ரஜினியின் ‘லிங்கா’

ரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. பாடல்கள் 16–ந்தேதி வெளியிடப்படுகின்றன.
இருவேடம்
ரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் ‘லிங்கா’ இதில் நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
ரஜினி பிறந்தநாளில்
ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி ‘லிங்கா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டதால் பொங்கலுக்கு படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. தற்போது அடுத்த மாதம் ‘லிங்கா’ படம் ரிலீசாகும் என்று ஈராஸ் பட நிறுவனம் அறிவித்து உள்ளது. டிசம்பர் 12–ந்தேதியே படம் வெளிவரும் என தெரிகிறது.
ஈராஸ் நிறுவனம் ‘லிங்கா’ படத்தின் அனைத்து உலக விநியோக உரிமைகளையும் வாங்கி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த நிறுவனமே படத்தை வெளியிடுகிறது. அத்துடன் மூன்று மொழிகளிலும் இசை வெளியீடு உரிமைகளையும் ஈராஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது.
இசை வெளியீடு
‘லிங்கா’ படத்தின் தமிழ், தெலுங்கு இசை வெளியீட்டு விழா வருகிற 16–தேதி சென்னையில் நடக்கிறது.
இந்த விழாவில் திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
பெருமை
இதுகுறித்து ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா கூறும்போது, ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் எங்கள் நிறுவனம் பெருமைகொள்கிறது. எந்திரனுக்கு பிறகு ரஜினி நடித்து வெளியாகும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும்.
ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் இந்த படத்துக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
பெரும்பான்மை மக்கள்
‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது ‘லிங்கா’ படத்தினை வெளியிட உலகின் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றான ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஈராஸ் நிறுவனம் உலகளாவிய நிறுவனம் என்பதால் இத்திரைப்படம் உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மை மக்களை சென்றடையும் என்றார்.

No comments:

Post a Comment