ஆண்_ பெண் காதல் அதிகரித்து வரும் கால கட்டம் இது. அலுவலகம், கல்லூரிகள் முடிந்தபின் கடற்கரை-யிலும் பூங்காக்களிலும் இணை இணையாக அமர்ந்து உரையாடி மகிழ்கின்றனர்.
திருமணப் பேச்சுகள் அவர்களிடம் முக்கியமாக தலை தூக்கி நிற்கிறது. வீட்டில் எதிர்ப்பு என்பதுதான் முக்கிய-மானதாகவும் இருக்கிறது.
இந்த மனநிலையைப் புரிந்து கொண்ட சில மூதாட்டிகள் இந்த இணையர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள்.
கவலைப்படாதீங்க, உங்க கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். இரண்டு வருஷங்களில் குழந்தையும் பிறக்கும் உங்கள் முகராசி அப்படி! எதற்கும் இந்தக் கயிற்றைக் கையில் கட்டிக் கொள்ளுங்கள் நெனைச்சது நடக்கும் என்று இனிக்க, இனிக்க, வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள்.
உச்சி குளிர்ந்து போகிறது.
பாட்டி சொல்லுவது கண்டிப்பாக நடக்குமா?
நடப்பதாவது... இதுவரை நான் சொன்னது நடக்காமல் போனது கிடையாது என்னைப்பற்றி விசாரித்துப் பாருங்கள்
அவ்வளவுதான். பாட்டி சொல்லும் பணத்தைக் கொடுத்து கயிறுகளையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.
ஆமாம், இவர்கள் படித்தவர்கள்தானே - காதல் செய்யும் முன் ஜோதிடம் கேட்டா ஜோடி சேர்ந்தார்கள்?
பாட்டி எதை வைத்து அனுமானிக்கிறார்? அவர்களைப் பற்றி என்னதான் பாட்டிக்குத் தெரியும்? முன்பின் அறிந்தவரா?
அப்படியிருக்கும்போது காதல் ஜோடிகள் என்று யூகித்து அறிந்து அவர்களுக்கு முன் தோன்றி நான்கு வார்த்தைகளை நச்சென்று சொன்னவுடன் பாட்டி விரித்த வலையிலே வீழ்ந்து விடுகிறார்களே!
காதல் முறிவதாகவே வைத்துக் கொள்வோம். அந்தப் பாட்டியை எங்கே சென்று தேடுவது?
பகல் எல்லாம் பிச்சை எடுத்துவிட்டு, மாலை நேரங்களில் கடற்கரைகளில் ஜோடி சேருவோரிடம் தம் கை சரக்கை அவிழ்த்துக் கொட்டிப் பணம் பறிக்கும் இந்தப் படிக்காத பாட்டிகள் இந்தப் படித்த முட்டாள்களைவிட அறிவாளிகள் என்பதை ஒப்புக் கொள்ளத் தானே வேண்டும்!
காதல் செய்யும்போது ஜாதகம் _ கீதகம் எல்லாம் பார்ப்பதில்லை. ஜாதி மாறிக்கூட திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள்.
அந்தக் கல்யாணத்தை எப்படி நடத்துகிறார்கள்? புரோகிதனை அழைத்து நடத்துகிறார்கள்.
ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ள முன்வந்தபோது கோத்திரங்கள், சாத்திரங்கள் முன்னே வந்து நிற்பதில்லை. கல்யாணம் செய்யும்போது மட்டும் பார்ப்பான் வந்து விடுகிறானே அது எப்படி? புரோகிதனை அழைத்து, மந்திரங்களை ஓதித் திருமணம் செய்து கொண்ட பின் விவாகரத்து வருவது ஏன்?
புரோகிதனை அழைத்து மந்திரங்களைச் சொல்லச் செய்துதான் விவாஹ சுபமுகூர்த்தத்தை நடத்திக் கொண்டோம். ஆனாலும் எங்கள் வாழ்வில் முறிவு ஏற்பட்டு விட்டது என்று கூறி, அந்தப் புரோகிதனை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுத்தாதது ஏன்?
கேள்விகள் இருக்கின்றன; பதில் சொல்லத்தான் படித்தவர்களையும் காணோம்.
-- கருஞ்சட்டை "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
No comments:
Post a Comment