‘ஆவி’ பறக்கிற சூட்டுடன் வந்திருக்கும் மற்றுமொரு படம்! கேன்டீனில் இனி பர்கர், பாப்கானுடன் முடிகயிறு, தாயத்து, எலுமிச்சை பழம் விற்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால், பருப்பு வேகலேன்னு பாயாசம் கவலைப்பட்ட காலம் இல்லை இது. சி.ஜி தொழில் நுட்பம் கொடிகட்டி பறக்கிறது. இசையில் மிரட்டுவதற்கு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் வந்துவிட்டன விதவிதமாக! கொஞ்சம் கதையிருந்தால் போதும். மிச்சத்தை போட்டு நிரப்பி பூரண திருப்தியோடு அனுப்பிவிடலாம் ரசிகர்களை. பொதுவாகவே சுந்தர்சி படங்கள் என்றால் வாய்விட்டு சிரிக்கலாம். அதே தியேட்டர் வாசலில் நோயை விட்டுவிட்டும் வந்துவிடலாம். அரண்மனை... அப்படியொரு அல்டிமேட்!
தங்களுக்கு சொந்தமான அரண்மனையை விற்றுவிட்டு கிளம்பலாம் என்று வந்து சேர்கிறது சித்ரா லட்சுமணன் குடும்பம். வினய், லட்சுமிராய், ஆன்ட்ரியா என்று வந்து சேரும் இவர்களுடன் அந்த அரண்மனை ஜமீனின் வைப்பாட்டி பேரனான சந்தானமும், அவருடன் சமைக்க வந்த சமையல்காரராக சாமிநாதனும் சேர்ந்து கொள்கிறார்கள். ஏற்கனவே அந்த வீட்டிலிருக்கும் காதல் தண்டபாணி, சரவணன் ஆகியோருடன், கண்ணுக்கு தெரியாத ஆவியாக ஹன்சிகா! (ஆஹா... சஸ்பென்சை உடைச்சாச்சே) அந்த ஊர் பூசாரியின் மகளான ஹன்சிகா, அரண்மனை வாலிபன் வினய்யை காதலிக்க, கோவில் நகையை கொள்ளையடித்த கோஷ்டி ஹன்சிகாவை கொன்று அந்த அரண்மனைக்குள்ளேயே புதைக்கிறது. இது தெரியாத வினய் அங்கிருந்து கிளம்பி, டவுனில் வளர்ந்து ஆன்ட்ரியாவின் கணவராக அதே அரண்மனையில் இப்போது.
தங்களுக்கு சொந்தமான அரண்மனையை விற்றுவிட்டு கிளம்பலாம் என்று வந்து சேர்கிறது சித்ரா லட்சுமணன் குடும்பம். வினய், லட்சுமிராய், ஆன்ட்ரியா என்று வந்து சேரும் இவர்களுடன் அந்த அரண்மனை ஜமீனின் வைப்பாட்டி பேரனான சந்தானமும், அவருடன் சமைக்க வந்த சமையல்காரராக சாமிநாதனும் சேர்ந்து கொள்கிறார்கள். ஏற்கனவே அந்த வீட்டிலிருக்கும் காதல் தண்டபாணி, சரவணன் ஆகியோருடன், கண்ணுக்கு தெரியாத ஆவியாக ஹன்சிகா! (ஆஹா... சஸ்பென்சை உடைச்சாச்சே) அந்த ஊர் பூசாரியின் மகளான ஹன்சிகா, அரண்மனை வாலிபன் வினய்யை காதலிக்க, கோவில் நகையை கொள்ளையடித்த கோஷ்டி ஹன்சிகாவை கொன்று அந்த அரண்மனைக்குள்ளேயே புதைக்கிறது. இது தெரியாத வினய் அங்கிருந்து கிளம்பி, டவுனில் வளர்ந்து ஆன்ட்ரியாவின் கணவராக அதே அரண்மனையில் இப்போது.
ஆவி விட்டு விடுமா? ஆன்ட்ரியாவின் உடலுக்குள் என்ட்ரியாகிவிடுகிறது. சூரியகிரகண நாளில், வினய்யுடன் இணைந்துவிட்டால் ஆன்ட்ரியாவோடு ஆன்ட்ரியாவாக அந்த வீட்டிலேயே தங்கிவிடலாமே? இந்த ஆவியின் குறுக்கு யோசனை, ஆன்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்சிக்கு தெரியவர, ஆவியை விரட்டி தங்கையை காப்பாற்ற களமிறங்குகிறார். முயற்சி திருவினையானதா? அல்லது வெறும் வினை ஆனதா? பரபரக்க வைக்கும் க்ளைமாக்சுடன் படம் முடிய, ஆமாம்... நல்லா சிரிச்சோம். நல்லா ரசிச்சோம். பேய்க்கு எப்படா பயந்தோம் என்ற சந்தேகத்தோடு விடைபெறுகிறார்கள் ரசிகர்கள்.
அச்சு பிச்சு ‘லவ்வி’யாகவே பல படங்களில் நடித்திருக்கும் ஹன்சிகா, இந்த படத்தில்தான் என்னமாய் நடித்திருக்கிறார்! ஒரு கிராமத்து பூசாரியின் கிராமத்து பச்சைக்கிளியாக அவரது வெள்ளந்தி வம்புகள் ரொம்பவே ரசனை. தனது தோழியை பெண் பார்க்கதான் வருகிறார்கள் என்று நினைத்து வினய் தலைக்கு கல்லால் குறி வைப்பதும், அப்புறம் வந்தவர் மீது காதல் கொண்டு தவிப்பதுமாக தங்க பதுமைக்கு நடிப்பும் லாவகம்! அதே ஹன்சிகா அடிபட்டு தவிப்பதையும், புதைக்குழிக்குள் தள்ளி அவர் மீது மண் கொட்டப்படுவதையும் காண கல் மனசு வேண்டும். நல்லவேளை... ஹன்சிகா ஆவேசப்படுகிற காட்சிகளில் எல்லாம் ஆன்ட்ரியாவின் உருவம் நமது கண்களுக்கு தெரிந்து, ஹன்சிகாவின் இமேஜை பட்டுத்துணி போட்டு பாதுகாக்கிறது.
ஆன்ட்ரியா மட்டும் சும்மாவா? அவர் நடித்த படங்களில் அரண்மனைதான் விசேஷம். மிக அசால்ட்டாக எதிராளிகளை கொலைவெறியோடு வீசும்போதும், ஒரு மர்ம சிரிப்புடன் அண்ணன் சுந்தர்சியை நோக்குவதுமாக மிரள வைக்கிறார். இப்படி நன்றாக நடிக்கக்கூடிய எல்லாரையும் இவ்வளவு காலம் கவர்ச்சி பதுமையாகவே காட்டிய முந்தைய பட இயக்குனர்களே, இந்தா பிடியுங்கள் சாபம்.
வினய்யை எதன் அடிப்படையில் ஹீரோவாக நடிக்க வைக்கிறார்கள் என்பதே புரியவில்லை. பஞ்சு மிட்டாயை கொடுத்தால் கூட கடிச்சுதான் தின்பார் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் அவரை சொந்த குரலில் பேசவும் வைத்திருக்கிறார் சுந்தர்சி. பேய்ப்படம் என்பதால் கூடுதல் எபெக்ட் இருக்கும் என்று நினைத்திருப்பாரோ?
புத்தி செத்த காலத்துல கத்தி வீச கிளம்புன மாதிரி, லட்சுமிராயை கவர்ச்சிக்கென்று இறக்கிவிட்டிருக்கிறார்கள். தான் ஆடாவிட்டாலும், பல காட்சிகளில் தசை ஆடுகிறது அவருக்கு!
தங்கையை காப்பாற்ற துடிக்கும் அண்ணனாக சுந்தர்சி. எப்பவும் அலட்டிக் கொண்டதேயில்லை அவர். இந்த படத்திலும் அப்படியே. தன் தங்கையின் உடலில் இன்னொருத்தியின் ஆவி புகுந்திருக்கிறது என்பதை அறிந்த பிறகும் கூட, அவர் காட்டும் நிதானம், ‘பதறினால் சிதறிடுவாய்’ என்ற ஆட்டோ வாசகத்தின் அம்சம்! ஒரு இயக்குனராக அவர் செய்திருக்கும் சின்ன சின்ன நகாசு வேலைகள்தான் இந்த படத்தின் பலமே! அந்த க்ளைமாக்சை அவர் அரண்மனை வாசலிலோ, கோவிலுக்கு வெளியேவோ கூட வைத்திருக்க முடியும். ஆனால் நீர் சுழித்தோடும் ஆற்றங்கரையில், படபடவென்ற சிற்றலைகளின் மத்தியில் வைத்திருக்கிறார். அந்த கிராபிக்ஸ் மிரட்டலும், ஆன்ட்ரியா அந்தரத்தில் பறந்து சுழற்றி வீசப்படுவதும் அழகோ அழகு!
சமீபகாலமாக பேட்டரி தேய்ந்து, லாட்டரியும் ஓய்கிற நிலையில் இருந்த சந்தானம், இந்த படத்தில் ஆயிரம் மெகாவாட் அற்புதத்தோடு சீறிக் கிளம்பியிருக்கிறார்! மனுஷன் பேயிடம் போய் தன் நக்கலை வைத்துக் கொள்ளலாமா? சும்ம்மா கதற கதற அடிக்கிறது சந்தானத்தை. ‘தாய் மசாஜ் கேள்விப்பட்டிருக்கேன். இது பேய் மசாஜ் போலிருக்கேடா’ என்று அவர் டயலாக்கில் கபடி ஆடுவதை நினைத்து ரசிக்கலாம். ‘பழைய பிளேடுல பைல்ஸ் ஆபரேஷன் பண்ணின மாதிரி ஏன் இப்படி ஒடுறான்’ என்று இன்னொரு இடத்தில் அவர் கேள்வி கேட்க, எங்கய்யா புடிக்கிறாரு இதையெல்லாம்? என்கிறது தியேட்டரின் கலகலப்பு.கோவை சரளாவை கல்யாணம் செய்துவிட்டோம் என்பதே தெரியாமல், இளம் வயது நினைவுகளிலேயே திரியும் மனோபாலா, மனைவியை சைட் அடிக்க திரிவதெல்லாம் பலே பலே பல்லேலக்கா! இந்த பாலை கொண்டுபோய் ஆன்ட்ரியாவிடம் கொடு என்று கோவை சரளாவை அனுப்பி வைக்கும்போதே புரிந்துவிடுகிறது, சரளாக்காவின் நெக்ஸ்ட் பர்பாமென்ஸ்! அதெல்லாம் அவருக்கேயுரிய மேனரிசம்யா...!
காட்சிகளுக்கேற்ப, கண்களும் மாறிவிடுமோ என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமார். பயங்கரமான காட்சிகளில் பதற வைக்கும் கேமிரா, காதல் காட்சிகளில் சாந்தம் காட்டுவது எப்படியோ? பிரமிக்க வைக்கிறார் யூகேசி. இசை பரத்வாஜ். பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். பின்னணி இசையில் கார்த்திக்ராஜா கல்லாபெட்டி நிரம்ப காரணமாக இருக்கிறார்.
சந்திரமுகி, ஆயிரம்ஜென்மங்கள் படங்களின் சாயல் இருந்தாலும், அரண்மனையின் பெயின்ட் வாசம் என்னவோ புதுசுதான்! டைரக்டர் சுந்தர் சி பேயை வணங்கி ‘பே ஸ்லிப்’பை கூட்ட வேண்டிய நேரமும் இதுதான்!
நன்றி:ஆர்.எஸ்.அந்தணன்
0 comments:
Post a Comment