அஞ்சான்- திரை விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, பிரம்மானந்தம், மனோஜ் பாஜ்பாய்

இசை: யுவன் சங்கர் ராஜா

மக்கள் தொடர்பு: ஜான்சன்

வசனம்: பிருந்தா சாரதி

தயாரிப்பு: யுடிவிதிருப்பதி பிரதர்ஸ்

இயக்கம்: என் லிங்குசாமி

லிங்குசாமியிடம் நான்கு கதைகள் கேட்டு, அதில் இதை நான் தேர்ந்தெடுத்தேன் என்று சூர்யா அழுத்தமா சொன்ன போதே, மண்டைக்குள் மணியடித்தது. கதைத் தேர்வை முழுக்க முழுக்க ஹீரோக்களை நம்பி ஒப்படைப்பதன் பலனை பலமுறை பார்த்ததுதான் தமிழ் சினிமா!

சரி.. சூர்யா தேர்வு செய்த அஞ்சான் எப்படி?

கதைநிறைய படங்களில் பார்த்ததுதான். குறிப்பாக நண்பனைக் கொன்றவனை பழிவாங்க பாஷாவாக ரஜினி மாறுவதைப் போல, இதில்ராஜூ பாய்சூர்யா! மற்ற இடங்களில் கொஞ்சம் மானே தேனே பொன்மானே, டுமீல் டிஷ்யூம்..சேஸிங், சத்தமெல்லாம் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். அவ்ளோதான்!

எண்பது, தொன்னூறுகளில் அடிக்கடி சொல்வார்களே.. ஃபார்முலா படம்.. அப்படி ஒரு படம் இந்த அஞ்சான்!

சூர்யாதான் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தது நல்ல கதை என்ற நம்பிக்கையில் அபாரமாக உழைத்திருக்கிறார். சிலுப்பிய தலைமுடி, குளிர் கண்ணாடி, தோலாடை என கலக்குகிறார். மும்பை தாதா ராஜூ பாய், கிருஷ்ணா என இரு வேடங்களிலும் கச்சிதமாகவே நடித்திருக்கிறார். இந்த இரு வேடங்களுக்கும் வித்தியாசம் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் சூர்யா.

ஒரு நடிகராக தன் பங்களிப்பைச் சரியாகச் செய்தவருக்கு, வெற்றி இலக்கு தப்பிவிட்டது. காரணம்லிங்குசாமியின் சுவாரஸ்யமற்ற திரைக்கதை!

நாயகி சமந்தாநேரில் பார்ப்பதை விட திரையில் பார்ப்பவர்களை கிறங்கடிக்கிறார். சூர்யா படம் என்பதாலோ என்னமோ கூடுதல் கவர்ச்சி வேறு. ஒரு வழக்கமான தாதா படத்தில் வழக்கமான நாயகிக்கு என்ன வேலையோ, அதுதான் சமந்தாவுக்கும். ஆனால் தன் அழகால் ரசிக்க வைக்கிறார். இவரைத் தவிர பெரிதாக பெண் பாத்திரங்களே படத்தில் இல்லை.

மனோஜ் பாஜ்பாய் உள்பட ஏகப்பட்ட வில்லன்கள் படத்தில். ஆனால் எவரும் கவரவில்லை.

சூர்யாவின் நண்பனாக வரும் வித்யுத் ஜம்வாலின் உதட்டசைவும், குரல் ஒலியும் ஒட்டவே இல்லை. இத்தனை பிரமாண்ட படத்தில் இந்த சிறு குறையைக் கூட கவனிக்காதது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சரி, சூர்யாவுக்கும் வித்யுத்துக்குமான நட்பையாவது அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களா.. என்றால், நஹி!

சூரி இரண்டு காட்சிகளில் கால் இன்ச் புன்னகை வரவழைக்கிறார். பிரமானந்தம்? தெலுங்குக்காக மட்டுமே அவரைத் திணித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!

படம் முழுக்க யாரையாவது போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார் நாயகன் சூர்யா. சிலரை அவர் எதற்காக சுட்டார் என்றுகூட புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல பஞ்ச் வசனங்கள். தாங்க முடியவில்லை. ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அடுத்த காட்சி என்னவென்பதைச் சொல்லிவிடுகிறார்கள், தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்..

படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். இதில் ஒரு மணி நேரக் காட்சிகளை தாட்சண்யம் பார்க்காமல் வெட்டித் தள்ளினால் கூட படத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அப்படிச் செய்திருந்தால், குறைந்தபட்சம் பார்வையாளர்களின் கோபத்திலிருந்தாவது தப்பித்திருக்கலாமே!

ஒளிப்பதிவும் இசையும் படத்தைச் சகித்துக் கொள்ள ஓரளவு உதவுகின்றன. குறிப்பாக யுவனின் பின்னணி இசை. இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனால் இசையில் முன்பிருந்த இனிமை இல்லையே யுவன்!

குடும்பப் படங்கள், காதல் கதைகளில் பறக்கும் லிங்குசாமியின் கொடி, டான் கதைகளில் மட்டும் சொதப்பிவிடும் போக்கு ஜீ, பீமாவை அடுத்து அஞ்சானிலும் தொடர்கிறது.

இந்தப் படத்தைப் பொருத்தவரை நாயகன் மட்டுமல்ல, படம் பார்க்கும் ஒவ்வொருவருமேஅஞ்சான்தான்

1 comment: