“எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைக் கொடுத்துள்ளான்; ஆனால், அவற்றின் கூட்டினுள் வைக்கவில்லை”. இந்த வரிகள் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியவை.
பறவைகளுக்கான உணவு உள்ளது; ஆனால் அவை வசிக்கும் கூட்டினுள் இல்லை. அந்த உணவு இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு சென்று உண்ணவேண்டும், வேறு பறவைகள் முந்திவிட்டால், உணவைத்தேடி வேறு இடம் செல்ல வேண்டும், உள்ளுணர் அறிவு (Intuition) என்ற துணைகொண்டு தம் வாழ்நாளை மிகவும் இயல்பாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைகின்றன பறவைகள்.
இந்த உள்ளுணர் அறிவு நமக்கு இல்லையா என்ற கேள்வி எழும். உள்ளது. ஆனால், அது சொல்வதைக் கேட்கப் பொறுமையில்லாமல் பழக்கத்தின் காரணமாக நாம் செயல்படுவதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.
கடின உழைப்பு
பட்டினியால் பறவை இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. இடைவிடா முயற்சி நாம் விரும்புவதைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்குப் பறவைகள் சிறந்த உதாரணம். உணவுக்காக நம் வீட்டுக்கு வரும் பறவைகள் எந்த அளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.
வினாடி நேரம் தாமதித்தாலும், பாதிப்பு வரும் என்பதை நன்கு உணர்ந்து, மிக விரைவாகச் செயல்படுகின்றன பறவைகள். சுறுசுறுப்பு மகிழ்ச்சியைத் தரும்; மகிழ்ச்சி சுறுசுறுப்பைத் தரும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. சோம்பி இருந்தால் தம் வாழ்க்கையை இழந்து விட நேரும் என்பதை உணர்ந்தே செயல்படுகின்றன.
இத்தகைய சுறுசுறுப்பும் இடைவிடாமுயற்சியும், செயல்களின் மீது ஈடுபாடும் கொண்டு செயல்படுபவர்களிடம் வெற்றித்தேவதை கை குலுக்கும்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
உடல்நலம்
இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் பொக்கிசம் நம் உடல்தான். தினமும் இரவு உறங்கி, மறுநாள் காலை எழும் நாம், அன்றைய பணிகளுக்காக நம் உடலைத் தயார்படுத்துவதைப் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, குளியல், உணவுதேடல், பொழுதுபோக்கு (பாட்டுப்பாடுதல்), எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புநிலையில் செயல்படுதல் ஆகியன அவை நமக்குக் கூறுபவை. பெரும்பாலான சிறுவர்கட்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் சொல்லித்தரப்படவில்லை. காரணம், அவர்களது பெற்றோருக்கும் தெரியாததுதான். எனவே, சூரிய உதயத்துக்கு முன் எழுவதும் குளித்தபின்பே பணிகளைத் துவக்குவதும், ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்வதும், சரியான நேரத்தில் சத்தான எளிமையான உணவு உட்கொள்வதும் உடலை நலத்துடன் பராமரிக்கும்.
மனமகிழ்ச்சி
இயற்கையோடு இணைந்து வாழ்வதால் மனமகிழ்ச்சியாகவே பறவைகள் உள்ளன. எவ்வித வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளிலும், தனது உள்ளுணர் அறிவால் தேவைப்பட்டால் இடத்தை மாற்றிக்கொண்டு, கிடைத்ததை உண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றன.
மற்றபறவைகளோடு ஒப்பிடுவதும், அளவுக்கு அதிகமாக சேமிப்பதும், சோம்பி இருப்பதும் பறவைகளுக்கு என்னவென்று தெரியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தன் குரல் மூலம் (பாட்டாக) வெளிப்படுத்தி சூழ்நிலையை ரம்மியமாக்குகிறது.
ஒத்தும் உதவியும் வாழ்தல்
தம் சுற்றத்துடன் அன்பாக இருப்பதும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஆவண செய்வதும் பறவைகளின் உடன் பிறந்த குணங்கள். சுயநலமே இல்லாமல் வாழ்ந்து வருபவை. பாதுகாப்பு உணர்வுடன் கூட்டமாகப் பயணிப்பவை. பறவைகட்கு விரோதி – வலிமை வாய்ந்த பறவைகள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் தான்.
வலிய பறவை, எளிய பறவையைத் தாக்குவதும், சில மிருகங்கள் தம் உணவுக்குப் பறவைகளைக் கொல்வதும் இயற்கையின் அமைப்பு. ஆனால், பகுத்தறிவு இருந்தும், விஞ்ஞானத்தில் முன்னேறியும், பிரபஞ்ச பரிணாமத்தை நன்கு உணர்ந்து கொண்ட பின்பும் மனிதன், தன் உணவுக்காகப் பறவைகளைக் கொல்வது, வளர்த்து பின் கொல்வது, மகிழ்ச்சிக்காக, அவைகளைச் சிறைப்படுத்தி வைப்பது மிருக குணங்களின் வெளிப்பாடாகவே உள்ளது.
தனது ஆற்றலை அறியாத காரணத்தால் தான், மனிதன் மிகவும் எளிய பறவைகளைச் சிறைப்படுத்தி (வளர்ப்பது)யும், உணவாக உண்டும் வாழ்கிறான். இதைப் பரிசீலித்து தெளிவு பெறவேண்டும்.
அன்புக்கு நான் அடிமை
அம்மா என்றால் அன்பு. அன்புக்கு பாரபட்சம் கிடையாது. சாதி, மத பேதங்களைக் கடந்தது அன்பு. உலகம் முழுவதுமுள்ள பறவைகளில் ஒவ்வோர் பிரிவும் (உதாரணம் கிளி, புறா, கோழி) ஒரே மாதிரியான சப்தம் (மொழி) மூலம் தம் எண்ணங்களை வெளிப்படுத்தி வாழ்கின்றன. தம் உயிர்காத்தல் என்பதுதான் அவற்றின் மிக முக்கியப் பணி.
ஆடம்பரங்களை என்றுமே விரும்பாத மனநிலையில் வாழ்கின்றன. தன் இனத்தில் ஒன்றுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், குழுவாகக் கூடித் தம் அன்பை வெளிப்படுத்தி தேவைகளைச் சமயோசிதமாய் தெரிவித்து, உதவி பெற்று அன்புடன் வாழ்கின்றன.
பிறந்தது முதல் இறக்கும் வரை உழைப்பு, உழைப்பு, ஓயா உழைப்பு தான். உழைப்பையே ஓய்வாக நினைத்துக்கொண்டு விருப்பத்தோடு செயல்பட்டு வருகின்றன. எந்தப் பகுதிக்கு, எந்த நேரம் சென்றால் உணவு கிடைக்கும் என்று தெளிந்து அந்த இடம் செல்வதை என்னவென்று சொல்வது?
சாதாரணப் பறவைகட்கு இவ்வளவு திறமை இருக்கும்போது, நமக்கு இந்தத் திறமைகள் இல்லையா? என யோசியுங்கள். நமக்கு அவைகளை விட ஏராளமான திறமைகள் உள்ளன. அவைகளைத் தெரியவிடாமல் செய்பவை, பொறாமை, பேராசை, ஈகோ (Ego) எனும் ஆணவம்.
எனவே, இவைகளை நீக்குவோம். வானம் பாடிகளாய், இந்த மனித வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்.
No comments:
Post a Comment