தமிழர்களின் வளர்ச்சியை நோக்கி..

 இன்றைய    தமிழர்களின்    நிலை  என்ன?  எதிர்காலத்தில்   அது  எப்படி இருக்கும்?  என்ற  கேள்விகளை  எழுப்புவது  நியாயமானதாகவும்   காலத்துக்கேற்ற   கேள்விகளாகவும் இருக்கும்.  இன்றைய  தமிழ்   சமூகம்  அதன்     நாளைய   சந்ததியின்   நலனைக்   கவனத்தில்   கொள்ள   வேண்டுமென்பது   காலத்தின்   கட்டாயம்.  எனவே, பழங்காலத்து  வீரக்கதைகளைப்   பேசிப்பேசிப்  பெருமிதம்   கொள்வதைத்   தவிர்த்து    இனி   என்ன   செய்ய   வேண்டும்   என்ற  செயலில்   இறங்குவதே   சரியாகப்படுகிறது.
பழம்   பெருமைகளுக்குத்  தமிழர்   சொந்தக்காரர்கள்  என்று   கூறுவதால்  பலன்   இல்லை.  உதாரணத்துக்கு   யாதும்   ஊரே  யாவரும்  கேளிர்  என்ற   பூங்குன்றனாரின்   வாய்மொழி   எவ்வளவு   உயர்வானது,   அர்த்தமுள்ளது  என்பது  நமக்குத்  தெரியும்.  காணும்   இடமெல்லாம்    நமது   ஊரே.   அங்கு   காண்பவர்கள்   அனைவரும்   நம்மவர்களே- நண்பர்களே- என்ற  உயரிய   நோக்கு   பண்டைத்   தமிழனிடம்   இருந்திருக்கிறது.  அதற்கான   காரணத்தை   தேடி  அலைந்தால் நமக்குக்  கிடைப்பது  என்ன?  தமிழன்  ஏழ்கடல்   தாண்டிச்  சென்று   வாணிபத்தில்   வெற்றிக்   கண்டவன்.  எனவே   போன  இடமெல்லாம்  அவன்   மனதில்  தமது  இடமாகப்  பட்டிருக்கலாம்.  அங்கே  பார்த்தவர்களை   எல்லாம்   தமது  நண்பர்கள்   போலவும்   உடன்பிறப்புப்   போலவும்  ஏற்று  நடந்துகொண்டிருக்கலாம்.
அதில்  பரந்த  மனப்பான்மை   இருக்க  வழியுண்டு.  அதே  சமயத்தில்   மற்றொரு  கோணத்திலிருந்து   பார்ப்போமேயானால்   இந்த  உலகம்  மாயம்.   நடப்பதெல்லாம்   மாயம்.   வாழ்வும்   மாயம்  என்ற   எண்ணம்  உயர்ந்திருந்த   மனோபாவத்தையும்   மறந்துவிடக்கூடாது.   அதையும்  கணக்கில் சேர்த்துக்கொண்டால்  காணும்  எல்லா  இடங்களும்  சமமே.  காணப்படும்   மனிதனும்  – நம்மவரே  என்ற   மனோபாவம்  வலுவடைந்திருக்கலாம்.
அடுத்து,  சமய  வளர்ச்சி  மனிதனின்  இயற்கையான  சுபாவங்களை   மாற்றிடும்  தன்மையைக்  கொண்டிருந்தது.  சமயங்களிடையே போட்டி,  விரோத  மனப்பான்மை  போன்றவை  வளர்ந்துவிட்ட  நிலையில்   திருமூலர்   சொன்னார்  “எம்மதமும்   சம்மதமே”.
இந்த   இரண்டு  அற்புதமான   வாய்மொழியை  எடுத்துகொண்டு   ஆராய்ந்து   பார்த்தால்   பிறர் தமிழனைப்   பத்தாம்பசலி   என்று  தீர்மானித்துவிடுவார்கள்.  காரணம்   தமிழனிடமிருந்தப்    பரந்த  மனப்பான்மை  பிறரிடம்   காணமுடியவில்லை.  சமயத்தை   ஏற்றுக்கொண்டாலும்   அதே  கதிதான்.  கடவுளையே   மதமாற்றம்   செய்யும்  காலம்  இது.
நான்  சில  ஆண்டுகளுக்கு  முன்பு  அறுவைச்  சிகிச்சைக்காகப்  போயிருந்தேன்.  அதற்குமுன்,  தாதி  தமது  கடமையைச்  செய்துகொண்டு  “உங்களுக்கு  கடவுள்  நம்பிக்கை  இருக்கிறதா?”  என்று   கேட்டார்.  “உண்டு”  என்றேன்.  “எந்தக்  கடவுள்”  என்று  மறுபடியும்  கேட்டார்.  நான்   புரியாமல்  அவரைப்   பார்த்தேன்.  “இந்துக்  கடவுளா?,  கிறிஸ்தவக்  கடவுளா…?” என்று அடுக்கிக்கொண்டே   போனார்.  அவரை   இடைமறித்து  “நான்  கேட்கவில்லை…!  கடவுளிடம்   நீ  எந்த  மதத்தைச்  சேர்ந்தவர்   என்று  கேட்கவில்லை!”  என்றேன்.
மதத்தை   எடுத்துக்கொண்டால்   கடவுளை   குழப்புவதில், தமிழனை மிஞ்சி எவ்வினமும் இருக்கவில்லை.   அந்த  வகையில்  மனிதரை  குழப்பும்   அவன் கீழ்சாதியெ.
பல  நன்னெறிகளைத்  தந்தவன்  தமிழன்.  ஆனால்  அவை  பிறருக்குப்  போய்  சேரவில்லை  என்பது  ஒரு  புறமிருக்க  தமிழனே  அந்த  நன்னெறிகளை  மறந்து  வாழ்கிறான்  என்றால்  அதுவும்  உண்மையே.  இன்னும்  சொல்லப்போனால்  தமிழில்  எப்படிப்பட்ட  நன்னெறிகள்   உள்ளன  என்பதை   அறியாதவனாக   வளர்ந்து வருகிறான்.
சோ. விருத்தாசலாம் – சோவி- என்று அழைக்கப்பட்டவர்,  சிறுகைதைகள்   எழுதி  நல்ல  புகழ்  கண்டவர்.  புதுமைப்பித்தன்  என்றப்  பெயரில்  இலக்கிய   உலகில்  பீடு  நடைபோட்டவர். மண்தோன்றி  கல்  தோன்றா  காலத்தே  பிறந்த  மூத்தக்குடி    தமிழ்குடி  என்பதைப் பற்றி  சொல்லும்போது, தமிழன்தான் முதல்  குரங்கு  என்றால்கூட  திருப்திபடமாட்டான்  என்றார். தமிழனின்  பரிதாப  நிலையைத்  தெளிவாகச்  சொல்ல  வேறு  என்ன வேண்டும்.
படித்ததையெல்லாம்  அப்படியே  நம்புபவன்  முட்டாள்  என்பது  ஜப்பான்  முதுமொழி.  அதில்  எத்தகைய  பொருள்  இருக்கிறது  என்பதைச்  சிந்தித்துப்   பார்த்தால்   உண்மை  புலப்படும். படித்ததை  முழுமையாக  நம்புவது  எளிது.  மூளைக்கு   வேலை இல்லை;  ஆனால்,  படித்ததை  சிந்தித்து  ஆய்ந்து  பார்க்கும்போது  அது  அறிவு   வளர்ச்சிக்கும்,  உலக  அனுபவம்   பெறுவதற்கும்  நல்ல   மனிதனாக,  மனித   நேய   மனிதனாக  வளர,  வாழ  உரமாக  அமைந்துவிடுகிறது.
பொதுவாகவே,  இன்றைய  தமிழர்களின்   நிலை  என்ன?  எப்படியாவது   முன்னுக்கு   வரவேண்டும்.  வரவேற்க   வேண்டிய,  உத்தமமான   உற்சாகம்.  அந்த  உற்சாகம்   எதை   அடிப்படையாகக்   கொண்டிருக்கிறது  என்பதை   நினைத்துப்   பார்த்தால்,  எப்படியாவது  முன்னுக்கு  வரவேண்டும்  என்கின்ற  வெறியே  தவிர  வேறொன்றுமில்லை.  முன்னுக்கு   வரவேண்டும், நல்லா  சம்பாதிக்க   வேண்டுமென்கிற   நோக்கம்,  ஆவல், அவற்றை  அடைவதற்கான   உற்சாகம்  யாவும்   ஏற்புடையனவையே.
ஆனால்  அது  அடையும் முறைதான்   பெரும்  கேள்வி  குறியாக   இருக்கிறது. இந்த  “அடையும் முறையை”  சற்று  ஆழமாக  ஆராய்ந்து  பார்த்தால்  அதை  கடைபிடிப்பவர்களின்   வாழ்க்கையில்   எந்தவொரு  நிம்மதியையும்   காணமுடியவில்லை    என்பது  மட்டுமல்ல  தரமான  வாழ்க்கையையும்  அவர்களால்   அனுபவிக்கமுடியவில்லை.  காரணம்,  அவர்கள்  எண்ணமெல்லாம்   வருமானத்தைப்  பற்றியதாகும்,  வாழ்க்கைத்  தரத்தைப்  பற்றியது  அல்ல.
பிற இனத்தவர்கள்   திரைப்படங்களைப்   பொழுது   போக்காக  நினைக்கிறார்கள்.  நம்மவர்களோ  சினிமாதான்  வாழ்வின்  மூச்சு   என்று   நினைத்து   வாழ்கிறார்கள்.  இது   தவிர்க்கப்பட  வேண்டும்.   வாழ்க்கையில்   முன்னேற   வேண்டுமானால்   முதலில்   எது   கற்பனை,  எது  உண்மை  என்பதை   அறிந்து  கொள்ளும்  திறனை   வளர்த்துக்   கொள்ளவேண்டும்.  சமூக  இயக்கங்கள்   இதை   உணர்த்தும்  காரியங்களில்  இறங்கவேண்டும்.
வன்செயல்   கலாச்சாரம்   பாழானது,  ஆபத்தானது,  சமூகத்தையே   அழித்துவிடும்  என்பதை   உணர  வேண்டும்.  உணர்த்த   வேண்டும்.
தமிழர்களின்   எதிர்காலம்,    அவர்கள்   கையில்தான்   இருக்கிறது.  முதலில்   தன்மானத்தோடு  வாழ   கற்றுக்கொள்ள   வேண்டும்.  தன்மானம்   எப்படி  வரும்,  வளரும்   என்று   கேட்டால்:  உன்  தாய்   மொழியைக்   கற்றுக்கொள்,  தன்மானம்   தானாக   வரும்.  உன்   பண்பாட்டை  உணரு,  உன்  மூதாதையர்  விட்டுப்போன  நன்னெறி  பொக்கிஷங்களைப்  படி,  பேணு, உயர்வு   தானாக  வரும்.  பிறரும்  மதிப்பார்கள்.  வன்செயல்  கலாச்சாரம்  பெருமையை   நல்காது.  வன்செயல்  கலாச்சாரம்  பிறரின்  அன்பை  பெற  உதவாது.  வன்செயல்   கலாச்சாரம்   மிருகத்தின்  குணத்தைக்   காட்டுகிறது.
உறுதியாக   இருக்கக்கற்றுக்கொள்.  நல்லதை   நினைத்து,  நல்லதைச்  செய்ய   உறுதியாக   இருக்க வேண்டும்.
பேசும்   மொழியில்   நாணயம்   வேண்டும்.  அதாவது  எதைச்  சொன்னாலும்  அதில்   நாணயம்  இருக்கவேண்டும்.  நேர்மை   இருக்க வேண்டும்.  சுத்தம்  இருக்க   வேண்டும்.  மனதில்  ஒன்றும்  உதட்டில்  ஒன்றும்   என்றிராமல்   சொல்ல  வேண்டும்,  செயல்படவேண்டும்.  அதைத்தான்   மொழி நாணயம்   என்பேன்.
இன்றைய   தமிழ்   சமுதாயம்   என்ன   செய்யவேண்டும்?  என்ற  கேள்வி   சாதரணமான   கேள்வி  அல்ல.  விடையும்  எளிதில்   கிடைத்துவிடாது.  ஆனால், ஒன்றுமட்டும்   தெளிவாகப்படுகிறது.  தமிழ்ச்   சமுதாயம்     ஒருபடி   மேலே   சென்று  அங்கே   இனமத   பிரச்சினைகள்   எழக்கூடாது. கல்விக்கூடங்களில்  கிடைக்கும்   பயிற்சி  மட்டும்   போதாது,       மாறாக, இளவயதிலிருந்தே  பிள்ளைகள்   சமுதாயக் கடமைகளை   உணர்த்தும்   பயிற்சி வழங்கவேண்டும். பள்ளிக்கூட  மாணவ   மாணவிகள்  காவல்  நிலையத்துக்குப் போய்   அங்கே  சிறையில்   வைக்கப்பட்டிருப்பவர்களைப்      பார்க்க  வேண்டும்.  அவர்கள்   படும்   அவமானத்தைக் காண  வேண்டும்.  மருத்துமனைக்குப்  போய்   விபத்துகளில்  காயமுற்றோரைப் பார்க்க   வேண்டும்.  காயமுற்றோர் படும்  நரக வேதனையைப்  பார்த்து   தமக்கும்  பிறருக்கும்   இவ்வாறு நேர்ந்துவிடக்கூடாது  என்ற   உணர்வைப்  பெறவேண்டும்.
பள்ளிக்கூடங்களில்   பரஸ்பர   நல்லெண்ணமும் புரிந்துணர்வும்   வளர்க்க  வேண்டும்.  எல்லோரும்   மனிதர்கள்.  எல்லா   இனங்களும் கூடி      வாழவும்,  எல்லா   சமயங்களும்   ஒருவரை  ஒருவர் புரிந்துகொண்டு   வாழமுடியும்  என்ற   உணர்வை   வளர்க்க வேண்டும்;  நிலைநாட்ட வேண்டும்.
இதைத்   துணிந்து   செயல்பட   சமூக  இயக்கங்கள்   முன்வரவேண்டும். 

No comments:

Post a Comment