கர்மவினை மீது பழி போடாதீர்கள்!!!

என்னிடம் பலர் கேட்கின்ற கேள்வி இது."சற்குரு!விபத்துக்கள்  ஏன்  நிகழ்கின்றன?தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமா?அல்லது கர்மவினைகள் காரணமா?அவர்களுக்கு எனது பதில் "மோசமாக ஓட்டும் மனிதர்களே காரணம்.மோசமான ஓட்டம் மோசமான செயல் தானே!
உடனே அவர்கள் கேட்பார்கள்,"ஆனால் அடிபட்டு இறந்தவர் நடந்து தானே போய்க் கொண்டு இருந்தார்.
ஆம்.ஆனால் கர்மவினை என்றால் நீங்கள் செய்த செயலாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.உங்களைச் சுற்றி நிகழ்வதாகக் கூட இருக்கலாம்.
"நான் எங்கள் வீட்டில்  சரியாகத் தானே இருக்கிறேன்.விதி முறைகளைப் பின்பற்றுகிறேன்."என்று நீங்கள் சொல்லலாம்.
ஆனால் உங்கள் வீட்டில் வசிப்பவர் வேறு  விதமாக வாழ்ந்தால் அந்தப் பாதிப்பு  உங்களுக்கும் வரும் தானே.
உங்களைப் படைத்தவர் அறிவைக் கொடுத்ததன் காரணம்,அதை உறைந்து போக விடுவதற்காக அல்ல.உரிய நேரத்தில் பயன் படுத்துவதற்காகவே!
மனிதர் தங்கள் மூளையின்   12 % மட்டும் தான் பயன்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.அப்படியானால் மூளையின் பெரும் பகுதியை உறைய விட்டிருப்பதாக அர்த்தம்.அப்படி உறைய விட்டிருப்பதன் காரணங்களில் ஒன்று வாழ்க்கை குறித்து உங்களுக்கு இருக்கும் மூடத்தனமான அபிப்பிராயங்கள் தான்.அவற்றைப் புறந்தள்ளுவீர்கள் என்றால் உங்கள் அறிவு துடிப்போடும்,விழிபோடும் இயங்கத் தொடங்கும்.
எப்போதும் எல்லாவற்றுக்கும் தயாராக ஏதாவது சில காரணங்கள் வைத்திருப்பதாலேயே உங்கள் மூளையைத்,தூங்கவிட்டு அதன் 88 % அளவை உறையவிட்டு மனிதனாக பரிணாமம் கொள்வதனை விரயமாக்குகிறீர்கள். எம் மூளை இந்த நிலைக்கு உருவாக பல இலட்சம் ஆண்டுகள் ஆயின. ஆனால் மனிதன் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.மூட நம்பிக்கைகளால் அதனை சிதைக்காமல் அடுத்து வரும் தலைமுறைகளுக்காக ஆவது உங்கள் மூளையினை பாதுகாத்து வைப்பீர்களா?
                ……………………………………………………………………சற்குரு வாசுதேவ்

பறுவதம் பாட்டி(உண்மைகளின் அலசல்)


ஈழத்து திரைப்படம் 
[நடந்தது என்ன?]
மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத்தாத்தாவுடன் ஈழத்துக் கலைஞர்களின்  பங்களிப்பில் கனடாவில் தயாரிக்கப்பட்டு  தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் ஒன்றினை பார்க்கவென்று சென்று திரும்பிய பறுவதம் பாட்டி படம் முடிந்ததும் தாத்தாவினையும் அழைத்துக்கொண்டு எங்கவீடு வந்தவர், தாத்தாவுடன் புறுபுறுத்துக்கொண்டமை முதலில் எங்களுக்கு ப்புரியவில்லை.
"என்ன பிரச்சனை" என்று அம்மா கேட்டபோது தான் பாட்டி  பேசத் தொடங்கினார்.
"என்ன செய்யிறது. படம் பார்க்க தியேட்டர் போகாதனாங்கள் எங்கட கலைஞர்களும் சினிமாத்துறையில முன்னேறவேணும் எண்டுதானே ஆதரவு குடுக்கவேணும் எண்டு போறம்.அங்க போனா பழைய நிலை தான்."
"ஏனம்மா படம் சரியில்லையே?" என்றவாறே அம்மாவும் பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
"அதயேன் பிள்ளை கேட்கிறாய்! படம் எடுத்தவர் அவற்றை கலியாணவீட்டுக்கு சொந்தக்கரருக்கும்,நண்பர்களுக்கும் அழைப்பு விட்டமாதிரியெல்லொ படத்திலை ஆட்களை நடிக்க எண்டு சேர்த்திருக்கிறார். வந்தவையும் பொம்மை மாதிரி வந்து,வந்து போகினம். கதைக்கிறவரின் குரல் கேட்கும்போது மற்றவருடைய முகம் தான் திரையில தெரியுது. அப்பிடித் தெரிஞ்சாலும் 'ம்' எண்டு தான் முகத்தை வச்சிருப்பார். அவர் சொல்லி முடியும் வரை மற்றவர் முகத்திலை ஈயும் ஆடாது. கதைச்சுக்கொண்டு நிக்கிற இருவரும் யார்,இவர்களுக்கிடையில் என்ன உறவு,எதற்காக சந்திக்கினம்,எங்கை சந்திக்கினம் ஒரு விளக்கமும் இல்லை. நடிகர்மாரிலும் பார்க்க காருகள் தான் நிறைய நடிக்குது. ஒழுங்கான கதையில்லைசம்பந்தமில்லாத காட்சிகள்.கடவுளே! எனக்கு ரிக்கற் சிலவை யோசிக்கேலைஒரு வளர்ந்த நாட்டில வாழ்ந்தும் எவ்வளவு நேரத்தையும்,பணத்தையும் இப்பிடி செலவழிச்சு ஒரு நல்ல திரைப்படத்தை தரமுடியாமல் எங்கட ஆட்கள் இருக்கினமே எண்டதுதான் கவலையா போச்சுது."
"நடிகர்மாரை தேடிப்போகாம கண்டநிண்டவையளை திரைக்கு கொண்டுவந்தா அப்பிடித்தானே இருக்கும்.” என்று அண்ணாமலைத் தாத்தாவும் தன்னுடைய கவலையினை வெளிப்படுத்திக்கொண்டார். “ஏனம்மா ஒரு சில நல்ல இலங்கைத் தமிழ் சினிமாப் படங்கள் முந்தி வந்து போய் பார்த்தநீங்கள் தானே." என்று அம்மா நினைவூட்டினார்.

"அதென்ன இரண்டு,மூண்டு படங்கள் தான்.பிறகு வளரேல்லையே! நல்லாயெல்லெ விழுந்திட்டினம்."

“எங்கட சினிமாத்துறையும் இனிமேற் காலத்திலை சாதனைகள் படைக்கத்தான் போகுது.இருந்து பாருங்கோ அம்மா.”

"பார்ப்பம்"என்று அக்கதையினை சலிப்புடன் முடித்துக்கொண்டார் பாட்டி.
எங்கடை கலைஞர்களை ஊக்குவிப்பதில் பாட்டிக்கு இருக்கும் மலையளவு ஆர்வத்தினை எண்ணியவாறு  நானும் கொம்பியூற்றரில் மூழ்கினேன்.
--பேரன்:செல்லத்துரை மனுவேந்தன்

பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பஸிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.



      



அது,இது,எது



எரிச்சலை ஊட்டுகிறது
   எனக்கு மேல்- ஒரு சக்தி
              உண்டு-அதை நம்புகிறேன்
மணக்கும் வாசனையில்-ஒரு கவர்ச்சி
              உண்டு-அதை நம்புகிறேன்
உனக்கு மேல்-ஒரு மோகம் 
              உண்டு -அதை  நம்புகிறேன்
பிணக்கும் பிரச்சனைகளுக்கு-ஒரு தீர்வு
              உண்டு-அதை நம்புகிறேன்

நந்தியை விலத்தி-ஒரு அருள் 
             காட்டியவனை-எனக்குப் புரியவில்லை
மந்தியின் துணைக்காக-ஒரு வாலியை
             கொன்றவனை-எனக்குப் புரியவில்லை 
அந்தியில் வாடும்-ஒரு மலரை
             மாட்டியவளை-எனக்குப் புரியவில்லை
இந்திரலோககத்தில் இருந்து-ஒரு கலகம்
             மூட்டியவனை-எனக்குப் புரியவில்லை

வருணத்தை காப்பாற்ற-ஒரு பக்தனை
             நீ  அழைக்காதது-எரிச்சலை ஊட்டுகிறது
கருணைக்கு அகலிகை-ஒரு சீதைக்கு
             நீ  தீக்குளிப்பு-எரிச்சலை ஊட்டுகிறது
ஒருவனுக்கு ஒருத்தி- பஞ்சபாண்டவருக்கும்
             நீ   ஒருத்தி-எரிச்சலை ஊட்டுகிறது
எருமையில் ஏறி-ஒரு சாவித்திரியை 
             நீ கலக்கியது-எரிச்சலை ஊட்டுகிறது

[ஆக்கம்:கந்தையா  தில்லைவிநாயகலிங்கம்]