அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. முதலில் ஆசைப்பட வேண்டும். பின்னர் அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுகிறோம். அவளிடம் விருப்பத்தைக்கூற வேண்டும். அவளோடு சேர்ந்து வாழ வேண்டும். அவளை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க நல்ல வேலை வேண்டும். நல்ல வாழ்க்கை அமைய ஆசை.
இந்த ஆசையை அடைய நிறைய பணம், முயற்சி எடுப்பதற்கு நேரம், இவை இரண்டும் முக்கியமானவை.
நேரம்
நேரம்என்பது நமது கையில் உள்ளது என்பதற்கு உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு ‘Software Engineer’- எடுத்துக் கொள்வோம்.
காலை 8 மணிக்கு அலாரம் வைத்து 9 மணிக்கு எழுவார். அவசரமாகக் குளித்து, அரைகுறையாகச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் 10.30 மணிக்கு ஆபீஸிற்குச் செல்வார். மதியம் 3 அல்லது 4 மணிக்கு வேண்டாத எதையாவது சாப்பிடுவார். இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். 9 மணிக்கு சாப்பிடுவார் பிறகு 11 மணி வரை டி.வி. அல்லது படம் பார்ப்பார். பிறகு 1 மணிவரை இண்டர்நெட்.
இவர் சரியாக சாப்பிடுவது இல்லை. யாருடனும் சரியாக பேசுவது இல்லை. ஆபிஸ் வேலையே கதி என்று இருப்பார். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நேரமின்மையால் தன்னுடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நேரம் செலவிட முடிவதில்லை.
இப்படி ஒரு வாழ்க்கை அவசியமா?
ஒரு வருடத்தின் பயனை, அந்த வருடம் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மாதத்தின் பயனை குறை மாதக் குழந்தையைப் பெற்ற தாயிடம் கேட்க வேண்டும்.
ஒரு வாரத்தின் பயனை ஒரு வார இதழின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.
ஒரு மணி நேரத்தின் பயனை காத்திருந்த காதலியிடம் கேட்க வேண்டும்.
ஒரு நிமிடத்தின் பயனை விமானத்தைத் தவறவிட்டவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு நொடியின் பயனை விபத்தில் உயிர் பிழைத்தவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மில்லி செகன்டின் பயனை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றவனிடம் கேட்க வேண்டும்.
அம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான், நாட்டின் பிரதமருக்கும் 24 மணிநேரம் தான். ஒரு சிலரால் மட்டும்தான் அவர்களது ஆசையை நிறைவேற்ற முடிகிறது.
அந்த ஒரு சிலர் நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் அவர்களால் வெற்றி அடைய முடிகிறது.
செந்திலும், அவருடைய மனைவி கீதாவும் இன்று இரவு அவர்களுடைய சொந்த ஊரான கோயமுத்தூருக்குக் கிளம்புகிறார்கள். காலையில் சாப்பிடும்போது கீதா கூறுகிறார், ‘டிக்கெட் இன்டெர்நெட்டில் இருக்கிறது, பிரிண்ட் அவுட் எடுத்துவரவும்என்று. அதே சமயம் மேனேஜர் தொலைபேசியில் அழைத்து ‘Promotion Recommendation List’-, மூன்று நாட்களாக கேட்கிறேன். இன்று கட்டாயம் அனுப்புஎன்று கூறுகிறார்.
செந்தில் காரில் போகும்போதுதான் ஞாபகம் வருகிறது. Mobile Bill இன்றும் கட்டவில்லை என்று. காரில் சென்று கொண்டிருக்கும்போதே மனைவி கீதா அலைபேசியில் அழைத்துக் கூறுகிறார். குழந்தைக்கு School Fees கட்ட இன்று கடைசிநாள், நான்கு நாட்களுக்கு முன்பே கூறினேனே என்று சொல்கிறாள். இதற்கிடையில் நண்பன் அழைத்து மதியம் வெளியில் சாப்பிடப் போவோம் என்று சொல்கிறான்.
இவை அனைத்தையும் எப்படிச் செய்யப் போகிறோம் என்ற யோசனையில் காரை ஓட்டியதால் Accident நடக்கிறது. கையில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான் செந்தில்.
இவை அனைத்திற்கும் காரணம் என்ன? செந்தில் தனது நேரத்தைச் சரியான முறையில் கையாளத் தெரியாததால் நடந்தவை.
‘Time Management’ அதாவது நேரத்தை திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.
1. அவசியம், அவசரம்
2. அவசியம், அவசரம் இல்லை
3. அவசியம் இல்லை, அவசரம்
4. அவசியம் இல்லை, அவசரம் இல்லை
காரியங்களை மேற்கூரிய நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வந்து அதை நிறைவேற்ற வேண்டும்.
உதாரணத்திற்கு, உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வெளியில் கிளம்பும்போது Car Repair, முதலாளி கூறும் அவசர வேலை போன்றவை அவசியமானது, அவசரமானது.
தினமும் உடற்பயிற்சி, குழந்தைகளோடு நேரம் செலவிடுவது, Health Checkup செய்வது, Passport போன்றவை எடுப்பது போன்றவை அவசியமானது, அவரசம் இல்லாதது.
நண்பனிடம் பேசுவது, டி.வி.யில் நல்ல படம் பார்ப்பது, நண்பன் படத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டு அழைப்பது போன்றவை அவசரமானது, அவசியமில்லாதது.
டி.வி.யில் சீரியல் பார்ப்பது, ஒரு படத்தை பல தடவை பார்ப்பது, யாரென்றே தெரியாதவர்களிடம் வெட்டி அரட்டை அடிப்பது, பகல் தூக்கம் போன்றவை அவசியமும் இல்லை. அவசரமும் இல்லை.
இதுபோல நம் காரியங்களை அட்டவணைப்படுத்தி எதை முதலில் செய்ய வேண்டும். எதைக் கடைசியாக செய்ய வேண்டும் என்று தீர்மானித்துச் செய்தால் நாம் ஆசைப்பட்டதை சுலபமாக அடையலாம்.
செந்திலின் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு Fees கட்டுவது, Mobile Bill கட்டுவது போன்றவை நான்கு நாட்களுக்கு முன்னால் அவசியம், அவசரம் இல்லை என்ற நிலையிலேயே செய்திருந்தால் அது அவசியம், அவசரம் என்ற நிலைக்கு வந்திருக்காது.
மேல் கூறிய அட்டவணைப்படி நம் காரியங்களை செயல்படுத்தினால்,
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்.
நன்றி:ரஜினிகாந்த் கே   

No comments:

Post a Comment