தஉலகில் உள்ள
நாடுகளில் எல்லோருமே உங்கள் சட்டைப் பையில் என்றுசொல்லுங்கோ!
ஜோ:
எல்லாம் அவன் செயல்தானே ஒழிய, வேறொன்றும் இல்லை.
பொது:
இல்லை; அவர் படைத்துக், காப்பதோடு நின்றுவிட்டார்..
நீங்கள் நேரே வந்துஅவர் இட்ட கட்டளைகளையும் மேவி, எல்லாவற்றையும் நீங்கள்
உங்கள்விருப்பப்படி மாற்றிவிடலாம் என்று அடித்துக் கூறுகின்றீர்கள்..
ஜோ:
ஏன் அப்படிச் சொல்லுகின்றீர்கள்?:
பொது:
இல்லைப் பாருங்கோ; நீங்கள்தான் சொல்லுகிறீர்கள்;
பழைய பிறப்புகளில்செய்த பாவ, புண்ணிய பலன்களை இப்பிறப்பில் நாம் கட்டாயம்
அனுபவிக்கவேண்டும் என்றுதான் இறைவன் எங்களுக்கு இந்தப் பிறவியைக் கொடுத்தார் என்று.
ஜோ:
ஓம், ஓம், உண்மைதான். அது விதி; யாராலும் மாற்ற ஏலாது.
பொது:
அதற்கு ஏற்றால்போல பலன்களைத் தரவேண்டும் என்றுதானே
நாம் பிறக்கும்போது எல்லாக் கிரகங்களையும் சரியாக அந்தந்த இராசியில் உட்கார வைத்து,
மிக நல்ல பார்வை முதல் அதி கெட்ட பார்வை வரை
பார்க்கப் பண்ணி எம்மை இங்கு பிறக்க வைத்திருப்பார்.
ஜோ:
ஆமாம்; அதில் என்ன சந்தேகம்?
பொது:
இல்லை; கடவுள் இட்ட கட்டளையை நீங்கள் மாற்றலாம் என்றுகூறுகிறீர்களே, இது தெய்வ நிந்தனை இல்லையா?
ஜோ:
நாம் மாற்றவில்லை; அதை எதிர்கொள்ளப் பரிகாரம்தான்
கூறுகின்றோம்.
பொது:
சரி, பரிகாரம்தான் என்றாலும், அதுவும் அவர் இட்ட
ஒரு தண்டனையைகுறைக்க, தணிக்க, மறுக்க, நீக்க உங்களுக்கு யார்
அதிகாரம் கொடுத்தது?
அப்படிப் பரிகாரம்செய்ததும், அதன் பின்னர் பிழையான
ராசியில் இருந்தகிரகம் எல்லாம் சரியான ராசியில் ஓடிப்போய்க் குந்திக்
கொண்டு இருந்து நல்லதைச் செய்யத் தொடக்கி விடுமா? என்னதான் சொல்லுகிறீர்கள்?
ஜோ::
தம்பி உமக்கு இது புரியுது இல்லை. நாங்கள் நடக்க
இருக்கும் விதியைஎப்படிச் சம்மாளிப்பது என்றுதான் சொல்லுகிறோம். உதாரணத்திற்கு,
ஒரு பெரிய மழை பொழிய இருக்கின்றது என்றால். நீர் வெறுமனே நனைந்துகொண்டு போனால் சளி,
ஜுரம் வரும். மரத்துக்குள் ஒதுங்கி நின்றால்,சாதுவாய்
நனைந்து சாதாரண தும்மல் உண்டாகலாம். ஒரு குடையைப்
பிடித்துக்கொண்டு போனால் சுகமாய்த் தாண்டலாம். இப்படியான பாதுகாக்கும் வழிகளைத்தான்
நாங்கள் முன்கூட்டியே உங்களுக்குச் சொல்லுவோம்.
பொது:
சும்மா விடுங்கோ இந்தப் புளிச்சுப்போன விளக்கத்தை.
மீண்டும் இறைவன் கட்டளையை மாற்றுவதாகச் சொல்லுகிறீர்கள். நான் நனைவதும்,
விடுவதும், ஜுரம் வருவதும் வராமல் விடுவதும்,
கடவுள் ஏற்கனவே தீர்மானித்த (விதிப்) படிதான்
நடக்கும். அப்படி என்றால், அதைப் பணம் வாங்கிச்சொல்லுவதற்கு ஏன்தான் உங்களைப் போல இடைத் தரகர்கள்
வேண்டும்?சும்மா விட்டாலே விதியின்படிதானே நடக்க வேண்டும்! சிலவேளை அந்த விதிப்படிதான் இந்த பரிகார விளயாட்டுக்களுமோ தெரியாது!
ஜோ:
அந்தக் காலத்தில் இந்தக் கிரகங்கள் எல்லாவற்றையும்
கண்டுபிடித்து,அவற்றினால் ஏற்படும் தாக்கங்களையும் கண்டுபிடித்து
எழுதிவைத்தது பொய் என்று சொல்லுகிறீரோ?
பொது:
மெய்யும், பொய்யும் கலந்ததது என்றுதான் தெரியுது.
எதோ ஒரு சிலவற்றைச் சரியாய்ச் சொன்னார்கள் என்பதற்காக அவர்கள் சொன்னது எல்லாமே சரிஎன்று ஏன்தான் முடிவுக்கு வரவேண்டும்? எதோ காகம்
ஓரிரு தடவை பனம் பழத்தின்மீது இருந்தபோது பழம் கீழே விழுந்தது என்பது உண்மைதான்;
ஆகவே, காகம் இருக்கும்போதெல்லாம் பனம் பழம் கீழே
விழும்தான் என்று அடம் பிடிப்பது சரியாய்த் தெரியவில்லை.
ஜோ:
இந்தக் கிரகங்கள், நட்சத்திரம் எல்லாவற்றையும் எந்தவொரு தொலைநோக்கியும் இல்லாமல் கண்டுபிடிக்கவில்லையா?
பொது:
கண்டுதான் பிடித்தார்கள்தான்; அவர்கள் ஞானிகள்தான்.
சந்தேகமே இல்லை!. ஆனால் அரைகுறையாக. சூரியனுக்குப் பதில் பூமியை நடுவில் வைத்தார்கள்.
சூரியன் ஒரு நட்சத்திரம்; சந்திரன் ஓர் உப கோள். இவற்றையையும் கிரகங்கள் என்றார்கள்.
சந்திரனிலும் பெரிய பல உப கோள்கள் மற்றைய கிரகங்களைச்
சுற்றி சுழல்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.
நமக்கு ஒரு சந்திரன் மட்டுமே. நமது அயலவர் செவ்வாய்க்கு 2 சந்திரன்கள்,
அடுத்து இருக்கும்
குரு பகவானுக்கு 67 சந்திரன்களும், அடுத்தவர் சனி
பகவானுக்கு 62சந்திரன்களுமாக நூற்றுக்கணக்கான சந்திரன்களாலேயோ,
அல்லது பூமிக்கு மிக அருகில் இருக்கும் பல
விண் கற்கள். மூலமாகவோ நமக்கு ஒரு தாக்கமும் இல்லையாம். ஆனால், பல கோடி ஒளிவருடங்களுக்கு
அப்பால்உள்ள நட்சத்திரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
என்றார்கள்.
ஜோ:
சாத்திரங்கள் உண்மை என்று நிறுவப்பட்டுள்ளதே. பெரிய
சுனாமி வந்ததற்கு என்ன கிரக நிலைகள் காரணம் என்று காட்டி இருக்கின்றோமே!
பொது:
வந்தபின்னர் விளக்கம் சொல்ல்கிறீர்களே; வரமுன் எப்போதாவது
சொல்கிறீர்களா? சும்மா பொதுவில் இயற்கைச் சீற்றம் வரும், பெரும் தலைவர் ஒருவர் இறப்பார்
என்று சொன்னால், அது எப்பவும் நடக்கும் ஒன்றுதானே!. இப்படிச் சொல்ல ஒரு ஜோதிடர் தேவையா?
(இத்தருணம் ஒரு பெண்ணின் பெரிய அலறல் சத்தத்தால்
பயந்து ஓடிவந்த
குழந்தை ஒன்றை, ஒரு 35 வயசு மதிக்கத்தக்க ஒரு பெண்.
விரைந்து வந்து தூக்கிக்கொண்டு போனார். மணமாகாதவர் என்று தெரிந்தது)
பொது:
உங்கள் மகள் போல இருக்கின்றதே? திருமணம் ஆகவில்லையோ?
ஜோ:
இன்னும் இல்லை; வேண்டாம் என்கின்றாள்.
பொது:
ஏன், என்ன காரணமாம்?
ஜோ:
மிகவும் பயப்படுகின்றாள்.
பொது:
எதற்காகவாம்?
ஜோ::
அவவின் அக்காவுக்கு வந்த நிலைமை தனக்கும் வந்து விடுமோ
என்று!
பொது:
என்றால்?
ஜோ::
மருமகன் வேலையும் இல்லாமல், என் பணத்தில்தான் வாழ்க்கை நடத்தினான்.
தினமும் நிறையக் குடித்துவிட்டு என் மகளையும்,பிள்ளையையும் துன்புறுத்துவதை நேரில் பார்த்து இவள் பயந்து போய்விட்டாள். கடந்த மூன்று வருடங்களாக அவனைக் காணவில்லை. ஆள் உயிரோடு இருக்கின்றானோ, இறந்து போனானோ என்று ஒன்றும்
தெரியாது. அதனால்,தனக்கு கல்யாணமே வேண்டாம், இந்தக் குழந்தைதான் தன் வாழ்க்கை
என்று திட்ட வட்டமாய்ச் சொல்லிப்போட்டாள்.
பொது:
வேலைக்குப் போகின்றாவோ?
ஜோ:
இல்லை. பத்தாம் வகுப்பில் இருக்கும்போது அவள் அம்மா
அம்மன் வருத்தம் வந்து இறந்ததோடு படிப்பையும் விட்டுவிட்டதால்
ஒரு நல்ல
வேலை கிடைக்காது. வேலைக்கென்று போனால் குழந்தைய யார்
பார்ப்பது என்று கூறுகிறாள்.
பொது:
குழந்தையைத் தாய் கவனிக்க இருக்கின்றாதானே?
ஜோ::
அவளுக்குச் சித்தப் பிரமை பிடித்து இருப்பதால், தான்தான்
குழந்தைக்குத்தாயாய் இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்.
பொது:
ஐயோ பாவம்; அதாவது நீங்கள்தான் பாவம் என்றேன். உங்கள்
வீட்டுச் சாத்திரத்தையே பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்காமல்,
ஊரில் உள்ள மற்றயவர்கள் எல்லோரும் சுபீட்சம் பெறவேண்டும் என்று பிறருக்காகஅயராது பாடுபடுகின்றீர்கள். எவ்வளவு நல்ல உள்ளம்
உங்களுக்கு.இனியாவது உங்களுக்கு என்று கொஞ்ச நேரத்தைச் செலவுசெய்து,
உங்களதும், உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளை ஆகியோருடையதும் ஜாதகத்தை .100% சரியாக கணித்துப் பாருங்கள்.அத்தோடு உங்கள் ஜோதிட நிலையத்தை வீட்டிலிருந்து வேறு
இடத்திற்கு மாற்றுங்கள்.
ஜோ:
இன்னொரு வாடகை கொடுக்கக் கட்டாது பாரும். அத்தோடை
ஓர் ஆண் உதவி வீட்டிலும் தேவைதானே.
பொது:
சரி, உங்கள் வசதி. நான் புறப்படுகின்றேன்.
ஜோ:
தம்பி, இந்த விடயத்தை ...
பொது:
யாரிடமும் சொல்லமாட்டேன். நன்றி, வருகின்றேன்.
ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்
நீங்க என்னதான் சொன்னாலும், எம்மாப்பெரிய ஜோதிடப் பண்டிதர்கள் எல்லாம், சகல மேலை நாடுகளுக்கும் அடிக்கடி சூறாவளிப் பயணம் செய்து, கொள்ளை, கொள்ளையாப் பணம் சம்பாதிச்சுக்கிட்டுத்தானே இருக்காங்க!
ReplyDeleteஏமாறக் கூடி யவர்கள் இருக்கும்வரையில் ஏமாற்றுவோர் வளரத்தானே செய்வார்கள்.
ReplyDeleteசந்திரிகா கெட்டதும் ஜோசியறாலே,மகிந்தா கெட்டதும் ஜோசியறாலே
ReplyDelete