நடைப் பயிற்சியால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்

அதிகமான எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மனச்சோர்வு, மன உளைச்சல் போன்ற மனம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அண்டாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
கர்ப்ப காலத்தின் போது கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்றும் பிரசவம் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறீர்களா? 
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்குமான ஒரே பதில் நடைப்பயிற்சி. ஆம், நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
பொதுவாக நடைப்பயிற்சி, ஆரோக்கியமாக இருப்பதற்கும், அளவுக்கு அதிகமான எடையை குறைப்பதற்கும் பயன்படும் எளிய மற்றும் சுலபமான வழிகளுள் ஒன்றாகும். எப்போதும் சுறுசுறுப்பாகவும், பெரும் பிரயத்தனம் ஏதுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பும் அனைத்து வயதினருக்கும் நடைப் பயிற்சி மிகவும் சிறந்த ஒன்றாகும்.
எனவே இரு சக்கர வாகனங்களைப் புறக்கணித்து விட்டு, நடராஜா சர்வீஸுக்கு மாறி, நல்ல ஆரோக் கியத்துக்கும், நல்வாழ்வுக்குமான பயணத்தை துவங்கி, ஒவ்வொரு அடியையும் பயனுள்ளதாக மாற்ற முயலுங்கள். இப்போது நடைப்பயிற்சியால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
1.நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது நடைப்பயிற்சி, பகல் பொழுதில் உடல் சக்தியை ஊக்கப்படுத்துவதினால், இரவில் நீண்ட நேரம் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். ஆகவே நல்ல தூக்கம் வர வேண்டுமெனில், நடைப்பயிற்சியை தூக்க நேரத்திற்கு மிகவும் முன்னதாகத் திட்டமிட்டுக் கொள்ளுதல் அவசியம்.
2.மன அழுத்தத்தைக் கொல்கிறது நடைப்பயிற்சி, கோபதாபங்கள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து, மன நலத்தைப் பேணுகிறது. எனவே மன அழுத்தத்தில் தத்தளிப்பது போல் உணர்ந்தால், உடனே வெளியே வந்து சற்று நேரம் நடந்தால், அந்த உடல் இயக்கம் மற்றும் சுத்தமான காற்றின் கலவை, உடனடியாக மனதை லேசாக்கி, மன நிலையை சீராக்கும்.
3.கருச்சிதைவைத் தவிர்க்கிறது கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடல் சோர்வைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதர கர்ப்ப காலப் பிரச்சனைகளையும் குறைக்கிறது. இது உடல் எடையை எளிதாகக் குறைக்கவும் உதவி செய்து, கர்ப்ப காலத்தின் போது சர்க்கரை நோய் வரக்கூடிய சாத்தியக்கூறையும் குறைக்கிறது. மேலும், நடைப்பயிற்சி மேற்கொள்வது கருச்சிதைவு வராமல் தடுக்க வல்லதுமாகும்.
4.உடல் எடையைக் குறைக்கிறது நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நாளில் தோராயமாக 5,000 அடிகள் நடந்தால், அது உடலில் உள்ள கொழுப்பையும், ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
5.சகிப்புத் தன்மையை வலுவாக்குகிறது ஒரே சீரான வேகத்தில் நடைப்பயற்சி மேற்கொள்வது, தசைகளை வலுவாக்கி, அவற்றின் தாங்கிக் கொள்ளும் சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது தனி நபர்களிடையே சகிப்புத் தன்மையை வலுவாக்கவும் உதவுகிறது.
6.மீண்டும் இளமையாக்குகிறது நடைப்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் ஒருவித ஊக்கியாக விளங்குகிறது. அதாவது மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைத்து மீண்டும் இளமையாக்கி, நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளவும் ஊக்கமளிக்கிறது. மேலும் உடற்பயிற்சி மனநிலையை சீராக்கி, உடல் சக்தியைப் பெருக்கி பூரணமான உயிர்ப்புடன் விளங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.
7.வாழ்நாளை நீட்டிக்கிறது தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வாழ்நாளில் மேலும் சில வருடங்களை நீட்டிக்க உதவும். அதி முக்கியமாக, இது மூட்டு அழற்சி போன்ற முதுமை தொடர்பான நோய்கள் வராமல் தடுத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
8.உடலை வலுவாக்குகிறது நல்ல நடைப்பயிற்சி கால்களை வலுவாக்கி, அவற்றிற்கு அழகிய வடிவத்தை கொடுக்கும். அதிலும் இது கெண்டைக்கால் தசைகள், தொடைகள், பின்னங்கால் தசைநார்கள் போன்றவற்றிற்கு கட்டுக்கோப்பான வடிவை அளித்து, புட்டத் தசைகளை மேலெழும்பச் செய்யும். குறிப்பாப நேராக நிமிர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், வயிற்றுத் தசைகளை இறுகச் செய்து, இடுப்புப் பகுதியையும் அழகானதாக செதுக்குகிறது.
9.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது நடைப்பயிற்சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது.
10.கெட்ட கொழுப்பை குறைக்கிறது தெருவில் இறங்கி ஒரு நடை போய் வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் இதய நலமும் மேம்படும். நடைப்பயிற்சியானது ஒரு நாளைக்கு சுமார் 300 கலோரிகள் வரை எரிப்பதற்கு உதவும்.
இதனால் கெட்ட கொழுப்பு குறிப்பிடத்தக்க அளவு குறையும். எனவே, மேலும் தாமதிக்காமல் நடைப்பயிற்சி செய்வதை அன்றாட வழக்கமாக்கிக் கொண்டு, அது அளிக்கும் பலன்களை பூரணமாகப் பெற்று, ஆரோக்கியமான வாழ்வைப் பெற விழையுங்கள்!

0 comments:

Post a Comment