பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!

ண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்

"பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது" டி என் ஜா.
பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது டி என் ஜா.
புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.
பசுக் கொலை பற்றிய சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை செயல்படுத்துவதாக மத்திய பிரதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த சட்டம் கொடுமையானது என்று பல பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இந்திய பாரம்பரியத்தில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
கேள்வி :
‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை உங்கள் புத்தகம் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது.  இந்த முடிவுக்கு வருவதற்கு நீங்கள் பயன்படுத்திய முக்கிய ஆதாரங்கள் என்ன?
பதில்:
கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறேன்.
கேள்வி :
பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்களை கொடுக்க முடியுமா?
பதில்:
வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.
வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு   உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.
கேள்வி:
நீங்கள் இந்தக் கருத்தை விளக்குவதற்கு பழங்கால இந்திய ஆதாரங்கள் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், இடைக்கால அல்லது நவீன இந்தியாவில் பசுவை உணவுப்பொருளாக பயன்படுத்துவது குறித்த மற்ற “இந்து ஆதாரங்கள்” இருக்கின்றனவா?
பதில்:
வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.
‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கேள்வி:
பசுவின் புனிதம் என்ற தொன்மம் இந்துக்களின் மனத்தில் எப்படி தோன்றியது? உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு எதிராக பசுவின் புனிதம் பற்றிய கருத்துக்கள் நிலவிய நிகழ்வுகளும் கால கட்டங்களும் இந்திய வரலாற்றில் இருக்கின்றனவா? பழங்கால இந்தியாவில் பசுவை மத ரீதியாகவும் இந்து மதத்தின் புனித சின்னமாகவும் பார்க்கும் பாரம்பரியங்கள் இருந்தனவா?
பதில்:
போபாலில் ஒரு காட்சி. குப்பை குவியல்களை கிளறி உணவைத் தேடும் இது போன்ற பசுக்களை பராமரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
போபாலில் ஒரு காட்சி. குப்பை குவியல்களை கிளறி உணவைத் தேடும் இது போன்ற பசுக்களை பராமரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
வேத காலத்தில் பசு புனிதமானதாக இருந்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன. ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.
புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் இந்திய சமூகம் படிப்படியாக நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறும் போது சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரிய சமூக கலாச்சார மாற்றத்துக்கு வழி வகுத்தது. இதிகாசங்களிலும், புராணங்களிலும் கலியுகம் என்று விவரிக்கப்படும் மாற்றத்தின் இந்தக் கட்டம் சமூக மரபுகளிலும் பழக்கங்களிலும் பல மாற்றங்களையும் மாறுதல்களையும் கண்டது. முந்தைய பல பழக்கங்கள் கலியுகத்தில் தடை செய்யப்பட்டவையாக பார்ப்பன மத நூல்கள் பேச ஆரம்பித்தன. இந்த பழக்கங்கள் கலிவர்ஜ்யாக்கள் என்று அழைக்கப்பட்டன. இது தொடர்பான நூல்கள் கலியுகத்தில் பசுக்கொலை தடை செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றன.
பசு கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ‘தீண்டத்தகாத’ சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால், சில தர்மசாஸ்திர நூல்கள் இந்த செயல்களை மாறுபட்ட நடத்தைகள் என்ற அளவிலேயே பார்க்கின்றன என்பது கவனத்துக்குரியதாகும். தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது. 19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். இன்று கூட, கேரளாவில் 72 சமூகங்கள் செலவு அதிகமாகும் ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்லப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துத்துவா சக்திகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளும்படி அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்றன.
இவ்வளவு இருந்தும், உபனிஷத சிந்தனைகளில் வளர்ந்த அகிம்சை தத்துவம், புத்த ஜைன உலகப் பார்வைகளில் அதன் முனைப்பான தாக்கம், வைணவ மதத்தில் அதற்கு இருந்த மையப் பங்கு ஆகியவை கொல்லாமை பற்றிய கருத்துக்களை வளர்த்தன. விவசாய சமூகத்தில் அதற்கு இருந்த பொருளாதார மதிப்பின் காரணத்தால் பசு சிறப்பான முக்கியத்துவம் பெற்றது. பசுக்களை பார்ப்பனர்கள் தக்ஷிணையாக பெறுவதால் அவை கொல்லப்படுவதை விரும்பவில்லை.
கேள்வி:
பசுக்கொலை இந்தியாவில் எப்போதிருந்து அரசியல் பிரச்சனையாக மாறியது? இந்த விஷயம் தொடர்பாக ஏதாவது வரலாற்று இயக்கம் இருந்திருக்கிறதா? பசுவின் “உற்பத்தி செய்யப்பட்ட புனிதம்” அரசியல் ஆள் சேர்ப்புக்காக பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணங்களை நீங்கள் சொல்ல முடியுமா?
பதில்:
அரியானாவில் மாட்டை உரித்த 'குற்றத்துக்காக' ஐந்து தலித்துகளை எரித்துக் கொன்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள்
அரியானாவில் மாட்டை உரித்த ‘குற்றத்துக்காக’ ஐந்து தலித்துகளை எரித்துக் கொன்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள்
காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது. முகலாய பேரரசர்கள் (எடுத்துக்காட்டாக, பாபர், அக்பர், ஜஹாங்கிர் மற்றும் அவுரங்கசீப்) ஜைன அல்லது பார்ப்பனர்களின் பசுவின் மீதான மரியாதை, வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பசுக் கொலையின் மீது அளவான தடையை விதித்தனர். ‘பசுவையும் பார்ப்பனரையும் பாதுகாப்பதற்காக மண்ணில் அவதரித்த கடவுளாக’ கருதப்படும் ஷிவாஜி, “நாங்கள் இந்துக்கள், இந்த நாட்டின் முறையான உரிமையாளர்கள். பசுக் கொலையையும் பார்ப்பனர்கள் அடக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு ஏற்பில்லாத ஒன்று” என்று அறிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது. முறையான பசு பாதுகாப்பு இயக்கம், பஞ்சாபில் சுமார் 1870ல் சீக்கிய குக்கா (அல்லது நாம்தாரி) பிரிவினரால் தொடங்கப்பட்டு, 1882ல் தயானந்த சரஸ்வதி முதல் கோரக்ஷினி (பசு பாதுகாப்பு) சபையை ஆரம்பித்த போது வலுவாக்கப்பட்டது. பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களின் பசுக் கொலை பழக்கத்தை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.
இது 1880களிலும் 1890களிலும் பல மதக் கலவரங்களுக்கு வழி வகுத்தது. அதற்கு முன்பே பசுக் கொலை பற்றிய கருத்துக்கள் வலுவாகி வந்திருந்தாலும், 1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகு பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது. பசுக் கொலை பல இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக அசம்கர்க் மாவட்டத்தில் 1893ல் நடந்த கலவரங்கள். இந்த கலவரங்களில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், 1912-1913ல் அயோத்தியை வன்முறை உலுக்கியது. சில ஆண்டுகள் கழித்து 1917ல் ஷாஹாபாத் பேரழிவு ஏற்படுத்திய மத பெருந்தீயை எதிர் கொண்டது.
சுதந்திர இந்தியாவில் கூட பசுக் கொலை மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயமாக அரசியல் வானில் உருவெடுத்தது. 1966 இல், சுதந்திரம் அடைந்து சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய மதவாத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேசிய அளவில் பசுக் கொலையை தடை செய்யும் படி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அது இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு வன்முறையில் முடிந்தது, குறைந்தது எட்டு பேரின் இறப்புக்கும் இன்னும் பல பேர் காயமடையவும் வழி வகுத்தது. ஏப்ரல் 1979 இல், மகாத்மா காந்தியின் ஆன்மீக சீடர் என்று கருதப்படும் ஆச்சார்ய வினோபா பாவே பசுக் கொலையை தடை செய்ய மத்திய அரசை கோரி உண்ணா விரதம் இருந்தார்.
குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர். வேத காலத்திலும் சரி, அதைத் தொடர்ந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத மரபுகளின் அடிப்படையிலும் சரி “புனித” பசு எல்லா காலங்களிலும் புனிதமாக இருக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.
கேள்வி:
மாட்டிறைச்சி சாப்பிடுவது வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? அத்தகைய அங்கீகரிப்புகளும் எதிர்ப்புகளும் வரலாற்று ரீதியாகவே வளர்ந்திருக்க வேண்டும்.
பதில்:
தென் இந்தியாவில் சில பகுதிகளில் மாட்டிறைச்சி-உண்ணுவது வழக்கமாக இருக்கிறது, ஆனால் அதை பொதுமைப்படுத்த முடியாது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியினரும் தலித்துகளும் முஸ்லீம்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். வட கிழக்கு இந்தியாவின் மலை சமூகங்களும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். ஆனால் இதையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. முன்னாள் தெற்கு பீகாரின் பெரும்பான்மை பழங்குடியினர் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை.
கேள்வி:
நாம் பழங்குடி மக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்களை விட்டு விட்டால் கூட ஒரு கணக்கீட்டின் படி இந்துக்களில் 40 சதவீதம் பேர் இன்று மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இந்தியா முழுவதும் வசிக்கும் தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் செலவு குறைவாக கிடைக்கும் இறைச்சி. மத்திய பிரதேச அரசு சமீபத்தில் பசுக் கொலையை மட்டுமின்றி மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்துள்ளது. அந்த தடை கொடுமையானது என்று பலர் கருதுகிறார்கள்  அந்த சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
எந்த புத்திசாலி இந்தியனும் தனது கால்நடையை கொல்ல மாட்டான் என்பதே எனது கருத்து. அப்படி அவன் கொன்றால் அந்த சட்டத்தின் கீழ் அவன் தண்டிக்கப்படலாம். விலங்கு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பசுவுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிலைமை? சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது? பெருநகரங்களில் பசுக்கள் பணக்காரர்களின் ஆடம்பர கார்களுக்கும் ஏழைகளின் தள்ளு வண்டிகளுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துகின்றன. தூக்கி எறியப்பட்ட சாப்பிட தகுதியற்ற உணவுப் பொருட்களையும், நாற்றமெடுக்கும் பிணங்களையும் கொண்ட குப்பை குவியல்களில் அவை மேய்கின்றன.
வயதான, பலவீனமான, பட்டினி கிடக்கும் பசுக்களை கொல்வதையும், ஏழைகளின் புரதமான அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதையும் தடை செய்வது இயற்கைக்கு எதிரானது. உணவு தேர்வுகளை நெறிப்படுத்தும் சட்டம் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானதும் கொடுமையானதும் ஆகும். ஜன சங்க (இப்போதைய பிஜேபி) தத்துவார்த்த தலைவர் கே ஆர் மல்கானி இயற்கையாக இறந்த மாட்டின் இறைச்சியை சாப்பிடுவதை எந்த தயக்கமும் இல்லாமல் ஆதரித்தார் என்பதை சங்க பரிவாரத்துக்கு நினைவு படுத்த வேண்டும்.
கேள்வி:
இந்தியாவில் பசுக் கொலை எதிர்ப்பு பற்றிய கருத்தாக்கத்தின் புத்துயிர்ப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பெரும்பாலான பிஜேபி ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்த பிரச்சனை அரசியல் அணி திரட்டலுக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்துக்கு வந்தவுடனேயே பசுக் கொலை தடைச் சட்டத்தை கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக அந்த அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன.
பதில்:
சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது. பசுக் கொலை எதிர்ப்பு இயக்கத்தின் புத்துயிர்ப்பு இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.
________________________________________________________
தமிழாக்கம்: அப்துல்
நன்றி-அப்துல்
__________________________________________________________

0 comments:

Post a Comment