இந்து சமயம்

ஆகமங்கள், வேதங்கள்,  உபநிடதங்கள், மனுதர்ம சாஸ்திரங்கள்
நம் சைவ சமயிகள் நமக்கான வேதநூல் எது கேட்டால் அடித்துச் சொல்ல என்று ஒரு நூல் இல்லை. சிலர், பொதுவான வேதங்கள், உபநிடதங்கள் என்பர்; மறு சிலர் சைவ ஆகமங்கள் என்பர். வேறு சிலர் தேவார, திருவாசகம் என்றும் கூறுவர். இல்லை, இல்லை மனுதர்ம சாஸ்திரமே நம் வாழ்வு முறை என்றும்  கூறுவர். வைணவ பகவத்  கீதையின் பக்கம் சாய்பவர்களும் உளர். சரி, இந்தப் பண்டைய நூல்களில் என்னதான் எழுதப்பட்டு இருக்கிறது என்பது நம்மவர் பல பேருக்குத் தெரியாது. இந்தப் பூவுலகிலே கடவுள் எங்களைப் படைத்து, வாழும் வசதியையும் செய்து கொடுத்து,மனிதனின் முன்னேற்றம் கருதி, மனிதனுக்காகப் படைக்கப்பட்ட இந்த நூல்களில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு மேலெழுந்தவாரியாக ஒரு மனிதக் கண்ணோட்டம் விடுவோமா? நான் ஒரு சமய ஞானியோ, வேதாந்தியோ, சித்தாந்தியோ இல்லை. ஒரு சாதாரண மனுஷனாக இருந்து, இந்த மனிதக் கண்ணால் கண்டதை இந்தச் சின்ன கட்டுரையின் மூலம் எழுதுகிறேன்.
ஆகமங்கள்:
ஆகமங்கள் மூன்று வகையானவை. அவை, சைவ, வைணவ, சாக்த   ஆகமங்களாகும். சைவாகமம் சமய, சம்பிரதாய முறைகளை மிகவும் விரிவாக விளங்க வைக்கிறது. வெவ்வேறு கடவுள்களுக்கு எப்படிக் கோயில்கள் கட்டுவது, வழிபாட்டு முறைகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலமாக  பிறப்பிலிருந்து  இரட்சித்து ஆன்ம ஈடேற்றம் அடைய  வழிகள்,  வழிபாட்டுக்குரிய தெய்வங்கள், மந்திரங்கள், தந்திரங்கள், சட்ட திட்டங்கள், விழாக்கள், பூசை வழிமுறைகள், வழிபாட்டுத் தலங்கள், பிரபஞ்ச, ஆன்மீகத் தத்துவங்கள், உலக இரகசியங்கள் என்று பல விடயங்களையும் பற்றி விளக்கம் அளிக்கிறது.
வேதங்கள்:
வேதங்கள் நான்கு. இருக்கு, யசூர், ஜாமம், அதர்வம்.
                                 இருக்கு வேதம்:
இதன்முன்பகுதி இந்திரன்,அக்கினி,வாயு,சூரியன் எனப் பல உப தெய்வங்களைப், பொருள் வேண்டிப்  புகழாரம் சூட்டும் சுலோகங்களைக் கொண்டது. பின்னர், சோமபானம் வடிக்கும் முறை பற்றியும், கடைசியில் உடன் பயன் தரக்கூடிய  ஞான சக்தி, மந்திர சக்திகொண்ட வாக்கியங்கள்,  சடங்குகள், பூசைகள், மந்திரங்கள் என்பன பற்றி விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. 
                         யசூர் வேதம்:
யசூர் வேதம் வெவ்வேறு  கடவுளர்களுக்கும் செய்யக்கூடிய விதம் விதமான சடங்குகள், பூசைகள், யாகங்கள் பற்றிய வழிமுறைகள், விதிமுறைகள், பல மட்டத்தில் ஞானமுள்ளவர்களுக்கு ஏற்றவாறு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.
                         சாம வேதம்:
சாம வேதம், வெவ்வேறு சடங்குகள்,பூசைகள், யாகங்களிலும் பாடப்பட வேண்டிய இனிய கீதங்களைக் கொண்டுள்ளது. 
                       அதர்வ வேதம்:
அதர்வ வேதம் வழிபாட்டு முறைகள், மந்திர உச்சரிப்புகள், தந்திர உத்திகள், கடவுள், ஆன்மா பற்றிய விளக்கங்கள், கிரக வழிபாடுகள், அதற்கான பலிகள், சடங்குகள், மற்றும் பேய், பிசாசு, நோய், நொடி, விசமிகளிளிருந்து தப்புவதற்கான வழிபாட்டு முறைகள் என்பனவற்றை விளக்குகிறது.
உபநிடதம்:
வேதங்கள் உலக இன்பங்களை வேண்டிச் சிறுதெய்வங்களை எப்படி வழிபடலாம் என்று கூடுதலாகக் கதைத்து ஆன்மீக ஈடேற்றம் பற்றி மேலாகவே தொட்டுச் செல்கின்றது. ஆனால், உபநிடதங்கள் உலகப் பற்றுக்களைத் துறந்து எவ்வாறு ஆன்மாவானது கடவுளின் காலடியில் சரணடையலாம் என்று போதிக்கின்றது. ஆன்மிக அனுபவம், வாழ்க்கை, பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு தத்துவம் என்பனபற்றி விளக்கம் கொடுக்கின்றது.
மனுதர்ம சாஸ்திரம்:
மனுதர்மம் உலக சமுதாயம், படைப்பு, திடமாக வரையறுக்கப்பட்ட நாலு உயர்-கீழ் சாதி வகுப்பு முறைகள், ஒவ்வொரு சாதியினரும் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விடயங்கள், கீழ் சாதியினருக்கான கட்டுப்பாடுகள், தண்டனைகள், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள்,  மேல்சாதியனருக்குச் செய்ய வேண்டிய சேவைகள், வசதிகள், உரிமைகள், பெண்கள் இருக்க வேண்டிய கீழ்தர நிலைபற்றி விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மந்திரங்கள்,  பூசைகள், சடங்குகள் எல்லாம் பிராமணர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். கீழ் ஜாதியினர், பிறப்பிலிருந்து கீழ் சாதியினராகவே இருந்து மேல் சாதியினருக்குச்  சேவகம் செய்வதன் மூலம் மாத்திரமே மறு பிறப்பில் கொஞ்சம் மேலே உயரலாம் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. பூசைகள், மந்திரங்கள்  பிராமணர் மட்டுமே செய்யவேண்டும்.கீழோர் செய்தால் தண்டனை உண்டு.
சாரம்:
சரி,சுற்றிச்,சுற்றிச் சுப்பன் கொல்லைதான். இந்தத் தெய்வீக நூல்கள் எல்லாம் முழு முழு தெயவீகமாகவே இருக்கின்றன.ஒரு மனிதன் வாழ்வதற்கான நீதி முறைகளோ, அற நெறிகளையோ இவற்றில் கூறப்படவே இல்லை. எல்லாமே கடவுள் என்பவரை  உச்சியில் குஷிப்படுத்தினால் அவர் உள்ளம் மகிழ்ந்து  மனிதனுக்கு  பிரதி உபகாரம் செய்வார் என்பது  திருப்பத் திரும்ப உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவரே மனிதனை மனிதனாகப் படைத்து விட்டு, சீச்சீ ,இந்த மனிதப் பிறப்பு பொய்யானது, வேறு ஒரு நல்ல வாழ்வு வேறு எங்கோ இருக்கிறது என்று மனிதனைக் கொண்டு, பண விரயம் செய்து பிராமணரின் வருமானத்திற்காக பெரும் பூசைகள் செய்ய வைப்பது என்ன விதத்தில் ஞாயம் என்று விளங்கவில்லை. இந்த,விடயம் எல்லாம் அறியும் அளவிற்கு எங்களுக்கு ஞானம் போதாது என்று ஞானம் பெற்றோர் கூறுவர். மன்னிக்கவும் மனிதனுக்கு மனித பாசையில் மனிதனுக்கு விளங்க ' றம் செய விரும்பு, ஆறுவது சினம்' ' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று எழுதினால் மிகவும் இலகுவாகவே விளங்குமே? ஏற்கனவே செத்துப்போன தெய்வ மொழியான சமஸ்கிருதத்தில் வாக்கியங்களைக் கருத்து விளங்காமலே சொல்லி அதில் உண்டாகும் அதிர்வின் மூலம் தெய்வத்தைக் காண்பவர்களும் இருக்கிறார்கள். சொல்லும் சுலோகங்களை இறைவனை நோக்கிச் சொல்லாது மனிதனை நோக்கி அவன் வாழ்வில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்பவற்றைத் திரும்பத் திரும்பக் கூறினால் மாத்திரமே,மனிதனின் மனதில் ஆணி அடித்தால் போல் நிலைத்து நிற்கும்.தமிழில் உள்ள தேவார, திருவாசகம்,சிவபுராணம் எல்லாமே தேவர்களை ஆரம் செய்யும் பாடல்களே.கடவுளைக் கடவுள் என்று நோக்காமல்,ஒரு சாதாரண இலஞ்சம் வாங்கும் மனிதன் என்றல்லவா நம் நடவடிக்கைகள் எல்லாம் செய்யப்படுகின்றன!
எல்லாம் வல்ல இறவனைப் போயும் போயும் சாதாரண மனுசனாய்ப் பிறந்தவன் நீ வாழ்க, நீ வெல்க, உனக்குப் போற்றி, நீ அவரின் தந்தை, இவரின் மகன், மற்றவரின் மாமன், அவனை வென்றவன், இவனை அளித்தவன்   என்று ஆசீர்வாதம் அல்லது அங்கீகாரம்  செய்யும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவிற்கு வல்லவர்களா?அல்லது அவ்வாறு கூறாமல் விட்டால் கடவுள் என்னஇறந்து' 'தோற்று' 'புகழ்' இன்றிப் போய்விடுவாரா?இப்படியாகத்தினமும் பலதடவையும் ஒரு  கடவுளுக்குச்  சொல்லிக்கொண்டே இருந்தால் அவருக்கு மட்டுமல்ல இப் புதுமையான உலகில் சிந்திக்க தொடங்கியிருக்கும் இளைய சமுதாயத்திகும்  விசர்,அலுப்பு அல்லது சினம் பிடிக்காதா?ஆதலால், நமது சமய ஆராதனை முறைகளில் நம் வருங்கால சந்ததியினரின் கேள்விகளுக்குத்  திருப்தியான  பதில் கொடுக்கக்கூடிய முறையில் சீர்திருத்தம் செய்யப்படுதல் அவசியம்  ஆகும்.
 …………………………………………………..ஆக்கம்:செல்லத்துரை-சந்திரகாசன்.

No comments:

Post a Comment