வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

உலகம் ஒரு மைதானம். இதில் வெற்றி பெறுபவர்களையும், தோல்வி பெறுபவர்களையும் விமர்சனம் செய்கிறார்கள். தோல்வி பெறுபவர்கள் மேலும் மேலும் முயற்சியால் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ஆனால், தோல்வி பெற்றவர்களை முதலில் தாழ்த்திப் பேசிய விமர்சகர்கள், அவர்கள் வெற்றி பெற்ற உடன் உயர்வாகப் பேசுகிறார்கள். அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே பொழுதைக் கழிக்கும் பெரும்பாலனவர்களுக்கு, அந்த சமயத்தில் தன்னுடைய வாழ்நாளின் நேரம் வீணாகக் கழிகிறதே என்று கூடத் தெரிவதில்லை.
ஒருவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் குறைசொல்லுபவர்கள், முதலில் சுயமரியாதையை இழக்கிறார்கள். பேசப்பட்டவருக்கு அந்த விசயம் தெரியவரும் போது, பிறர்தம் மேல் வைத்திருக்கும் நன்மதிப்பைத் தாங்களாகவே குறைத்துக் கொள்கிறார்கள். தாம் பேசிய வார்த்தைகள் உண்மை இல்லை என்று தெரியவரும்போது மனதளவில் வறுத்தப்படுபவர்கள் தாம் மனிதர்கள்.
‘ஒருவர் நம்மைப் பார்த்து பாவம் என்று சொல்வதை விட, பொறாமைப்படுவதே மேல்Ð’ என்று சொல்லியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘பழுத்த பழத்திற்குத் தான் அடி விழும்Ð’ என்பது பழமொழி. ஒருவர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்கிறார் என்றால், ஏதாவது ஒரு விசயத்தால் நம்மால் அவர் தூண்டப்பட்டிருக்கிறார் என்பது அர்த்தம். அவரது எண்ணங்களுக்கு நமது பதிலை, செயல்களால் உணர்த்தினாலே போதும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தோமானால் பிறரது கருத்துக்களுக்குச் செவி கொடுக்கத் தேவையில்லை. போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும். நமது கடமையை முழுமையாக செய்து அதில் நிம்மதி அடைவோம்.
பொதுவாக, வாக்குவாதத்தில் ஈடுபடும்பொழுது அப்போதைக்கு அந்த வாக்குவாதத்தில் வேண்டுமானால் ஜெயித்துவிடலாம். ஆனால் அச்சமயத்தில் அதனினும் மேலான மனிதர்களை இழக்க நேரிடுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சமயங்களில், உலக மொழியான ‘மௌன மொழி’ மிகப்பெரிய பிரிவுகளைத் தவிர்த்துவிடும் என்பது அறிஞர்கள் கூறிய உண்மை.
ஒருவருக்கு அறிவுரை கூறும்பொழுது நிச்சயம் நேரம் பார்த்து தான் பேச வேண்டும். ‘தவறு செய்த கையோடு புத்தி சொல்லக்கூடாது; குத்திக்காட்டுவது போல அறிவுரை இருத்தல் கூடாது’ என்றிருக்கிறார் வேதாத்திரி மகரிஷி. அன்பான வார்த்தைகள் எப்பொழுதும் மனதிற்கினிய மருந்தாகும்.
எனது தந்தை அதிக அளவில் புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனாலும் அனுபவ அறிவால் அவர் கூறிய வார்த்தைகள், பேரறிஞர்களின் அறிவுரை வாக்காக அமைந்திருக்கிறது. எனது தந்தைக்கு பிடித்தமான, அடிக்கடி எங்களிடம் கூறும் குறள், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அக்குறளின் வழி நடைபிறழாமல் வாழ்ந்தவர். அனைவரிடமும் அன்பாகப் பேசும் குணமுடையவர். திருமணம் முடித்து நான் பிறந்த வீட்டிற்கு வந்தபோதும் கூட என்னை மடியில் உட்கார வைத்துக் கொள்வார். ஏதாவது, அறிவுரை கூறும்பொழுது அதை அலட்சியப்படுத்தினால், ‘நான் சொல்லும்போது உங்களுக்குத் தெரியாது. நான் இல்லாதபோது தான் அப்பா அன்றைக்கே சொன்னாரே என என் போட்டோவைப் பார்த்து வருத்தப்படுவீர்கள்’ என்பார். பெரும்பாலான நம்மவர்கள் அறிவுரை கூறுபவர்களை அப்போதைக்கு கண்டுகொள்வதில்லை. பிறகுதான் யோசிக்கிறோம். ஒருவர் வாழ்ந்த நாளின் சிறப்பும், மதிப்பும் அவரது இறந்த நாளில் தான் அறியமுடியும் என்று கூறுவார் என் தந்தை. உண்மைதான், அவரது இறந்தநாளில் வீதியே நிறையும் அளவிற்கு கூட்டம் இருந்தது. அவரது அன்பான நெஞ்சம் கடவுளுக்கும் பிடித்துப் போகவே, தன்னிடம் அழைத்துக் கொண்டார்.
உயர்ந்த எண்ணங்களையே எப்போதும் எண்ண வேண்டும். எண்ணங்கள் தான் செயல்களாக வெளிப்படும். நமது செயல்களால் எப்போதும் பிறருக்கு நன்மையே கிடைக்க வேண்டும். ‘நல்லெண்ணெய் தீபச் சுடருக்கு ஆதாரமாக இருப்பது போல, நல்லெண்ணம் தான் மனிதனின் வாழ்விற்கு ஆதாரமாக அமையும்’.
நம்மால் முடிந்தவரை கோபத்தை அடக்கிக் கொண்டு கனிவாகப் பேசப் பழகுவோம். குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கிறேன் பேர்வழி என்று சதா அவர்களை அதட்டிக் கொண்டே இருப்பதால் பெற்றவர்களைப் பார்த்தால் கூட மிலிட்டரியைப் பார்த்தது போல் பயப்படுகிறார்கள் குழந்தைகள். இதனால் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கும் குழந்தைகளை அடித்து ‘மம்மி’ என்று சொல்லவைக்கும் அம்மாக்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளிடம் மிரட்டி வேலை வாங்க முற்பட்டால், வேண்டா வெறுப்பாக அரைகுறையாகத்தான் அந்த வேலையைச் செய்வார்கள். மாறாக, தோள்தட்டி அன்புடன் சொன்னால் அந்த வேலையை ஈடுபாட்டுடனும், விருப்பமுடனும் செய்வார்கள். பெற்றவர்களிடம் நட்புறவுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளிடம் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது.
கடுஞ்சொற்கள் நமது நெருங்கிய நெஞ்சங்களையும் நம்மிடமிருந்து விலக்கிவிடும். நமது வருகைக்காக பிறர் காத்திருக்க வேண்டுமே தவிர; ‘அவர் இந்தப் பக்கமாக வருகிறார்; நான் அந்தப் பக்கமாக சென்றுவிடுகிறேன்’ என்று பிறரை பயந்தோடச் செய்யக் கூடாது.
எவ்வளவு நண்பர்களுக்குத் தெரியும், தமது சக நண்பனின் ஆர்வம் என்ன? திறமை என்ன? என்று. அவ்வாறு தெரிந்திருந்தால், அதை வெளிக்கொணர ஏதாவது விதத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறார்களா? பெரும்பாலான நண்பர்கள் வெட்டியாக பொழுதைப் போக்க மட்டுமே ஒன்றுகூடுகிறார்கள். நட்பிற்கு உதாரணமாக, கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் மட்டுமே இன்னும் முன்வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய இளைஞர்களில் சிலர் தமது பெற்றோரின் அறிவுரையை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுத்தள்ளுகிறார்கள். அதே அறிவுரையைத் தனது அபிமான நட்சத்திரம் ‘கண்ணா! என் அம்மா அப்பவே சொல்லீருக்காங்க’ என்றால், அதை தனது மனதில் நிறுத்தி வாழ்நாளின் மந்திரச் சொல்லாக கடைபிடிக்கிறார்கள். சோப்பு டப்பா முதல் லேப்டாப் வரை பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் தான் அதை பிரபலப்படுத்த முடிகிறது.
எப்போதும் தமக்காகவே சிந்தித்துக் கொண்டிருக்காமல், தன்னுடன் இருப்பவர்களையும், தனது சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவது பற்றியும் சிந்திப்போமானால் மற்றவர்களுடனான நல்லுறவு மேம்படும்.
தனது வாழ்நாளைச் சிறப்பித்துக் கொள்ளும் உறுதிமொழி எடுக்க, ‘No Worry from January’ என்று புத்தாண்டிற்காக காத்திருக்காமல், இன்றே தன்னம்பிக்கையுடன் செயல்படுவோம். ஒரு கை இல்லாமல் கூட வாழலாம். ஆனால் ‘தன்னம்பிக்கை’ இல்லாமல் வாழமுடியாது. வருடத்தின் ஒவ்வொரு விடியலையும் இன்பமாக வரவேற்று, நம்முடைய வேலைகளை சிறப்பாக செய்வதோடு, நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்வோடு வைக்க முயற்சி செய்வோம். ‘வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை’.

No comments:

Post a Comment