எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {நயினாதீவு}போலாகுமா?

லங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம்மணிபல்லவத்தில்இடம்பெற்றது என்றுமணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது.
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள்வழங்கப்பட்டன என்று கருதப்படுகிறது. . இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன. எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு  நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன.

நயினாதீவில் பௌத்தம்
1939இல், நயினாதீவில் சிங்கள புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்;. மர நிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர்; கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப் போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து, கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரீகர் வருகை இந்தக் காலகட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல - யாழ்ப்பாணக் குடாநாடுதான்மணிபல்லவம்எனவும்நாகதீபம்எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது. ஆனால், இங்கே சிங்களவர்களது புத்த விகாரை இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.
 
கிறீஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. ஆறாம் றூற்றாண்டு வரை பௌத்தம் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தழைத்திருந்த காலத்து, நாகதீபத்தில் - அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் - வாழ்ந்த தமிழ் நாகர்களும் அவர் பின்னோரும் பௌத்தர்களாக மதம் மாறி வாழ்ந்த காலத்தில், நயினாதீவிலும் பௌத்தமதம் காலூன்றி இருந்திருக்கலாம். மாமன்னர் முதலாம் இராஜஇராஜ சோழ தேவரும், அவரது பெருமைவாய்ந்த புதல்வர் முதலாம் இராசேந்திர சோழ தேவரும் தமது நண்பரான சிறீவிசயத்து அரசரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நாகபட்டினத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில்கூட மாபெரும் புத்தர் கோவில் ஒன்றை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் நாகபட்டினத்தின்மீது இன்று பௌத்தர்கள் ஏதேனும் உரிமை பாராட்ட முடியுமா? தமிழர்கள் பௌத்த மதத்தின் விரோதிகள் அல்லர். சில நூற்றாண்டுக்கு முன்னர் பெருமளவுக்கு பௌத்தராக வாழ்ந்தோரின் சந்ததியாரே இன்றுள்ள தமிழர்கள் ஆவர். ஆயினும், வட இலங்கையிலுள்ள நம் மூதாதையர் அமைத்த புத்தர் கோவில்களின் எச்சங்களைக் காரணம் கூறி, சிங்களப் பேரினவாதம் எமது தாயகத்தை விழுங்கிவிட நாம் அனுமதிக்க முடியாது. பிராமணனாகவும், சைவ சமயத்தவனாகவும் இருந்த விசயனின் சந்ததியாருக்கு பௌத்த சமயிகளாக மதம் மாறுவதற்கும், தமது வாழ்விடங்களில் இருந்த இந்துக் கோவில்களை அழித்து புத்த விகாரங்களாக மாற்றி அமைப்பதற்கும் இருந்த உரிமை, பௌத்த சமயத்தைக் கைவிட்டு சைவர்களாக மீண்டும் மதம் மாற விரும்பிய தமிழர்க்கும் இருந்தது.

ஆகவே, 1939 இல் நயினாதீவுக்கு வந்த புத்தபிக்குவால் 1944 அளவில் இங்கு ஒரு புத்த விகாரமும் தாதுகோபமும் அமைக்கப்பட்டதற்கு முன்பு, நயினாதீவில் புத்தர்கோவில் ஏதாவது எக்காலத்திலாவது இருந்திருக்குமாயின் பௌத்தர்களாயிருந்த நயினையில் வாழ்ந்த தமிழ் நாகர்கள் சைவர்களாக மதமாற்றம் பெற்றமையாலும், அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும், நயினார் (அல்லது நாகம்மாள்) கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. அப்படியான புத்தர்கோவில் இங்கே இருந்திருக்குமாயின், அந்தத் தமிழ்ப் பௌத்தர் கோவில் நயினாதீவில் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பது இதுவரை ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை.

 வட இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் முதலில் நாகவழிபாட்டுடன் சங்கமித்த
பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு பௌத்தர்கள் ஆகினர். பின், கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சைவம் தழைக்க அவர்களும் சைவசமயத்தைச் சார்ந்தனர். ஆயினும், எக்காலத்தும் நாகவழிபாட்டை மறந்தாரல்லர். நயினாதீவிலுள்ள நாகம்மாள் கோவில் கருவறைக்குள் இன்றும் நிலைத்திருக்கும் ஐந்தலை நாகத்தின் தொன்மை வாய்ந்த சிலா வடிவம் இதனை நிருபிப்பதாக உள்ளது. தொடர்ச்சியும் தொன்மையும் கொண்டதாக நயினாதீவில் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு நாகவழிபாடு மட்டுமே. பௌத்த சமய வழிபாடோ, இந்து சமய வழிபாடோ அல்ல.
நயினாதீவிற்கு தரை வழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீ செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவிற்கு செல்ல முடியும். நயினாதீவுக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.

நயினா தீவில் முஸ்லீம்
நயினா தீவில் முஸ்லீம் மக்களும் வாழ்கின்றார்கள் .இவர்கள் இந்த தீவுக்கு எப்பொழுது முதன் முதலில் வந்தார்கள் என்ற காலத்தை சரியாக கணிப்பிட்டு கூற முடியாவிட்டாலும் ,காலத்துக்கு காலம் முஸ்லீம்களின் வருகை என்பது ஈழ நாட்டில் இருந்து இருக்கிறது .ஈழத்தில் புராதன துறைமுகங்களில் ஒன்றாக நயினாதீவு துறை முகம் விளங்கியதால் ,நாகர்களின் கதிரை மலை அரசு சிறப்பு பெற்று இருந்த கி மு 3 , 4 ம் நூற்றாண்டு காலத்தில் அரபு நாட்டில் இருந்து கதிரை மலை(இன்றைய கந்தரோடை ) அரசர்கள் நாக வளைவாணன் ,ஈழ சேனன் தங்கள் தேவைகளுக்காக அரபு நாடுகளில் இருந்து குதிரை வருவிக்கப்பட்டதாக வரலாற்று தகவல்கள் இருக்கிறது .அதற்கு பின்னர் எல்லாளன் காலத்திலும் அரேபிய முஸ்லீம்கலோடான குதிரை வர்த்தக தொடர்புகள் நயினாதீவு துறைமுகம் ஊடாக இருந்ததாக கருதப்படுகின்றது .ஆனால் அந்த காலங்களில் வர்த்தகர்களாக வருபவர்கள் தங்கள் வியாபாரம் முடிந்ததும் நாடு திரும்பி விடுவார்கள் .இவர்கள் யாரும் இங்கு தங்கியதாக எந்த சான்றுகளும் இல்லை.இதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் அதாவது கி பி 10 நூற்றாண்டு அளவில் ஈழத்தை சோழர் ஆண்ட சோழர்காலத்திலும் இந்த அரேபியரோடான குதிரை வர்த்தகம் தொடர்ந்ததாக சோழர்க்கால வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன.

பிற்காலத்தில் தென்னிந்திய இராமநாத புரம் சேதுபதிகள் இராமேஸ்வரத்துக்கு கீழே உள்ள 8 தீவுகள் சார்ந்ததும் மற்றும் ஈழத்தின் பகுதி கிராமங்களை சேர்த்தும் 69 கிராமங்களிலும் முத்து குளிப்பதற்கும் மீன் பிடி தொழிலை மேம்படுத்துவதற்கும் வந்து தங்கி தொழில் செய்து விட்டு திரும்பி செல்வதாகவும் தென்னிந்திய குறிப்புக்கள் கூறுகின்றன. .இவ்வாறு வந்தவர்களில் முஸ்லீம்களும் இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது .ஆனால் அவர்கள் இந்த தீவுகளில் நிரந்தரமாக தங்கியதாக வரலாறுகளில் குறிப்பிடப்படவில்லை.பின்னர் ஒல்லாந்தர் ஆளுகைக்கு ஈழத்தின் வடபகுதியும், தீவுகளும் ,தென்னிந்தியாவும் உட்பட்டு இருந்த காலத்தில் அவர்களும் முத்து குளித்தலையும் கடல் பயன்பொருள்கள் வாணிபத்தையும்,கடல் வழி கப்பல் வாணிபத்தையும் மேற்கொண்டார்கள் என்றும் அந்த காலத்திலும் தென்னிந்தியர்களை அழைத்து வந்தார்கள் என்றும் அந்த நேரத்தில் தென்னிந்தியாவின் கீழக்கரையில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் முஸ்லீம்களையும் அழைத்து வந்தார்கள் என்றும் குறிப்புக்கள் சான்று பகர்கின்றன .இவ்வாறு ஒல்லாந்தர் கால இறுதிக்காலத்தில் வந்தவர்கள் மன்னார் பகுதியிலும் ,வேலணை பகுதியிலும் நயினாதீவிலும் யாழின் ஏனைய சில பகுதிகளிலும் சிலர் தங்கி இருக்கலாம் .பின்வந்த ஆங்கிலேயரும் கடல் திரவியங்களை சுரண்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பினார்கள் அவர்களும் தொடர்சியாக இந்தியாவில் இருந்து தொழிலார்களை அழைத்து வந்தார்கள் .அவ்வாறு வந்தவர்களிலும் முஸ்லீம்கள் இருந்து இருக்கலாம். அவர்களும் இங்கு தங்கி இருந்து தங்கள் தொழிலை பிற்காலத்தில் மேம்படுத்தி இருக்கலாம்
இவற்றை எல்லாம் வைத்து கணித்து பார்க்கும் பொழுது நயினாதீவில் முஸ்லீம்கள் ஒல்லாந்தர் கால இறுதி பகுதியிலும் ஆங்கிலேயர் கால ஆரம்ப பகுதியிலும் ஒரு சில குடும்பங்களாக வந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .இவர்களின் வம்சங்களே வளர்ந்து இன்று ஊரில் வாழும் முஸ்லீங்கள் என்ற முடிவுக்கு வரலாம் .பிற்காலத்தில் இவர்கள் மன்னார் நாச்சிகுடாவில் வாழ்ந்த தமது உறவுகளோடு திருமண தொடர்புகளை பேணி அவர்களும் சில குடும்பங்களாக இங்கும் இவர்களில் சில குடும்பங்கள் அங்கும் சென்று குடியேறினார்கள் .
சித்தர் ஒருவர் கூறியதாக செவி வழி கதையில் கூறப்படும் கருத்தின் படி நயினாதீவு வெள்ள மண் என்ற இடத்தில் 2 இறந்த முஸ்லீம்களின் உடல் தகனம் செய்யப்பட்டு சிறு சமாதி இருப்பதாக அவர் ஞான சக்திக்கு அவை தெரிந்ததாக அவர் கருத்து கூறியதாக கூறுகின்றார்கள் . இது எழுதப்படாத ஒரு கருத்தாக இருந்தாலும் ,எம் ஊர் பெரியவர்கள் உறுதிபடுத்துவார்கள் என்ற பார்வையில் இந்த தகவலை அவர்கள் மீளாய்வுக்கு விட்டு விடுகின்றேன் .
பிற்காலத்தில் இங்கு வாழ்ந்த முஸ்லீம்கள் தங்கள் மத தொழுகைக்காகவும் தங்கள் ஏனைய மத கிரியைகளுக்காகவும் 1915 ஆண்டளவில் இன்றைய பள்ளிவாசல் இருக்கும் இடத்துக்கு அண்மையில் ஒரு சிறு பள்ளிவாசலை அமைத்ததாகவும்,1919 ம் ஆண்டில் இன்று இருக்கும் பள்ளிவாசலை சிறப்பாக அமைத்ததாகவும் ,1923 ம் ஆண்டில் உம்மா பள்ளிவாசல் என்றும் சிறு கட்டிடம் அருகில் அமைத்ததாக அறியப்படுகின்றது .இங்கு அவர்கள் தங்கள் தொழுகைகள் நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றார்கள் .


இங்கு வாழ்ந்த முஸ்லீம்கள் இங்குவாழும் பெரும்பான்மை சைவ மக்களோடு சுமூகமான முறையில் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்துவருகின்றார்கள் .ஒருவருக்கு ஒருவர் உதவுவதிலும் துன்ப இன்பங்களில் கலந்து கொள்வதிலும் ,கலை விழாக்கள் விளையாட்டு போட்டிகள் என சகல வழிகளிலும் தங்கள் பங்கையும் வழங்கி தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தி ஊரின் பெருமையை வளர்த்து வருகின்றார்கள் .ஊரின் மாணவர்களின் கல்வி வளர்சியிலும் குறிப்பாக முஸ்லீம் மாணவர்களின் சமயபாட கல்வி வளர்சியிலும் .ஊரிலேயே கல்வி பெற்று தகமை பெற்று நியமிக்கபட்ட முஸ்லீம் ஆசிரியர்களும் காலத்துக்கு காலம் சேவை ஆற்றி இருக்கின்றார்கள். இன்றும் சேவை ஆற்றி வருகின்றார்கள் .
நயினாதீவு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைத் தன்னகத்தே கொண்டே சர்வ சமரசம் நிலவும் இப்புண்ணிய பூமி எதிர்காலத்தில் சர்வசமயிகளின் யாத்திரைத் தலமாகவும் சமயச் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் விளங்குமென்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

No comments:

Post a Comment