பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்


நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள்.

அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

8. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

9. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே உங்கள் மகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

10. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். வெளியுலகில் எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். மேலும் தற்காப்பு கலைகளையும் சொல்லி கொடுங்க.

11. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை எதிர் பார்க்க முடியாது. அனைத்து வேலைகளை பற்றியும் சொல்லி கொடுங்க. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.


12. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!

No comments:

Post a Comment