எந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும். இந்த சமூகத்தை இயல்பாக சித்தரிக்க விரும்பும் படைப்பாளிகளால், கிராமத்து தெருக்களையும் மனிதர்களையும் காண்பிக்கும் போது சாதியைப் படம்பிடிக்காமல் இருக்க முடியாது. சாதியைப் பற்றியோ தமிழகத்தின் கிராமங்கள் குறித்தோ புரிதல் இல்லாமல் கார்ப்பரேட் இயக்குனர்கள் படம் எடுத்தால், அத்தகைய படங்கள் தமிழகத்தின் எதார்த்த சூழலை உணர்த்தாது. மணிரத்தினத்தின் அபத்தமான படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். சாதி இல்லை என்று சொல்பவர்கள் போலித்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது பேதைகளாக இருக்க வேண்டும். சாதி ஒழிய வேண்டும் என்பதே நாம் முன்னிறுத்த வேண்டிய செயல்திட்டமாகும். சமூகத்தின் சாதிய உணர்வை சந்தையாக்கி காசாக்கும் சினிமா வியாபாரிகள் தற்போது பெருகி வருகிறார்கள். இடைநிலை சாதி உணர்வாளர்களே இவர்களின் இலக்கு. சாதியை சரியாக உள்வாங்கிக் கொண்டு சாதி ஒழிப்பு கருத்தியலை முன்னெடுக்கும படைப்புகள் தமிழ்ச் சூழலில் எத்தைகய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன; சாதியை ஊக்குவிப்பதிலும், ஒழிப்பு அரசியலிலும் தமிழ் சினிமா ஆற்றிய பங்கு என்ன என்பது குறித்த உரையாடல்தான் இந்தக் கட்டுரை.
சுயசாதி அக்கறையில் தனித்துவம் மிக்க பாலச்சந்தர்
நடுத்தரவர்க்கப் பிரச்சனை, இடஒதுக்கீடு எதிர்ப்பு, தனித்துவமிக்க பெண் ஆளுமைகள், ஏக இந்திய ஆதரவுப் பிரச்சாரம், இந்தித் திணிப்பு வசனங்கள், வட இந்தியத் தலைவர்கள் புகழ் பாடுதல், இது போன்ற அம்சங்கள் ஒரு படத்தில் வலிந்தோ இயல்பாகவோ சொல்லப்பட்டால் அது பாலச்சந்தர் படம் என்பதை தமிழ்த் திரை நோக்கர்கள் எளிதில் கண்டு கொள்ளலாம். அவருடைய படங்களில் இடஒதுக்கீடு காரணமாக சைவ முதலியார், சைவப் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் (பார்ப்பனர்களுக்குப் பதிலாக) வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பது போல் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். உன்னால முடியும் தம்பி, வானமே எல்லை போன்ற கயமைத்தனமான படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இடஒதுக்கீட்டிற்கு எதிரான தனது குரலை பார்ப்பன சமூகத்தின் குரலாக இல்லாமல், சைவ முதலியார், காசுக்கடைச் செட்டியார் போன்ற சமூகங்களின் குரலாகப் பதிவு செய்வதன் வாயிலாக தனது விசமத்தை காட்டியிருப்பார் பாலச்சந்தர். பாலச்சந்தரின் விசிறிகள் பாணியில் சொல்ல வேண்டுமானால், அதுதான் கே.பி. டச்.
பாலச்சந்தரின் கொள்கைப் புத்திரர்களாய் மணிரத்னமும், சங்கரும்
90களுக்கு பிறகு கார்ப்பரேட் முகவர்களாக வலம் வரும் மணிரத்னமும், சங்கரும் நவீன யுகத்தின் சாதியப் பாதுகாவலர்கள். மணிரத்னம் குடும்பம் வழங்கிய “இந்திரா” படத்தைப் போல் அபத்தமான கிராமத்தையும் தலித் குடும்பத்தையும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பன மொழி பேசிக் கொண்டு, கர்நாடக இசை இசைத்துக் கொண்டு, வாழும் தலித் குடும்பத்தை சுகாசினியால் மட்டுமே கற்பனை செய்ய முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் யார் என்கிற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் மயிலாப்பூர் வகையறாக்கள் எடுத்த படம் இந்திரா. ஆயுத எழுத்தில் சேரி இளைஞன் குறித்தும், திராவிட அரசியல் குறித்தும் மணிரத்னம் முன் வைத்த கருத்துக்கள் பார்ப்பன பாசிசத்தின பிரச்சாரம்.
சஙகரின் அடித்தட்டு மக்கள் மீதான தொடர் வன்முறை
சங்கர் என்றால் பிரம்மாண்டம் என்கின்றனர். உண்மையில் அவர் எடுத்த பிரம்மாண்டத் திரைப்படங்கள் பரப்புவது பார்ப்பனியம் மட்டுமே. ஜென்டில்மேன் படத்தில் துவங்கிய இடஒதுக்கீட்டிற்கு எதிரான பிரச்சாரம் அந்நியன் வரை தொடர்ந்தது. சங்கரின் படங்களில் சேரி மக்கள் சுத்தமில்லாதவர்களாகவும், பொறுப்பில்லாதவர்களாகவும் வலம் வருகின்றனர். அரசுப் பொறுப்பில் இருக்கும் இடைநிலை சாதிகள் லஞ்சம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். இதனால் நாட்டில் இருக்கக்கூடிய நேர்மையே வடிவான பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகின்றனர். தகுதியும் திறமையும் உடைய அம்பிகள் பாதிக்கப்படுவதும், இடைநிலை சாதிகளும், தாழ்த்தப்பட்டவர்களும் அதிகாரத்தில் இருப்பதும், இந்தியா வல்லரசாக தடைக்கல்லாக இருக்கிறது. இதுதான் சங்கரின் அனைத்து திரைப்படங்களின் ஒன்லைன் ஸ்டோரி. இவர்களின் படங்களில் வரும், “ஏன்டா சாதி பார்க்கீறீங்க" என்ற வசனத்தின் பொருள் என்னவென்றால, "இடஒதுக்கீடு ஏன்டா கேட்கீறிங்க" என்பதுதான். உழைக்கும் மக்களைப் பிரிக்கும் சக்தியாக சாதி செயல்பட்டுக் கொண்டிருப்பது என்பதே எதார்த்தம். ஆனால், சங்கர் வகையறாக்களுக்கு இந்த எதார்த்தம் பிரச்சனையாகத் தெரியவில்லை. கல்வி வேலைவாய்ப்பில் இடைநிலை சாதி மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு சாதி பயன்படுகிறதே என்பதுதான் இவர்களின் வேதனை.
சினிமாவால் கொம்பு சீவப்படும் இடைநிலைச் சாதியினர்
இப்ப எல்லாம் கமர்சியல் சினிமான்னு முடிவு பண்ண உடனே நமது தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் மதுரையைத் தான் கதைக்களமாக தேர்வு செய்கின்றனர். சண்டைக் கோழி, திமிரு, சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங்களில் பிரான்மலைக் கள்ளர் சமூகத்தைப் பிரதானப்படுத்தி காட்சிகள் இருக்கும். சுந்தர பாண்டியன் படத்தில், நானும் “கள்ளன்தான், நீங்களும் கள்ளர்தான் அதனால பொண்ணை கட்டி கொடுங்க” என்பது போன்ற வசனங்கள் வரும். பருத்தி வீரன் படத்தில் “நம்பி வந்தவன வாழ வைக்கிறவன்டாதான்டா தேவன்”னு வசனம் வரும். மதுரை நகரின் திரைஅரங்குகளில் இது போன்ற வசனங்கள் கைதட்டலைப் பெறுகிறது. படிக்கின்ற கள்ளர் சமூக மாணவர்களை சாதிய பழமைவாத மனநிலைக்கு கொண்டு செல்லும் அபாயமாக நான் இதுபோன்ற படங்களைப் பார்க்கிறேன். உசிலம்பட்டி, தேனி, கம்பம் பகுதிகளில் கள்ளர் சமூகத்தினர் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக்களை கதாநாயக பிம்பத்துடன் சித்தரித்த திரைப்படம் “சண்டைக் கோழி”. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர், பிரான்மலை கள்ளர்களின் களவுத் தொழிலையும், பரிதாபநிலையையும் எதார்த்தமாக பதிவு செய்த படம் அரவான். ஆனால் கள்ளர் சமூகத்தாலும் அத்திரைப்படம் கொண்டாடப்படவில்லை; முற்போக்கு தலித் செயற்பாட்டாளர்களாலும், பாராட்டப்படவில்லை. என்ன செய்ய, நல்ல படங்களைக் கொண்டாடும் சாதியற்ற நடுநிலையான மனநிலை யாருக்கும் கிடையாது. 'பாஞ்சாலங்குறிச்சி' படத்தில் “மன்னாதி மன்னவராம் மறவர் குல மாணிக்கமாம், முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க" என்கிற பாடல் முக்குலத்தோர் என அழைக்கப்படும் மூன்று சாதியினரையும் உசுப்பேத்திவிட்டது.
கார்த்திக் நடித்த 'அமரன்' படத்தில் "நீ வீரமான ஆம்பிளை மறவர் குல மணிப்பிள்ளை” என்கிற பாடல் வரி வரும். இந்தப் பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் திரையிடச் சொல்லி மறவர் பேரவையினர் வள்ளியூர் சித்ரா அரங்கை அடித்து நொறுக்கினர். வீரன் என்று பொருள்படும் மறவன் என்கிற வார்த்தையை தனது சாதியைக் குறிப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டனர். அந்தப் படத்தில் கார்த்திக் கதாநாயகன் என்பதால் அவர்கள் அப்படி நினைத்ததில் வியப்பில்லை. இவ்வாறாக மறவர் சமூக இளைஞர்களை 20 வருடமாக அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல விடாமல், தனது வர்த்தக நலனிற்காக சாதிய வெறியூட்டி வளர்த்து வருகிறது, வைத்திருக்கிறது தமிழ் சினிமா. 'தேவர் வீட்டு பொண்ணு', 'மறவன் மகள்' என படத்தின் தலைப்பிலேயே சாதிப் பெருமை பேசும் திரைப்படங்களும் ஏராளம். வன்முறைக்கு எதிராக எடுத்ததாகக் கூறப்படும் 'தேவர் மகன்', 'விருமாண்டி' போன்ற திரைப்படங்களும் தென் தமிழக கிராமங்கள் வன்முறைக் களமாக மாறுவதற்குத்தான் உதவி செய்தது. "டே புள்ளக் குட்டிய படிக்கவைங்கடா" என்று கமல் அறிவுரை கூறும் கிளைமாக்ஸில் மறவர் சமூகத் தோழர்கள்
தூங்கிப் போனார்கள். படம் முழுக்க வரும் மறவர் சாதிப் பெருமிதங்களிலும், "தேவர் காலடி மண்" என்கிற வரியிலும் சொக்கிப் போனார்கள். அன்று மயங்கியவர்கள்தான் இன்று வரை எழவில்லை. தேவர் ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு அதிக அளவில் பாடல்களை தனது படங்களில் கொடுத்து உதவியிருக்கிறார் கமலகாசன். சாதி மறுப்பு மணத்தை மய்யமாக வைத்து வெளிவந்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒபனிங் சாங்கில் தேவர் சமூகத்தைப் புகழ்ந்து பாடல் வரும். "சூரியனை காலையில உதிக்கச் சொன்னது தேவரு" என்று துவங்கும் இந்தப் பாடல் தேவர் ஜெயந்தியன்று அதிகாலையிலேயே மதுரைவீதிகளில் ஒலிக்கும். சாதி மறுப்பிற்கு சரியான தீர்வினை பாரதி கண்ணம்மா திரைப்படம் முன் வைக்கவில்லை.
கள்ளர்களுக்கு அடுத்து கவுண்டர்கள்
தேனிக்கு அடுத்தபடியாக நமது இயக்குனர்கள் களம் காண்பது பொள்ளாச்சிதான். பொள்ளாச்சின்னு முடிவு பண்ண உடனே அடுத்து இயக்குனர்களின் நினைவிற்கு வருவது கவுண்டர்தான். பெரிய கவுண்டர் பொண்ணு, நாட்டாமை, சின்னக் கவுண்டர், எஜமான் என பல படங்கள் கொங்குநாட்டு சாதிப் பெருமையைப் பேசின. நிலக்கிழார்களின் பெருமையையும், சாதிப் பெருமையையும் இணைத்தே இது போன்ற படங்கள் வெளிவந்தன. தன்னை ஒரு பரிசுத்த இனமாக எண்ணி மாயையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவுண்டர் சமூகத்தினரை மிகவும் பிற்போக்காக சிந்திக்க வைக்கும் இது போன்ற திரைப்படங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. 90ன் தொடக்கத்தில் வெளிவந்த சேரன் பாண்டியன், கவுண்டர் சாதிப் பெருமையை உரசிப் பார்த்த படம் என்கிற வகையில் பாராட்டலாம்
இந்துத்துவ அடிவருடி இயக்குனர் ஹரியின் திரைப்படங்கள்
கமர்சியல் பார்முலாவிற்காக சாதியமைப்பையும், இந்துத்துவ கருத்தியலையும் கதாநாயக பிம்பத்துடன் திணிப்பவர் இயக்குனர் ஹரி. தமிழ், அருள், சாமி, சிங்கம், வேங்கை என இவருடைய அனைத்துப் படங்களும் அடிப்படைவாத குடும்ப அமைப்பையும், சாதியத்தையும் தூக்கிப்பிடிப்பவை. 'சிங்கம்' படத்தில் கதாநாயகன் தன் சாதி, ஊர், குடும்பம், சொந்தம்தான் எனக்குப் பலம் என்று சொல்லும் வசனம் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு விடுக்கும் சவால்.
மண்ணையும் மக்களையும் படம் பிடித்த இயக்குனர்கள்
சமூகத்தில் இருப்பதைத்தான் இயக்குனர் படம் எடுக்க முடியும். சாதியைக் காண்பித்தாலே தவறு என்றால், இந்த சமூகத்தின் எதார்த்த சினிமாவும் இருக்காது, இலக்கியங்களும் இருக்காது. ஆனால் சாதிப் பெருமையை தம்பட்டம் அடிக்கும் விதமாக அடிப்படைவாத சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது கண்டனத்திற்குரியது. அந்த வகையில் சாதியின் இருத்தலை மிகையுமில்லாமல் குறையுமில்லாமல் படம் பிடித்த இயக்குனர் பாரதிராஜா. வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, நாடோடிக் காதல், கிழக்குச் சீமையிலேயே, கருத்தம்மா, பசும்பொன், அன்னக் கொடி என அனைத்துப் படங்களிலும், சாதியும் காதலும் சரி பாதி கலந்தே கதை இருக்கும். காதல் அற்புதமானதாகவும், சாதி அருவருப்பானதாகவும் காட்டப்பட்டிருக்கும். பெரும்பாலும் பிரான்மலைக் கள்ளர் சமூகத்தை அடிப்படையாக வைத்தே இவரது கதைகளம் இருக்கும். கள்ளர் சமூக வாழ்வு, மணஉறவு, பெண்களின் நிலை என அனைத்தையும் அப்பட்டமாக படம்பிடித்திருப்பார். பாரதிராஜாவின் படங்கள் கரிசல்மண்ணின் கனிவையும், காட்டம் நிறைந்த குணத்தையும் தமிழ்ச் சூழலுக்கு எடுத்தியம்புகிறது. கருத்தம்மா திரைப்படம் பிரான்மலைக் கள்ளர் சமூகத்தில் பெண் சிசுக் கொலை செய்யும் கலாச்சாரத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும். பசும்பொன் படத்தில் பெண்களுக்கான மறுமண உரிமை மறவர் சமூகத்தில் இருக்கிறது என்பதை கொண்டாடியிருப்பார்.
இறுதியாக வெளிவந்த அன்னக்கொடி திரைப்படத்தில் சக்கிலியர் சமூக ஆணிற்கும், பிரான்மலைக் கள்ளர் சமூகப் பெண்ணிற்கும் இடையே ஏற்படும் அன்பிற்குத் தடையாக இருக்கும் சாதிய மனநிலையை சாடியிருப்பார். கிழக்குச் சீமையிலே படத்தில் கள்ளர் சமூகத்தில் திருமண உறவை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் வக்கிரங்களையும், வன்முறைகளையும் காட்சிப்படுத்தப்படுத்தியிருப்பார். பாரதிராஜா திரைப்படங்களில் காண்பிக்கப்படும் சாதிய அமைப்பு எதார்த்தமானவை மட்டுமல்ல சாதி ஒழிப்பு அரசியல் பேசுவோர்க்கு சமூகத்தைச் சொல்லித் தரும் கல்வியாகவும்
அமைகிறது. இதைப் போல்தான் தங்கர்பச்சானின் திரைப்படங்களும். வடதமிழக வன்னியர்களின் வாழ்வியலை எடுத்தியம்பும் இவரது படைப்புகளில், சாதிப் பெருமிதம் இல்லை, வன்னியர்களை ஆண்ட பரம்பரையாக சித்தரிக்கும் வசனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அனைத்துப் படங்களிலும் வன்னியர்கள் விவசாயக் குடிகளாகவும், நாகரீகம் தீண்டாத கிராமத்து மனிதர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். ஒன்பது ரூபாய் நோட்டு, அழகி போன்ற திரைப்படங்கள் மனித மனதை இளக வைக்கும் காவியங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பாரதிராஜாவும், தங்கர்பச்சானும் தனிப்பட்ட முறையில் சாதிஉணர்வாளர்களாக இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் விவாதித்தது அவர்களின் படைப்புகளை மட்டுமே.
பாலச்சந்தரும் பாரதிராஜாவும்
பாரதிராஜா கள்ளர் உணர்வாளர், தங்கர்பச்சான் வன்னிய வெறியர் என்று சினிமா ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால், இடஒதுக்கீட்டிற்கு எதிராக படம் எடுக்கும் பாலச்சந்திரை 'பார்ப்பன வெறியர்' என்று விளிப்பதில்லை. பார்ப்பன நலனிற்காக இயங்கும் பாரதீய சனதாவை தேசியக் கட்சி என்றும், சாதி மறுப்புத் திருமணங்களை அங்கீகரிக்கும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளை சாதிக் கட்சிகள் என்றும் அடையாளப்படுத்தும் நமது பத்திரிக்கைகள் போல்தான் நமது சினிமா விமர்சகர்களும் இருக்கின்றனர். சமூக எதார்தத்தில் சாதி இருப்பதை பதிவு செய்யும் பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஆய்விற்குரியவை; சாதி இல்லை என்று சொல்லி படம் எடுக்கும் பாலச்சந்தரின் திரைப்படங்கள் ஆபத்தானவை என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.
விடுதலைக்கான ஆயுதமாக சினிமா மாறவேண்டும்
ஆரம்பகாலத் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் , சிவாஜி ஆகியோர் பிள்ளை, முதலியார் சாதி கதாபாத்திரத்தில்தான் வருவர். 80களுக்குப் பிறகு கிராமங்களுக்கான தமிழ்த் திரை வந்தபோது இடைநிலை சாதிப் படைப்பாளிகளின் வருகை அதிகரித்தது. சிவப்பு சிந்தனை ஆதிக்கம் செலுத்திய சிவப்பு மல்லி திரைப்படத்தில், “பள்ளு, பறைகள் விடுதலை" என்கிற தொனியில் பாடல் வரி எழுதப்பட்டது. திராவிட இயக்க சிந்தனை புரையோடிய காலத்தில் தன்மானம், சுயமரியாதை போன்ற வசனங்கள் ஆக்கிரமித்தன. "இல்லை சாதி மதமும் இல்லை" என்று குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் அறிவுரை வழங்கியதில் திராவிட இயக்க கருத்தியல் ஆதிக்கம் செலுத்தியது. திரைப்படங்களில் கள்ளரோடு பள்ளரும் இணைய வேண்டும் என்று 60 வருடங்களுக்கு முன்னரே திராவிட இயக்க கலைஞர் கலைவாணர் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இயக்குனர் ஜனநாதனின் பேராண்மை திரைப்படம் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வெளிவந்த அழுத்தமான முதல் திரைப்படம். பழங்குடியினரை கதாநாயகனாக மட்டுமல்லாமல சித்தாந்தவாதியாக சித்தரித்த விதம் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுகிறது. 'காதல்' திரைப்படம் போகிற போக்கில் சாதியின் வன்மத்தை பறைசாட்டியது. சினிமா என்கிற தொழில் நுட்பத்தை சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எளியவர்களின் கையில் கலை வரும்போது சினிமா நமக்கானதாக மாறும். அந்நாளை நோக்கித்தான் தமிழ் சினிமா நகர்த்தப்பட வேண்டும். அந்த நம்பிக்கையை இளம் படைப்பாளிகள்தான் நமக்குத் தர வேண்டும். சாதி உணர்வை சந்தையாக்கி காசாக்கிப் பிழைக்கும் சில இயக்குனர்களுக்கு கீழ்க்கண்ட பாடல்வரிகளை படிப்பதன் மூலம் புத்தி வந்தால் மகிழ்ச்சி
“துப்பு கெட்ட தேசம் , பொடி வைத்து பேசும், சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செய்து வைத்த மோசம்”
நன்றி - ஜீவசகாப்தன்
No comments:
Post a Comment