எங்கள் கிராமத்தில் , இன்னும் எம்.ஜி.ஆர் , சிவாஜிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் . இன்னும் பண்டிகைக்காலங்களில் எள்ளிடி ,ஆப்ப கசாயாம் , வெள்ளம்புலி கறி , போன்ற தமிழர் மறந்த பலகாரங்கள் தான் வீட்டில் செய்து சாப்பிட்டு வருகிறார்கள் . சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில் , 1960 – களின் வாழ்க்கை நிலையை மதிக்கும் மக்கள் அதிகம் .எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்களை சுற்றியுள்ள பல சுற்றுவட்டார ஊர்களிலும் , இதே நிலை தான். உறவினர் அல்லாத , ஒரு பெண்ணோ பையனோ இரண்டு நிமிடம் சிரித்து பேசிவிட்டால் அவ்வளவு தான் . என் வயதில் இருக்கும் இளவட்டங்கள் , அவளின் நடத்தையைப்பற்றி “A” சர்டிபிகேட் கொடுக்குமளவிற்கு , கற்பனையில் வாய்கிழிய கிளப்பி விடுவார்கள் . நடுத்தர வயதினரோ , அப்பெண்ணை மிரட்டி , பையனை மரத்தில் கட்டிவைத்து அடித்த நிகழ்வுகளெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன் வரை நடந்து கொண்டிருந்தது . மாற்று சமூகம் என்றால் சொல்லவே வேண்டாம் .
ஒருமுறை கவுண்டர் இனத்தைச்சார்ந்நத பையன் ஒருவன் , நாடார் இனப்பெண்ணுடன் ஓடிச்சென்றான் . அவனை பிடிக்க அவனுடைய தந்தை , டாட்டா சுமோக்கள் சகிதம் 40 பேருக்கு மேல் கிளம்பி அவனை விரட்டினார்கள் . அவன் எப்படியோ தப்பி , கலெக்டர் ஆபிஸ்க்கு (பழைய கலெக்டர் ஆபிஸ்) சென்றான் . பையனின் தந்தையோ , தெலுங்கு பட வில்லன் கணக்காய் , கலெக்டர் ஆபிசினுள் காரை விட்டு , ஆபிசினுள்ளேயே வைத்து அப்பையனை பிடித்து அடித்து துவைத்தனர் . போலிசாருக்கும் இதில் செம அடி . இந்நிகழ்ச்சி நடந்து 5 வருடம் ஆகிறது .சன்டீவியின் தலைப்பு செய்திகளில், இப்பிரச்சனை ஒருநாள் அலங்கரித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . இந்த பிரச்சனையில் அல்டிமேட் விஷயம் என்னவெனில் , அந்த பையன் படித்தது 10 வகுப்பு. அவனுக்கு , அவன் வீட்டாரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணோ , ஒரு வக்கில் . அவளும் உள்ளே புகுந்து , வரும் போலிஸ்காரர்களை வார்த்தையால் லெப்ட் –ரைட் வாங்கியபடியே , இன்னொரு பக்கம் பையனின் கன்னத்திலும் லெப்ட் – ரைட் வாங்கினார் .
சரி, டென்சன் ஆகாதிங்க . இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றால் , சென்றவாரத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் . மாப்பிள்ளை , எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் . மணப்பெண்ணோ , வேறொரு சமூகத்தைச்சார்ந்தவர் . 6 வருடக்காதல் , திருமணத்தில் இன்பமாக ‘கமா’ போட்டு கன்டினியூ ஆகிஇருக்கிறது . அதுவும் , அவர்கள் குடும்பத்தின் அங்கிகாரத்தோடு . இதில் என்ன இருக்கு ? நல்ல விஷயம்தானே என்கிறீர்களா ? அதுதான் இல்லை .
என்னடா இவன் , கலப்பு திருமணத்தை எதிர்க்கிறான் என்று யோசிக்கிறீர்களா ? திருமணம் முடியும் வரை அவர்கள் , காதலில் வெற்றியடைந்த ஆச்சரியமான ஜோடிகளாகத்தான் நம் கண்களுக்கு தெரிவார்கள் . வீட்டிற்க்கு வந்ததும் , நமக்கான பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்
. ஆனால் , திருமணத்திற்கு பின் அவர்கள் என்னவானார்கள் என்று யாரேனும் யோசித்திருப்பீர்களா ?
காதலிக்கும்போது உயிரையே விட்டுவிட நம்மால் முடியும் போது , அந்த
காதல் நிறைவேற சொந்தபந்தங்களை , தூரத்தூக்கிவீசுவது பெரிய விஷயமாக இருக்காது . எனவே , அவர்களை உதறி , பெற்றோரை மிரட்டி , இன்றைய காதல் ஜோடிகள் திருமணத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்கிறார்கள் . ‘நீ போனா , நா குடும்பத்தோட செத்துருவேன்னு’ மிரட்டுற பெற்றவர்களை , இன்று அசால்டாக ‘செத்தா சாவு’ என்று கூறும் நிலைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது (ஒருசிலர் விதவிலக்கு) . இதற்காகவே , பெற்றவர்களும் மனது இல்லாமல் ஏற்றுக்கொண்டு , பத்திரிக்கை அடிக்கிறார்கள் .
காதல் நிறைவேற சொந்தபந்தங்களை , தூரத்தூக்கிவீசுவது பெரிய விஷயமாக இருக்காது . எனவே , அவர்களை உதறி , பெற்றோரை மிரட்டி , இன்றைய காதல் ஜோடிகள் திருமணத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்கிறார்கள் . ‘நீ போனா , நா குடும்பத்தோட செத்துருவேன்னு’ மிரட்டுற பெற்றவர்களை , இன்று அசால்டாக ‘செத்தா சாவு’ என்று கூறும் நிலைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது (ஒருசிலர் விதவிலக்கு) . இதற்காகவே , பெற்றவர்களும் மனது இல்லாமல் ஏற்றுக்கொண்டு , பத்திரிக்கை அடிக்கிறார்கள் .
கல்யாணத்தன்றின்போது பெற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம் சொல்லிமாளாது . ஒவ்வொரு உறவினரும் வந்து , பொன்னைப்பற்றியோ , பையனைப்பற்றியோ கேட்கும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் , ஒருவாறு தலையை குனிந்துகொண்டு நழுவி செல்லும் அவமான நிலை , கொலை செய்தவனுக்குக்கூட வராது . எப்படியோ , திருமணத்தை முடித்து , அவர்களை வேறொரு வீட்டில் குடிவைக்கிறார்கள் . அதன்பின் , மணமக்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் இல்வாழ்க்கையை தொடங்குவார்கள்
. சரியாய் , தங்களின் குழந்தையை பள்ளிசேர்த்தும்வரை , எந்த பிரச்சனையும் இருக்காது . பள்ளிச்சேர்க்கையின்போது தான் முதல் பிரச்சனை ஆரம்பிக்கும் . பையனை எந்த ஜாதியில் சேர்த்துவது ?
எப்படியும் அப்பாவின் ஜாதியின்பெயரில் தான் சேர்த்துவார்கள் என்றாலும் , அது சம்பந்தமாக அந்த தாயின் மனதில் ஒரு சில வருத்தம் இருக்கும் . காரணம் , காதலுக்கு தான் ஜாதி தேவையில்லை . மனிதனுக்கு , ஜாதி தேவை . குழந்தை வளர வளர , குழப்பமும் அதிகரிக்கும் . எப்படியும் , இந்த இடைப்பட்ட காலத்தில் , பையனின் உறவினர் , பெண்ணின் உறவினர் என்று , பெரும்பாலோனவர் சடங்கு , சம்பிரதாயங்களுக்கு அழைக்கமாட்டனர் . நல்லது , கெட்டது என்று எங்கும் செல்லமுடியாது . அப்படியே நெருங்கிய உறவினர் அழைத்தாலும் , அங்கே சரிசமமான மரியாதை , இருவருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் . பின் , இருவருக்குள்ளும் குழப்பங்களும் சச்சரவுகளும் அதிகரிக்க ஆரம்பிக்கும் . சிலர் , இந்த சண்டைகளை புரிந்துகொண்டு தவிர்த்தாலும் , மனதினுள் ஒருவிதமான வலி உண்டாகும் . அது , எப்போதாயினும் வெளியே வந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம் . கிட்டத்தட்ட , நம் அருகிலே எல்லோரும் இருப்பது போல் இருந்தாலும் , யாருடைய உதவியும் உண்மையாக , முழுமையாக கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .
தங்களின் குழந்தைகள் , மணவயதை அடையும்போதுதான் உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும் . என்னதான் , தாங்கள் காதலித்து மணம் செய்திருந்தாலும் , தங்களின் குழந்தைகளின் காதலை ஏற்கும் மனநிலையில் , இருப்பவர்கள் சிலரே ! மீதிபேர் , தம் குடும்பத்திலோ , சொந்த பந்தத்திலோ தான் வரன் தேடவேண்டி இருக்கும் . கடலில் தொலைத்த சிம்கார்டு போன்றதுதான் , சொந்த பந்தத்தில் வரன் தேடுவதும் .
எனக்குத்தெரிந்தஉறவினர் ஒருவர் , கலப்பு திருமணம் செய்தவர்தான்
. அப்போது குஜாலாக இருந்தவர் , இப்போது மணவயதை தாண்டிய அவனது மகனின் ஏச்சுபேச்சுகளை தாங்கமுடியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறார் . அம்மாவின் ஜாதியில் இருக்கும் பெண்ணாக தேடிச்சென்றால் , அப்பாவின் ஜாதியைக்காட்டி நிராகரிப்பு செய்கிறார்கள் . அப்பாவின் ஜாதியில் இருக்கும் பெண்களைத்தேடி சென்றால் , நிராகரிப்புடன் இளக்காரமும் செய்கிறார்கள் . என்னசெய்வதென்று தெரியாமல் , ‘சரி நாளஞ்சு பொட்டபுள்ள இருக்கற வீட்டுக்காச்சும் போலாம்’னு சென்றார்கள் . அங்கு வாங்கிய பேச்சுகளால் , மனமுடைந்து மனிதர் பெண் பார்க்கவே செல்வதில்லை . யாரையாவது தன் மகன் காதலித்தாவது இழுத்து வரமாட்டானா என்ற ஆதங்கத்தில்வாழும் அவரது மகனுக்கோ , பெண்களிடன் பேசுவதற்கே பயம் .
ஜாதி மாற்றி செய்பவர்களை விட , மதம் மாறி திருமணம் செய்துகொள்பவர்களின் நிலை , அதைவிட மோசம் . ஏதோ , வேறு ஜாதி பெண் என்றால் பேசுவதற்காகவாது ஆள் இருப்பார்கள் . ஆனால் , மதம் மாறி திருமணம் செய்பவர்கள் , நாட்டைவிட்டு தள்ளிவைக்கப்பட்டவர்களின் நிலையில் இருக்கிறார்கள் .
கலப்புத்திருமணம் என்பது மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் சாதாரணமானதாக இருப்பினும் (மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் இருக்கும் நிலையைப்பற்றி , எனக்கு சரிவரத்தெரியவில்லை .) ,
எங்களது ஊரைப்போன்ற கிராமங்களில் , இன்னும் பெரிதளவில் அங்கிகரிக்கப்படவில்லை என்பதே உண்மை . அப்படியொரு பட்சத்தில் அங்கிகரித்தாலும் , அது பிள்ளைகளின் நிர்பந்தத்தின்காரணமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது
. இதற்கெல்லாம் காரணம் , காதல்தான் .
அப்படியே வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஓடிச்செல்பவர்களில் பலரின் வாழ்க்கை அந்தோகதி தான் . எனக்கு தெரிந்து இதே போன்றதொரு சம்பவம் நடந்தது . வீட்டை விட்டு ஓடிய பெண் , 3 வருடங்களுக்கு பின் ஓசுரிலிருந்து தன்குடும்பத்தினருக்கு போன் செய்திருக்கிறாள் . நாங்கள் அவளை மீட்கச்சென்றோம் . அவள் கூறிய இடத்திற்கு சென்ற எங்களுக்கு பேரதிர்ச்சி . காரணம் , அவள் இருந்தது ஒரு விபச்சார விடுதியில் . இம்மாதிரி , காதல் எனும் பெயரில் சில அயோக்கியர்கள் , பெண்களை கடத்தி இம்மாதிரியான நிலைக்கு உபயோப்படுத்தி வருவது , அதிகரித்தவண்ணம் உள்ளது .
என்னைப்பொறுத்தவரை , காரைத்துரத்தும் நாயைப்போன்றது தான் காதலும் . சக்சஸ் ஆகும் வரை துரத்த நினைப்போம் . சக்சஸ் ஆனபின் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம் . ஒருவேளை திருமணத்தில் முடியும் காதல் தான் வெற்றி என்று கூறினாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் , இன்றைய நிலையில் , டைவர்ஸ்க்காக விண்ணப்பத்திருக்கும் பெரும்பாலோனர் , காதல் ஜோடிகள் தான் . ‘என்னடா பன்றது , வீட்ட விட்டுட்டு வந்துட்டமே’ னு நிறைய பேர் , தங்கள் காதல் வாழ்க்கையை சந்தோஷமாக வெளி உலகிற்கு காட்டிக்கொண்டு , உள்ளே புழுங்கி கொண்டிருக்கிறார்கள்
. ஒருநொடியில் உதிப்பது தான் காதல் என்றால் , இப்போது காதலிக்கும் பெண்ணிற்கு முன் எத்தனையோ பெண்களை நாம் காதலித்திருக்க வேண்டும் . இன்றைய காலகட்டத்தில் , காதல் என்பது தன்னுடைய புரபோசலை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன்தான் . ஏற்றுக்கொள்ளவில்லையெனில் , துரத்தி துரத்திக்காதலிக்கும் காதலர்களை பார்ப்பது அரிது . அவ்வாறிருக்கும்பட்சத்தில் , அந்த காதல் எத்தனை நாள் நீடிக்கும் என்பதெல்லாம் ஆண்டவன் கையில்தான் இருக்கிறது . திருமணத்திற்கு முந்தைய காதல் , காலாண்டு பரிட்சை போல் தான் . குழந்தை பிறந்தவுடன் இருக்கும் காதல் அரையாண்டுத்தேர்வைப்போல் . காலாண்டில் தேறுபவர்கள் , அரையாண்டில் கோட்டை விட்டுவிடுகிரார்கள் . பின் வாழ்க்கை எனும் முழாண்டுத்தேர்வில் , அவர்களால் நிச்சயமாக வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகம்தான் .
என்னைப்பொறுத்தவரை , நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்று தான் காதலும் . என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடத்தில் ஒரு வார்த்தை கூறியிருந்தார் .
நம்முடைய செயல்களால் , நமக்கோ அல்லது பிறருக்கோ , நம்மேல் இருக்கும் மரியதை குறைந்தாலோ அல்லது துன்பம் நேரிட்டாலோ , அந்த செயலை செய்வதற்கு , செய்யாமலிப்பதே உகந்தது .
என்னைப்பொறுத்தவரை , கலப்புத்திருமணங்களை ஆதரிக்கும் சமூகநிலைபாடு மக்களிடையே வளரும் வண்ணம் பார்த்துக்கொண்டாலன்றி
, அதனால் கஷ்டங்கள்தான் வரும் . அந்த கஷ்டங்களை தாங்கும் மனநிலையில் இருப்பின் , தாராளமாய் கலப்புத்திருமணம் செய்துகொள்ளலாம் .
மேலே நீங்கள் படித்த , கலெக்டர் ஆபிசில் புகுந்த பையன் , கடைசியில் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி அப்பெண்ணை மணந்து கொண்டான் . இல்வாழ்க்கையை வெற்றிகரமாய் துவங்கினான் . கடைசியில் யார் கண் பட்டதோ , தொழிலில் பெருத்த நட்டமாகி தூக்குமாட்டிக்கொண்டான் . அந்த பையனுடன் இருந்த சில கயவர்கள் , அவனிடமிருந்து அனைத்தையும் சுருட்டிக்கொண்டுவிட்டார்கள் . கடைசியில் , அப்பெண்ணின் உறவினர்கள் , பையனின் உறவினர்கள் என்று யாருமே வரவில்லை . சடலத்தை தூக்கிச்செல்ல 4 பேர்கூட இல்லாமல் , அப்பெண் கதறிக்கொண்டிருந்தாள்.
நன்றி:மெக்னேஷ் திருமுருகன்
No comments:
Post a Comment