ஒளிர்வு:47 -தமிழ் இணைய இதழ் :புரட்டாதி,2014:-எமது கருத்து


 வணக்கம்,
மீண்டும் புதிய இடுகைகளுடன் தீபம் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.தாய் நாட்டின் சுற்றுலா தந்த அனுபவங்கள் மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை தர வல்லமையினை தீபம் பெற்றுள்ளமை வாசகர்கள் தந்த உற்சாகத்தின் பிரதிபலிபென்றே கூறவேண்டும்.   இலக்கிய உலகில் உங்களுடன் எமது பயணம் தொடர உங்கள் நட்பு வளர வாழ்த்துகிறோம்.

நான் தாண்டா….நல்லசாதி

இந்த இரண்டு சொற்களை சொல்லவோ அல்லது மனதார நினைக்வோ மனிதன் பல முயற்சிகளை செய்து வருகிறான். அதன் முதல் மற்றும் ஒரே வழி… “நான் உன்னை விட உயர்ந்தவன்எனச் சொல்லி அடுத்தவன் அனைவரையும் மட்டப்படுத்துவது.

இது இல்லாத இடம் இல்லவே இல்லை

இந்தியாவில் இருக்கும் ஒரு உயர்ந்த சாதி மனிதனையும், கீழ் சாதி என நீங்கள் சொல்லும் ஒருவனையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றால்உங்கள் இருவரின் ஒரே பெயர் “Indians”.  உங்களுக்கு மரியாதை கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும்.

அதே அமெரிக்கன்.. இங்கிலாந்து சென்றால்….. அங்கே உள்ள வெள்ளையன் அமெரிக்கனை மதிப்பதில்லை.

வெள்ளையன் சீனா சென்றால் சீனர்கள் அவர்களை மதிப்பதில்லைசீனன் ஜப்பான் சென்றால் சப்பான் நாடுக்காரன் சீன மனிதனை மதிக்க மறுக்கிறான்.

கறுப்பன் வெள்ளையனை மதிப்பதில்லை, வெள்ளையன் எவரையும் மதிப்பதில்லை.

அடஅவன் அவன் சாதிக்குள் பெண்களை மதிப்பதில்லைவீட்டு வேளையில் கூடபூஜை செய்வதை அளபபறையாகச் செய்யும் குடும்பத் தலைவர் எவரும் வீடு பெருக்கவோ துணி துவைக்கவோ உதவுவதில்லை.

ஏன் என்றால் அதெல்லாம் பொம்பள செய்யுற வேலையாம்….

ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.. நான் உன்னை விடப் பெரியவன் என காட்ட….  பிறப்பது முதல் இறக்கும் வரை இந்த ஒரே லெட்சிய வெறி கொண்டு மனிதனாக வாழாமல் அனைவரும் மடிந்து போகிறோம்.

இது போன்ற பாகுப்பாடுகளை பார்க்கும் போது தெருவில் அலையும் நாய் கூட இந்த மனித இனத்தை விட மேலாகத் தெரிகிறது.

இந்த பிரபஞ்சத்தின் வாழ் நாள் கால அளவு முன்.. நாம் மனித வாழ்க்கை என்பது வெறும் தூசி போன்றதுஆனால் இந்த 60 வருடத்தில் நாம் என்னவெல்லாமோ செய்யத் துடிக்கிறோம்.

அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது



ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார
பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருவர் தன் வாழ்நாளில் எந்த அளவு இந்த மாதிரி அதிகம் கோபப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அவர் பாதிக்கப்படுவார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியாகுவதற்கு உதவும் வகையில் மருந்துகளோடு சேர்த்து, உளவியல் சிகிச்சைகளும் அளிப்பது இவ்வகையான தாக்குதல்களை குறைப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகமும் மதுஒழிப்பும்

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!  

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?”
-என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமைஎன்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை
தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், இந்த டாஸ்மாக் நிறுவனம், அரசின் சுங்கவரி மற்றும் மதுவிலக்குத் துறையால் தான் நிர்வகிக்கப்படுகிறது!
மது விற்பனையால் கிடைக்கும் சுங்கவரி மற்றும் கலால் வரியால் பெறப்படும் வருவாயே தமிழக அரசின் ஆண்டு வருவாயில் சரிபாதியாக இருக்கிறது. இதைக் கொண்டுதான் தமிழக மக்களுக்கு இலவசத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி தரவும், பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி தரவும், அதே குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைக் குடிகாரர்களாக்குகிறது தமிழக அரசு. இது கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதல்லாமல் வேறென்ன?
முதல்முறையாக 1937-ல் சென்னை ராஜதானியில் ராஜாஜி முதல்வராக இருக்கையில் மதுவிலக்கு கொள்கை அறிவிக்கப்பட்டது. பிற்பாடு காங்கிரஸ் ஆட்சி பதவி விலகியதும், 1944-ல் ஆங்கிலேய அரசு தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி.
அப்போது அவர் எழுதிய கட்டுரையில்,  ‘மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?’ என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல. இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால்,  ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் அதிகரிக்கும் குற்றங்களும் குறையும்-  என்று எழுதினார்.
தமிழகத்தின் தற்போதைய நிலைமை என்ன? ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையான வசனம் வரும்- இங்கு மதுவைத் தொடாத ஆணாக இருக்க வேண்டுமென்றால் அவன் பச்சைக்குழந்தையாகத் தான் இருக்க முடியும் என்று! ஆண்களை மலடாகவும், குடும்பங்களை குப்பையாகவும் ஆக்கும் மதுவுக்கு நமது அரசே ஆதரவாக இருக்கிறது!
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னரே மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அந்த  முடிவை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி 1971-ல் எடுத்தபோது, கொட்டும் மழையிலும் அவரை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து, மன்றாடினார் முதுபெரும் தலைவர் ராஜாஜி. அதை கருணாநிதி பொருட்படுத்தவில்லை. அதன் விளைவு, யாரும் காணாமல் ஒளிந்து மது அருந்தியவர்கள் கூட கூச்சமின்றி மதுக்கடைக்குப் படையெடுப்பது துவங்கியது.
மதுவிலக்கு கொள்கையின் தள்ளாட்டம்:


மதுவிற்பனையில் கழகங்களிடையே போட்டி
1937-லிருந்து 2001 வரை,  1944- 47, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர பெரும்பாலான காலங்களில் தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது 2001 வரையிலான சுமார் 68 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் மட்டுமே மதுவிற்பனை தமிழகத்தில் தாராளமாக இருந்திருக்கிறது. இந்நிலைக்கு சாவுமணி அடித்தது, எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது 1983-ல் டாஸ்மாக் நிறுவனம் துவங்கியபோது தான்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்),  1983-ல் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான  அதிமுக அரசால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் -1956 இன்படி, இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. ஆளும்கட்சிக்கு வற்றாத வளம் தரும் காமதேனுவாக டாஸ்மாக் உணரப்பட்டது அக்காலத்தில் தான். ‘பாக்கெட் சாராயம்எனப்படும் மிக மோசமான வஸ்து தமிழகத்தில் ஆறாக ஓடியதும் அக்காலத்தில் தான். எனினும் 1987- மீண்டும் மதுவிலக்கு வந்து, தமிழகப் பெண்களின் நெஞ்சில் பால் வார்த்தது.
2001-ல் அதிமுக ஆட்சியின்போது, மீண்டும் மதுவிலக்கு கொள்கை தூக்கி எறியப்பட்டது. மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதாகக் கூறி, அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மதுவிலக்கைத் தளர்த்தினார். அது இன்று பூதாகரமாகி, அரசையே இயக்கும் அளவுக்கு பிரமாண்டமாகி இருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், டாஸ்மாக் துவங்கியபோது (1983), கள்ளச்சாராயத்தைத் தடுத்து  மதுவிற்பனையை முறைப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. அதுவே 2003-ல் மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மது விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டது.
2001-ல் மதுவிற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் முயன்றபோது மது வர்த்தகத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நடத்திய கூட்டணி ஏலமுறையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அபோதுதான், டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக மது விற்பனையில் இறங்குவது என்று அரசு முடிவெடுத்தது. அக்டோபர் 2003- இல்  ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்- 1937’இல் திருத்தம் செய்ததன் மூலம், டாஸ்மாக்கிற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக தனியுரிமை அளிக்கப்பட்டது.
அப்போது இதனை கடுமையாக எதிர்த்த திமுக, 2006-ல் தான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் வருவாயைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசின் கொள்கையையே தொடரத் தீர்மானித்தது. மது வியாபாரத்தில் மட்டுமே இவ்விரு கட்சிகளிடையே நல்லிணக்கம் காணப்படுகிறது.
2013-14 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ. 23,401 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ. 1,721 கோடி அதிகம். மதுப் பயன்பாடு அதிகரிப்பு, மதுவகைகளின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் வருமாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
ஆண்டுதோறும் அதிகரித்துவரும் டாஸ்மாக் வருவாய் (காண்க: பட்டியல்) அரசுக்கு இனிப்பாக இருக்கலாம்; ஆனால் அது நாட்டையே அழிக்கும் விஷம் என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.
தலையை ஆட்டுவிக்கும் வால் டாஸ்மாக்:
தமிழக அரசின் வற்றாத அமுதசுரபியாகக் கருதப்படும் டாஸ்மாக், முற்றிலும்
டாஸ்மாக் வருவாய்ஒரு புள்ளிவிவரம்
அரசு நிறுவனம். கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு, அவற்றை தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, மதுவிற்பனையை முறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, மதுவை விற்று வருகிறது.

இதனை நிர்வகிக்க இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் ஐவர் நியமிக்கப்படுகின்றனர். டாஸ்மாக் வருவாய் குறையும் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிரமாகப் பாடுபட்டு கள்ளச் சாராயத்தை ஒழிக்கின்றனர். நாட்டு மக்கள் கள்ளச் சாரயம் குடிப்பதை விட நல்ல சாராயம் குடிப்பதே நாட்டிற்கு நல்லது என்பது தானே அரசின் கொள்கை?
இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளை (ஐஎம்எஃப்எஸ்) கொள்முதல் செய்வது, அவற்றை வர்த்தகம் செய்வது ஆகியவையே டாஸ்மாக்கின் பணிகள். இதற்கென மாநிலம் முழுவதும் 41 கிடங்குகள் இயங்குகின்றன. விவசாய விளைபொருளைப் பத்திரப்படுத்த கிடங்குகள் உள்ளனவோ இல்லையோ, மதுவகைகளை பத்திரப்படுத்த கிடங்குகள் அதிநவீனமாக அமைக்கப்படுகின்றனதற்போது மாநிலம் முழுவதும் 4,035 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உள்ளன.
இந்நிறுவனத்தை இயக்க 350 அரசு ஊழியர்களும், பல்வேறு துறைகளிலிருந்து தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட 300 அரசுப் பணியாளர்களும், தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்யும் 28,000 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 95 அதிகாரிகளும் உள்ளனர். இது டாஸ்மாக் இணையதளம் தரும் தகவல். இந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியச் செலவினம் மிகவும் குறைவே. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் பெருகிவிட்டன. அது தனிக்கதை.
தவிர, மதுவகை கொள்முதலிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசுக்கு வருவாய் என்பது மாறி, ஆளும் கட்சிக்கு தேர்தல்கால ஆபத்பாந்தவனாக இக்கொள்முதல் முறை மாறியிருக்கிறது. எனவே தரமற்ற சரக்குகள் விற்பனையில் புகுந்து, ஏற்கனவே தள்ளாடும் குடிமகனை மேலும் நாசமாக்கி நடுத்தெருவில் வீழ்த்துகின்றன.
டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டி அமைக்கப்படும் மதுக்கூடங்கள் (பார்) நடத்துவது தான் அரசியல்வாதிகளின் இப்போதைய முக்கியமான தொழில். பெரும்பாலும் ஆளும்கட்சிப் பிரமுகர்களே பினாமி பெயர்களில் இவற்றை நடத்துவதால், இங்கும் முறைகேடுகள் உச்சம். உதாரணமாக, இங்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள காகிதக் கோப்பை ரூ. 5-க்கு கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுகிறது. குடிமகனின் வருவாயைச் சுரண்டுவதில் டாஸ்மாக் நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன இந்த பார்கள்.
ஆக மொத்தத்தில், அரசுக்கு பல்லாயிரம் கோடிக் கணக்கில் வருமானம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு முறைகேடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான லஞ்சம், ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்குக் கிடைக்கும் கோடிக் கணக்கான பார் வருவாய், அரசியல்வாதிகள் நடத்தும் மது உற்பத்தி ஆலைகளின் பலகோடி லாபம் ஆகிய பல அம்சங்கள் பின்னிப் பிணைந்தது மது விற்பனை உலகம். அரசு என்னும் தலையை டாஸ்மாக் என்னும் வால் ஆட்டும் விந்தைக்கு ஆதாரம் இதுவே.
தமிழகத்தில் மதுவிற்பனைக்கு எதிராக பரவலாக குரல்கள் ஒலித்தாலும் கூட, அரசு அவற்றைக் கருத்தில் கொள்ளாததற்கும் இதுவே காரணம். பொன்முட்டையிடும் வாத்து போன்ற டாஸ்மாக் வர்த்தகத்தைக் கைவிட தமிழக அரசு தயாரில்லை. ஆக, மக்களைக் காக்க உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட டாஸ்மாக் இன்று மக்களை சிறுகச் சிறுகக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
குடிப்பழக்கத்தின் கொடிய விளைவுகள்:
மதுவின் கொடுமைகள் குறித்து தனியே விளக்க வேண்டியதில்லை.
தமிழகத்தில் எந்தத் தெருவிலும் விழுந்துகிடக்கும் இளைஞனே மதுவின் கோரத்திற்கு நேரடிச் சான்று. மதுப்பழக்கத்தால் நாசமாகும் இளைஞர் சமுதாயம்; குலையும் குடும்ப உறவுகள்; சிதையும் பொருளாதாரம்; மங்கும் உழைப்புத் திறன், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.

வயது வந்தவர்கள் கூட மறைந்து குடித்த காலம் மாறி, பள்ளி செல்லும் எட்டாம் வகுப்பு மாணவனே குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆண்களோடு சரிநிகர் சமானமாக பெண்களும் குடித்துவிட்டு கும்மாளமிடும் கலாசாரம் எல்லை மீறி, குற்றச்செயல்கள் பெருகுகின்றன. குடியே ஒரு பெருமையாக மாறிவரும் நாசகாரக் கலாசாரமும் உருவாகி வருகிறது.
இன்று அரசியல் கூட்டங்கள் மதுப்புட்டி விநியோகம் இல்லாமல் சாத்தியமில்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது. மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் மது தவிர்க்க முடியாத அம்சம் என்ற பாவனையும் உருவாகி வருகிறது. இதனால் குடிநோய்கள் பெருகுகின்றன.
தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை முடக்குவதாகவும், கல்லூரி மாணவர்களைத் தடம்புரளச் செய்வதாகவும், மது அரக்கன் உருவாகி இருக்கிறான்; உள்நாட்டுத் தயாரிப்பான கள்ளைக் குடித்தால் குற்றம், வெளிநாட்டு மதுவகையான பிராந்தியைக் குடித்தால் சரியானது என்ற தவறான நிலைப்பாடு அரசாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குடலும் ஈரலும் வெந்து மாயும் தமிழ் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இதில் வேதனை என்னவென்றால், மது விற்பனை வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் அனைவரும் அறிந்தவையாக உள்ளன. இந்த விற்பனையை விசேஷ நாட்களில் அதிகரிக்குமாறு அரசே உத்தரவிடுகிறது. ஆனால், மதுவின் தீமையால் இறக்கும் குடிமக்களின் எண்ணிக்கை குறித்த சுகாதாரப் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. ஆயினும், மருத்துவமனைகளில் கல்லீரல் அழுகல் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
மதுப்பித்து, ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, சாராய மயக்கம், கணைய அழற்சி, குடற்புண், இதயநோய், மனநல பாதிப்பு, சுயநினைவிழப்பு போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை குடிப்பழக்கம் உருவாக்குகிறது. ஆரோக்கியமான சமுதாயம் அமைய குடிப்பழக்கம் விரோதி என்பதை அரசு மறந்துவிட்டது.
மூதறிஞர் ராஜாஜி ஒரு கதை சொல்வார். “ஒருவனிடம்மதுவை அருந்துதல், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தல், அவளது கைக்குழந்தையைக் கொலை செய்தல்என்ற மூன்றில் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று சைத்தான் உத்தரவிட்டது. மற்றவை பெரும் பாவம் எனக் கருதிய அந்த மனிதன்,  மதுவை அருந்தினான். போதை ஏறியதும் அவன்,  அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தான். அதற்கு இடையூறாக இருகப்பதாக என்று எண்ணி அழுத குழந்தையையும் கொலை செய்தான். எனவே, எல்லாப் பாவங்களுக்கும் மூலமான மதுவை ஒழிக்க வேண்டும்;  பூரண மதுவிலக்கு மூலம் மதுவைக் கட்டுப்படுத்தினாலே ஏராளமான குற்றங்கள் குறையும்என்பார் ராஜாஜி.
நாம் என்ன செய்ய வேண்டும்?
கள்ளுண்பவர் நஞ்சுண்பவரேஎன்கிறார் திருவள்ளுவர் (குறள்- 926). இதற்காககள்ளுண்ணாமைஎன்ற தனி அதிகாரமே படைத்த அவரைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், குறள் வழி நடப்பதை மதுபோதையால் தவிர்க்கிறோம்.
மதுவின் கொடுமையை விளக்காத இலக்கியம் தமிழில் இல்லை. ஆனால், பழம்பெருமை பேசிக்கொண்டே முச்சந்தியில் கிடக்கும் குடிகன்களைக் கடந்துபோகிறோம்.
நமது அண்டை மாநிலமான கேரளம் குடியின் நாசத்தை உணர்ந்து அதைக் கட்டுப்படுத்த வழிகளைத் தேட்த் துவங்கிவிட்டது. நாமோ, அரசுக்கு வருவாய் கிடைத்தால் போதும் என்ற சிந்தையுடன் இலவசம் வழங்கும் அரசையே தேர்ந்தெடுக்கத் துடிக்கிறோம்.
செருப்புக்குத் தோல் வேண்டியேஇங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?”
- என்று பாடுவார் மகாகவி பாரதி,  பாஞ்சாலி சபதத்தில். சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இலவசப் பொருள்களைப் பெற, நம்மை நாமே விற்று வருவது செல்வக் குழந்தையைக் கொல்வது போலத் தானே?
மதுவிலக்குப் போராளி சசிபெருமாள்.


விலையில்லாப் பொருள்களைப் பெற வரிசையில் நிற்கும் தமிழ்க் குடிமக்கள், தங்கள் விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் விலைபேசும் டாஸ்மாக் தான் அதற்கான வருவாய் ஆதாரமாக உள்ளது என்பதை எப்போது உணரப் போகிறார்கள்? மக்கள் இதனை உணராதவரை, மாநில அரசு திருந்தப்போவதில்லை.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் முன்னணி அரசியல்வாதிகளான மருத்துவர் ராமதாஸ், வைகோ, தமிழருவி மணியன், பொன்.ராதாகிருஷ்ணன், நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களும், சசிபெருமாள், செந்தில் ஆறுமுகம், மதுரை மாணவி நந்தினி போன்ற சமூகப் போராளிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் போன்ற மாணவர் இயக்கங்கள் இப்போது மதுவின் கொடுமையை மக்களிடம் விளக்க முற்பட்டிருப்பது நல்ல அறிகுறி. இளைஞர் சமுதாயமும் மகளிரும் வெகுண்டு எழுந்தால் மட்டுமே, குடிமக்களைகுடிமக்களாக்கும்அரசின் மது வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

1950-ல் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் முக்கிய குறிக்கோளே, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான். உண்மையில் பேச்சுரிமை, எழுத்துரிமை போல, மதுவிலக்கைக் கோருவதும் உறுதிப்படுத்துவதும் குடிமக்களாகிய நமது உரிமை; நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதற்பெரும் கடமையும் கூட.
                                               -நன்றி தமிழ் இந்து