மரணம் – ஆவி – மறுபிறவி – 4

மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் பல புரியாத, விடை காண இயலாத சம்பவங்கள் பலவும் இருக்கின்றன. உதாரணமாக லுரன்சி வென்னம் என்னும் ஒரு வயதுக் குழந்தை, மேரி ரோப் என்பவர் இறந்த சில மாதங்களில் அவரைப் போலவே பேச, நடக்க, அங்க அசைவுகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. அச்சு அசலாக மேரி ரோப் சிறுவயதுக் குழந்தையாக இருந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அதன்படியே நடக்க ஆரம்பித்தது.

மேடம் மேரி


மேரி ரோப்பின் மறுபிறவி தான் இந்தக் குழந்தை என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், மேரி ரோப் உயிருடன் இருக்கும் போதே இந்தக் குழந்தை பிறந்து விட்டது. ஆகவே மேரி ரோப்பின் ஆன்மா இந்தக் குழந்தையின் உடலில் புகுந்து விட்டது, அதாவது அவரது ஆவி, லுரன்சி என்னும் இக் குழந்தையின் உடலில் புகுந்து கொண்டு விட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அப்படியானால் உண்மையான லுரன்சி வென்னத்தின் ஆன்மா அல்லது ஆவி என்ன ஆனது என்பதை ஆய்வாளர்களால் கண்டறிய இயலவில்லை.
மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் இவையெல்லாம் புரியாத புதிர்களாக உள்ளன.

மற்றொரு சம்பவத்தையும் பார்ப்போம்.


சிறுவன் நைலேங்


திபெத்தில் வாழ்ந்தவர் நைலேங் என்பவர். அவர் திடீரென நோயுற்றுக் காலமானார். ஆண்டுகள் சில கழிந்தன. புத்தமதத் துறவியாக – திபெத்தியர்களின் மௌன்காக (monk) ’சௌகுன் ராஜ் சுதாஜார்ன்’ என்னும் சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் தான் முற்பிறவியில் வாழ்ந்த நைலேங் என்று கூறினார். இதை இயான் ஸ்டீவன்சன் போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.



டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

ஆராய்ச்சியின் முடிவில் நைலேங் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே ’சௌகுன் ராஜ்’ பிறந்து விட்டது தெரிய வந்தது. ஒருவர் இறந்த பிறகு தான் அவர் மறுபிறவி எடுக்க முடியும், ஆனால் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவர் மறுபிறவி எடுத்திருப்பதாகக் கூறுவதை ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், ’சௌகுன் ராஜ் சொன்ன முற்பிறவி பற்றிய விஷயங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் இந்தச் சம்பவத்தை ‘புரியாத புதிர்’ என்றும் ’couldn’t find an explanation for the discrepancy’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment