திரை விமர்சனம்: 36 வயதினிலே

திருமணத்துக்குப்பிறகு, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், குடும்ப வட்டத்துக்குள் முடங்கும் ஒரு பெண், ஒரு காலகட்டத்துக்குப் பின் அதே குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் தன் சுயத்தைக் கண்டடைகிறாள் என்பதே ‘36 வயதினிலே’. ‘ஹவ் ஓல்டு ஆர் யூமலையாளப் படத்தின் ரீமேக். அதை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்கியிருக்கிறார்.
பணம் சம்பாதிக்க அயர்லாந்துக்குப் போகவேண்டும் என்பது ரகுமானின் கனவு. மனைவி ஜோதிகாவின் 36 வயது அதற்குத் தடையாகிறது. கணவனும் மகளும் இதனால் எரிச்சல் அடைகிறார்கள். ரகுமான் ஒரு விபத்து நிகழ்த்திவிட, விசா கிடைக்கும் நேரத்தில் தன் மீது வழக்கு வந்துவிடக் கூடாது என்பதால் ஜோதிகாவை விபத்துக்குப் பொறுப்பேற்க சொல்கிறார். சட்டப்படி அதிலும் சிக்கல் வர, ரகுமானின் எரிச்சல் உச்சத்தை அடைகிறது.
ஜோதிகாவின் மகளுடைய பள்ளிக்கு விஜயம் செய்யும் குடியரசுத் தலைவர், அவள் கேட்கும் கேள்வியைக் கண்டு அசந்துபோகிறார். அதை சொல்லிக்கொடுத்தது அவளது அம்மா என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரே நாளில் ஜோதிகாவின் அந்தஸ்து கிடுகிடுவென்று உயர்கிறது. வீட்டிலும் அலுவலகத்திலும் இளக்காரமாக நினைத்தவர்கள் வாயைப் பிளக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக் கெடுபிடி களால் திணறும் ஜோதிகா, குடியரசுத் தலைவரைச் சந்தித்ததும் மயக்கம்போட்டு விழ, ஊரே அவரைப் பார்த்துச் சிரிக்கிறது. இந்த நேரத்தில் கணவரும் மகளும் வெளிநாட்டுக்குக் கிளம்பிவிடுகின்றனர். வயதான மாமனார், மாமியாருடன் வசிக்கும் ஜோதிகாவைக் கழிவிரக்கம் கவ்வுகிறது.
தனக்கென ஒரு அடையாளமோ, மரியா தையோ இல்லாத வாழ்வில் ஜோதிகாவால் தன் அடையாளத்தை மீட்டுக்கொள்ள முடிந்ததா?
இரண்டு முக்கியமான பிரச்சினைகளை இந்தப் படம் தொடுகிறது. 1. நம் சமூக அமைப் பில் திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல். 2. இயற்கை வேளாண்மை. இந்த இரண்டையும் பொருத்த மான கதையில் இணைத்து விறுவிறுப்பாகச் சொல்லியிருந்தால் குறிப்பிடத்தகுந்த படங் களில் ஒன்றாகியிருக்கக்கூடும்.
பாத்திர வார்ப்புகள், சம்பவங்களில் நாடக தொனி! ஜோதிகாவின் மேல் அனு தாபம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவரது அலுவலக சகாக்கள், கண வன், மகள் என எல் லோரையும் கிட்டத்தட்ட வில்லன்களாகக் காட்டுவது அத்தனை இயல்பாக இல்லை.
கல்லூரிப் பருவத் தோழி அபிராமியின் மூலம் ஜோதிகாவுக்கு உத்வேகம் கிடைப்பது, பேஸ்புக், மாரத்தான் என்று புதிய அத்தியாயம் தொடங்குவது, காய்கறி விற்பனை மூலம் திருப்பம் வருவது என்று எதை எடுத்தாலும் அதிரடி அவசர திருப்பம்தான். ஜோதிகாவின் உரையைக் கேட்டுவிட்டுச் சட்டசபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் இயற்கை வேளாண்மை பாடம் எடுப்பதாக அமைச்சர் சொல்வதும் குடியரசுத் தலைவரிடம் இருந்து வரும் இரண்டாவது அழைப்பும் நம்ப வைக்கிற அழுத்தத்துடன் சொல்லப்படவில்லை.

மனதைத் தொடும் சில காட்சிகளும் படத்தில் உள்ளன. தன்னைச் சம்பளம் இல்லாத வேலைக்காரப் பெண்ணாக வெளிநாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள் என்பதை ஜோதிகா உணரும் இடம் அழுத்தமானது. பெரிய கடையில் வேலை பார்க்கும் மூதாட்டியை அவரது வீட்டுக்குச் சென்று ஜோதிகா சந்திக்கும் இடமும் குறிப்பிடத்தக்கது. பாசத்தை வைத்து தன் குடும்பம் விரிக்கும் வலையில் விழாமல் ஜோதிகா உறுதியாக நின்று சாதிப்பது முக்கியமான தருணம்.
திரைக்கதை நைந்து தொங்கும் நேரங்களில் படத்தைத் தாங்கிப் பிடிப்பது வசனகர்த்தா விஜி. நடுத்தர வயதை நெருங்கும் பெண்களின் நிலையைப் பொட்டில் அறைந்ததுபோல் சொல்லும் வசனங்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.
சந்தோஷ் நாராயணனின் இசையில் வாடி ராசாத்தி பாடல் திரும்பக் கேட்கத் தூண்டுகிறது. 
ஜோதிகாவுக்கு அட்டகாசமான மறுபிரவேசம். படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார். கணவன் தன்னை இழிவுபடுத்தும்போது அவர் வெளிப்படுத்தும் முக பாவனை இன்றைய பெண்களின் துயரத்தின் அடையாளமாக நம் மனதில் தங்கிவிடுகிறது.
குடும்பத்துக்காகத் தன் அடையாளத்தையும் கனவையும் தொலைத்துவிட்ட பெண்கள், குடும்பச் சுமையில் சிக்கி இயந்திரமயமான வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பல விஷயங்களை இழக்கிறார்கள்.

அவர்களது உழைப்பை உறிஞ்சிக் கொண்டு போதாமைகளைச் சுட்டிக் காட்டிக் குடும்பமே அவர்களை இழிவுபடுத்துகிறது. இவற்றை பொறுத்துக் கொண்டுபோகும் பெண்களின் வலியைச் சொன்னவிதம் சரிதான். ஆனால் அதை இன்னும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கலாம்.

No comments:

Post a Comment