இச்சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன.அப்பொழுது நானோ அக்காவோ பிறந்திருக்கவில்லை.ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாட்டியின் சகோதரன் குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று பாட்டியும் தாத்தாவும் அங்கு சென்று சிலகாலம் தங்கியிருந்தனர்.
அவ்வேளையில்,அவர்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்ததொரு இளம் தமிழ் குடும்பத்தினர் தங்கள் ஒரே ஒரு பிள்ளையைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.பாட்டியும் தாத்தாவும் ஆவலுடன் கூர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.அவர்கள் உரையாடல் பிள்ளையின்மொழித்திறமைகள் பக்கம் திரும்பியது.தம்பிள்ளைக்கு நான்கு மொழிகள் பேசத்தெரியும் என்று அப்பெற்றோர்கள் பெருமையுடன் கூறியதும் ஆச்சரியமடைந்த பாட்டி, அப்பிள்ளையை பார்த்தவாறே பேராவலுடன் அவை என்ன?என்ன? என்று கேட்டிருக்கிறார்.அவர்களும் எவ்விதமான தயக்(வெட் )கமில்லாது இங்க்லீஷ்,பிரெஞ்ச்,ஜெர்மன்,இத்தாலி என்று கூறியிருக்கிறார்கள்.பாட்டிக்கு கோவம் வந்தது என்று சொல்வதை விட,அந்த வீட்டுக்குள் வந்தது சுனாமி என்றுதான் சொல்ல வேணும்.அண்ணாமலைத்தாத்தாவுக்கு இரு பக்கத்தையும் சமாளிப்பதில் பெரும் திண்டாட்டமாய் போய்விட்டது.வந்தவர்களும் தப்பினால் போதும் என்று பறந்துவிட்டனர்.
கனடா திரும்பி வந்த பின்னரும் பாட்டி அப்படியான தமிழர்களை நினைத்து நினைத்து அம்மா அப்பாவுடன் மனம் குமுறுவர்.பிள்ளை தமிழ் படிச்சா இங்கிலீஷ் எங்க பிள்ளைக்கு ஏறாது என்று சொல்லி பிள்ளையளையும் ஏமாற்றி உலகத்தையுமெல்லே ஏமாற்றுகினம்.ஏன்? என்னவோ எல்லாம் படிக்கிற பிள்ளைக்கு ஒரு தாய் மொழியினைப் படிக்கிற மட்டும் பாரமோ சொல்லு!இந்தியாவிலும் சரி,ஐரோப்பிய நாடுகளிலும் சரி,ஒரு படிச்சவன் எத்தனை மொழிகளை அறிஞ்சு தெரிஞ்சு வைச்சிருக்கிறான் பாத்தியே.அதுவும் கனடாவில பல்மொழி தெரிஞ்சவனுக்கு எவ்வளவு மரியாதையை இருக்கு.
இது தெரியாம நொண்டிச்சாட்டேல்லே சொல்லிக் கொண்டு திரியினம்.இருக்கிற உரிமைகளே அனுபவிக்க தெரியாத இவர்கள்..........
பாட்டியை சமாதானப் படுத்துவதர்ககவே பேச்சுக்காக ஒருநாள்"சரி உங்கட பேரப்பிள்ளைகளை அப்படி வளர்த்து இந்த உலகத்திற்குக் காட்டுங்கோவன்"என்று அப்பா அம்மா கூறியதை பாட்டி ஒரு சவாலாகவே எடுத்திருக்கவேணும்.
எவ்வினத்தரும் எப்படியான சூழ் நிலையில் எங்கு வாழ்ந்தாலும் அக்கறையுடன் தன் தாய் மொழியினைக் கற்றல் என்பது ஏனைய மொழிகளிலும் அம்மொழியே கற்பதற்கு இலகுவானது என்ற அனுபவசாலிகளின் கூற்றினை பாட்டி எங்கோ படித்திருக்கவேணும்.
எவராயினும் எதையேனும் சிந்திக்கும் போது தமக்குப் பரம்பரைப் பழக்கமானதும்,தனது குருதியில் ஊறிபோனதுமான தன் தாய் மொழியில் சிந்திக்கும்போது,சற்றுத் திறம்பட,உருப்படியாக சிந்திக்கலாம் என்று அறிஞர்கள்
அடிக்கடி வலியுறுத்தி வருவதனை பாட்டி அறிந்திருக்கவேணும்.
குழந்தைகளுக்கு இரட்டை மொழிக் குழப்பம் வந்து விடும் என்று நொண்டிச் சமாதானம் சொல்லிக் கொண்டே பிள்ளைகளுடன் தம் தாய் மொழி பேசாமல்,(தப்புத் தப்பான)ஆங்கிலத்தில் பெற்றோர்கள் அவர்களுடன் உரையாடுவது,தம் வாழ்க்கையிலும் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கையிலும் கோணல் புள்ளிக் கோலம் போடுவதுடன்,பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை வளர்க்கின்றனர் என்பதனைப் பாட்டி உணர்ந்திருக்கவேண்டும்.
மேடையிலே தமிழ் தமிழ் என்று முழங்கி வீதியிலே தமிழர் உரிமைக்காக கூச்சலிட்டு,பின் வீடு திரும்பியதும் பிள்ளையுடன் ஆங்கிலம் பேசும் ஒரு தமி(ஆங்கி)ழிச்சியாக பாட்டி வாழ விரும்பவில்லை.
அப்பா,அம்மாவின் அவ்வார்த்தையினை ஒரு வேதமாகவே எடுத்துவிட்டார் பாட்டி. அடுத்தவனின் அம்மாவை ஒரு மரியாதைக்காக சும்மா அம்மா என்று அழைக்கலாம்.அவரையே சொந்த அம்மா என்று அழைத்திட முடியுமோ?வெட்கமாய் இருக்காதா?என்று தாத்தாவுடன் பாட்டி இன்று வரை போனில் முணு முணுப்பது எனக்கும் கேட்கிறது.பாட்டியின் தாய் மொழி அடங்காப்பற்று கண்டு ஆடிப் போனவன் நான்.
எல்லா மொழிகளையும் கற்போம் தாய் மொழியை மறந்து அல்ல!எல்லாத் தாய்மாரையும் நேசிப்போம் சொந்தத் தாயினைக் கொன்று அல்ல!
----------------------------------------------- செ.மனுவேந்தன்
(தூறல்-கனடிய தமிழ் சஞ்சிகை பெப்ரவரி 2010 இதழில் வெளிவந்தது.)
No comments:
Post a Comment