அடுத்தொரு பிறப்பு
அடுத்த வீட்டுத் தம்பியுடன்
அரட்டை எனில்
ஆம்பிளையோடு என்ன
சிரிப்பும் நெளிப்பும்!
இரா விழாவிற்கு
கூடி இருவர் மூவர்
நால்வர் என்று
வீதி வழி பேசிச் சென்றிடில்
பொம்புளையள் என்ற நினைப்பே
இல்லாமல் போச்சென
அக்கம் பக்கம் பேச்சு!
தெரிந்தோ தெரியாமலோ
போச்சு!
தேவடியாள் என பேச்சு
ஊரில்!
உள்ளுணர்வின் உந்துதலால்
வந்துபோன ஒருவன்மேல்
சிறப்பியல்பு கண்டு
காதல் கொண்டால்
காதலும் வேண்டுமோ
கண்டறியோம்
எனக்
கடும் ஏச்சு வீட்டில்!
அலுவலகமோ
அன்றி
வேலை கொள் நிலையமோ
அங்கே
அடுத்தொருவர்
முதியரே எனிலும்
ஆடவர் ஆயின் அவருடன்
சிரித்து குழைந்து பேசிடில்
பக்கத்துளார் பார்வையில் மாற்றம்
விவத்தை கெட்டவள் என விவரிப்பு!
என்செய!
தோற்றப் பொலிவொடு ஆடவனாய்
பிறப்பெடுத்து
ஊரெலாம் உலாப்போய்
உலகிலுள இன்பம் பல நாடி
கோடிமுறை சிரித்து
குதூகலித்த வாழ்வின்
அனுபவங்கள் தேட வேட்கை!
மூடிய வீட்டினுள்
மூலைகள் தேடி உட்கார்ந்திடில்
தேடிடல் கூடிடுமோ
ஆனந்தம்!
-''அப்படியே இரு'' கவிதைத் தொகுப்பிலிருந்து ..
No comments:
Post a Comment