கத்தி விமர்சனம்

 
கத்தி என்னும் கதிரேசன் ஒரு கிரிமினல். கொல்கத்தா சிறையிலிருந்து தப்பி வரும் அவன் ஜீவா என்னும் ஜீவானந்தத்தைச் சந்திக்கிறான். குண்டடி பட்டுக் கிடக்கும் ஜீவா தன்னைப் போலவே இருப்பதைக் காணும் கதிரேசன், ஜீவாவைக் காப்பாற்றுவதுடன் ஜீவாதான் கதிரேசன் என்பதற்கான ஆதாரங்களை ஜோடிக்கிறான். கதிரேசனைத் தேடி வரும் போலீஸ் சிக்கிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஜீவாவை அழைத்துக்கொண்டு போகிறது. ஜீவாவாக நடிக்கும் கதிருக்கு அதில் இருக்கும் லாபம் புரிகிறது. நிறையப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடலாம் என்ற திட்டத்துடன் ஜீவாவாக நடிக்கும் கதிருக்கு ஜீவாவின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
 விவசாய நிலங்களை வாங்கி குளிர்பானத் தொழிற்சாலை கட்டத் திட்டமிடும் கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்துப் போராடுவதே ஜீவாவின் பணி. இதில் கிராம மக்கள் அவன் பின்னால் திரள்கிறார்கள். இன்னும் சில நாட்களில் நிலத்தை மீட்காவிட்டால் நிலம் நிரந்தரமாகக் கைவிட்டுப் போய்விடும் நிலை. கார்ப்பரேட் நிறுவன அதிபரோ எப்படியாவது நிலத்தைக் கையகப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறான். இதையெல்லாம் தெரிந்துகொள்ளும் கதிர் திருட்டுப் புத்தியைக் கைவிட்டு நியாயத்துக்காகப் போராட ஆரம்பிக்கிறான். இடையில் அங்கிதா என்னும் பெண்ணுடன் கதிருக்குக் காதல் ஏற்படுகிறது. இவனுடைய முயற்சிகளில் அவளும் கை கொடுக்கிறாள்.
 தொழிலதிபரிடமிருந்து கதிரால் விவசாய நிலங்களை மீட்க முடிந்ததா, ஜீவா என்ன ஆனான்?
 ஒவ்வொரு படத்துக்கும் குறிப்பான ஒரு பிரச்சினையை எடுத்துக்கொள்ளும் .ஆர். முருக்தாஸ் இந்த முறை எடுத்திருப்பது சுருங்கிவரும் விவசாய நிலங்கள் என்னும் பிரச்சினையை. இதற்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலையும் எடுத்துக்கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில் இவற்றைக் கையாள்கிறார். கதிர் ஜீவாவாக நடிப்பது ஜீவாவுக்காகக் கிடைக்கும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடத்தான். ஆனால் ஜீவா என்ன செய்துகொண்டிருந்தான், எப்படிப்பட்ட அபாயத்துக்கு எதிராகப் போராடுகிறான் என்பதையெல்லாம் ஒரு விழாவில் அறிந்துகொண்ட பிறகு அவன் மனம் மாறுகிறான். படமும் தடம் மாறுகிறது. இந்த இடம் வலிமையாக வந்துள்ளது.
 இதற்குப் பிறகு கதிர் ஜீவாவாகவே மாறி அவன் போராட்டத்தை மேற்கொள்வதில் திரைக்கதை சூடு பிடிக்கிறது. வழக்கில் ஜெயிப்பதற்காகவும் கார்ப்பரேட் வில்லனின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காகவும் கதிரின் மூளையும் வீரமும் பயன்படுகின்றன. இந்தக் காட்சிகளை விறுவிறுப்பாகவும் ஓரளவு நம்பகத்தன்மையுடனும் முருகதாஸ் வடிவமைத்துள்ளார். கிராம மக்களின் பிரச்சினையை நகர மக்கள் உணரவைப்பதற்காகக் கதிர் செய்யும் உத்தி நம்பகத்தன்மையில் பலவீனமாக இருந்தாலும் அது சொல்ல வரும் செய்தி வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. லயன்ஸ் கிளப் கூட்டத்தில் காட்டப்படும் குறும்படத்தில் ஆறு முதியவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் கிராமத்து ஆண்கள் பல இடங்களிலும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சேர்ப்பதையும் பார்க்கும்போது கதிரைப் போலவே பார்வையாளர்களின் மனங்களும் கலங்குகின்றன.
 படத்தில் முக்கியமான சில பலவீனங்கள் இருக்கின்றன. ஒன்று முதல் அரை ம்ணிநேரப் படம் சுவாரஸ்யமோ புதுமையோ இல்லாமல் பொறுமையைச் சோதிக்கிறது. விஜயின் பாத்திரத்தில் இருக்கும் வேடிக்கைத்தனம் பல படங்களில் பார்த்துச் சலித்த விஷயம். சென்னைக்குக் குடிநீர் வினியோகத்தை நிறுத்தும் காட்சி பார்க்க விறுவிறுப்பாக இருந்தாலும் ஐடியா குழந்தைத்தனமாக இருக்கிறது. மீடியாவைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டால் நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமா என்ன? எவ்வளவோ திட்டமிட்டுப் போராட்டங்கள் நடத்தினாலும் கடைசியில் கதாநாயகனின் புஜபலம்தான் வில்லனைச் சாய்க்கிற்து என்பது ஹீரோயிஸத்துக்கு உதவினாலும் இதுபோன்ற படத்தை அது பலவீனமாக்கிவிடுகிறது.
 தோற்றத்தில் வித்தியாசம் காட்டாவிட்டாலும் நடிப்பில் வித்தியாசம் காட்டி இரட்டை வேடத்துக்கு நியாயம் செய்கிறார் விஜய். சீரியஸான பிறகுதான் அவர் நடிப்பு குறிப்பிடும்படி இருக்கிறது. சண்டை, நடனம் ஆகியவற்றில் மட்டுமில்லாமல் அழுவது, ஆவேசமாகப் பேசுவது ஆகியவற்றிலும் தடம் பதிக்கிறார். அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் காய்ச்சி எடுக்கும் வசனங்களைத் தைரியமாகப் பேசியிருக்கிறார்.
 சற்றே சதை பூசிய தோற்றத்துடனும் தூக்கலான கிளாமருடனும் உற்சாகமாக வளைய வரும் சமந்தா படம் முழுவதும் வருகிறார். ஆனால் அவருக்குப் பெரிய வேலை எதுவும் கிடையாது. ச்சும்மா ஒரு கம்பெனிக்கு என்று இயக்குநர் அவரை நாயகன் பக்கத்தில் நிற்கவைக்கிறார்.
 வில்லத்தனமான கார்ப்பரேட் நிறுவனத் தலைவராக நீல் நிதின் முகேஷின் நடிப்பும் உடல் மொழியும் பாத்திரத்துக்குக் கன பொருத்தம்.
 சதீஷ் விஜயின் நண்பனாக வருகிறார். சிரிக்கவைக்கும் முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
 அநிருத்தின் இசையில் யேசுதாஸ் பாடும் பாடலைத் தவிர மற்ற அனைத்தும் படு வேகம். இத்தனை வேகமாகத்தான் எல்லாப் பாடல்களும் இருக்க வேண்டுமா? பின்னணி இசை சில இடங்களில் மிரட்டுகிறது. சில இடங்களில் படுத்துகிறது.
 சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு துணிச்சலாகப் பல விமர்சனங்களை முன்வைத்திருக்கும் முயற்சிக்காக முருகதாஸைப் பாராட்டலாம். முதல் பாதியில் கொஞ்சம் வித்தியாசத்தையும் விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் கத்தி மேலும்  கூர்மைப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment