பட்டுப் புரிந்த பறுவதம் பாட்டி-

பறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார்.அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து  வெங்காயம் மிளகாய் அறுக்கிறவோ இல்லையோ அரசியல் பேசி குசினியை விவாதக் களமாக்கி   அம்மாவை "அறுக்கிற" சத்தம் மட்டும் என் அறை வரை கேட்டுக்கொண்டு இருந்தது.
பாட்டியும் அண்ணாமலை தாத்தாவும் அப்பாவின் ஸ்பொன்சரில் கனடா வர இருக்கும் காலத்தில் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை.காரணம்,கனடாவில் முதியவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை மறைத்து,புதிய சூழ்நிலைகளால் அவர்கள் சந்திக்கும் அவஸ்தைகளை மட்டும் ஒரு பக்க சார்பாக திரிபுபடுத்தி வெளியிடும் இலங்கை பத்திரிக்கை விமர்சனங்களை பறுவதம் பாட்டி படியாமலில்லை.இருந்தாலும் அப்பா,அம்மாவின் கட்டாயத்தின் பேரிலேயே அவர்கள் புறப்பட்டுக் கனடா வந்தனர். இங்கு வந்து இறங்கியதும்,எயர்போட்டிலேயே பாட்டி அப்பாவிடம் "கனடாவில நடக்கிற தெல்லாம் எங்களுக்குத் தெரியும்.உங்கட வேலைக்காரறாய் மட்டும் இங்க நாங்க இருக்கமாட்டோம்"என்று கடுமையாகவே பாட்டி கூறிவிட்டார்.அன்புள்ள பாட்டியை எதிர்பார்த்த அப்பா அம்மாவுக்கு பாட்டியின் நிபந்தனை அதிர்ச்சியை கொடுத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது இருவரையும் அன்போடு அழைத்து வந்தார்கள்.அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்யக் கூடாது என்பதில் அப்பாவும் அம்மாவும் மிகவும் கவனமாகவே இருந்தனர்.வீட்டில் அவர்களுக்கென்று ஒரு அறை,படுக்கை,தமிழ் டிவி,தொலைபேசி,விரும்பிய உணவுவகை,எனப் பல வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டன.சில வருடங்கள் கடந்தன.ஆனால் அவர்களுக்கு தாம் சிறை வைக்கப்பட்ட து போன்ற உணர்வு தோன்றியது.தாயகத்தில் தாம் வாழ்ந்த விதத்தை பாட்டியும் தாத்தாவும் எண்ணிப் பார்த்தனர்.ஊருக்குத் திரும்பிப் போகலாம் என முடிவு எடுத்தனர்.அவர்களின் முடிவு அப்பா அம்மாவுக்குக் கவலையினைக் கொடுத்தாலும்,அவர்களின் விருப்பத்தினை அப்பாவும் அம்மாவும் நிறைவேற்றியே   வைத்தனர்.
ஊருக்குப் போனதிலிருந்து பாட்டியும் தாத்தாவும் படு பிஸியாகிவிட்டனர்.வீட்டினை சுத்தம் செய்யாமல் வாழமுடியவில்லை.விறகு தேடி அடுப்பு ஊதி பானை   ஏற்றாமல் உணவை உண்ண முடியவில்லை.வலித்து வலித்து கிணற்றில் தண்ணி  எடுக்காமல் அதனைக் காணமுடியவில்லை.ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசி மகிழ அவர்களின் இயலாமை தடுத்தது.
பாட்டியும் தாத்தாவும் களைத்துப்போனார்கள்.அக்கம் பக்கத்தரின் முணுமுணுப்புக்கள்   தாத்தாவுக்கு உற்சாகத்தை  கொடுத்திருக்கவேனும்.தாத்தா பேசினார்.
"இங்கை பார்! மேன் எங்களை கனடாவிலை கூப்பிட்டு வைச்சிருந்து என்ன குறை விட்டவன் சொல்லு?அங்கை அதுகள் ஒன்றுக்கு இரண்டு வேலையை விறைக்கிற குளிருக்கை,ஓடித் திரிஞ்சுகொண்டு அந்தக் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, போதாதென்று எங்கட வசதிகளையும்  கவனிச்சுக்கொண்டுஒரு இயந்திரத்தை விட மோசமா எல்லே  வாழ்ந்துகொண்டு இருந்ததுகள்.அதுகளுக்கு நாங்க இயன்றளவு
உதவி ஒத்தாசையாய் இருக்காம ஒதுங்கி இருந்துபோட்டுக் கொழுப்பிலை எல்லோ இங்கவந்து தனிய இருந்து சாகிறம்.கனடாவில போய்  இறங்கேலை   அவைக்கு வேலைகாரறாய்  இருக்க மாட்ட என்று வேற  சொல்லியிட்டாய்.எங்கட பிள்ளையளை நாங்க பாராமல் யார் பார்க்கிறதெண்டு சொல்லு பார்ப்போம்.இங்கை எங்கட பிள்ளையள் வாழ்ந்த காலத்திலை அதிகாலை நேரத்திலிருந்து படுக்கிற நேரம் வரைக்கும் அவைகளுக்காக எப்படி எல்லாம் உழைத்திருக்கிறோம் .அப்ப மட்டும் நாங்க வேலைகாரறாய் தெரியேலை.இப்ப டொலர்தான் எங்கட கண்ணை மறைச்சுப் போட்டுது.அந்தப் பேரப் பிள்ளையளோட கொஞ்சிப்   பேசி ஒத்தாசையை வாழ்ந்திருந்தால் அதுகளுக்கும் பிரயோசனமாய் இருந்திருக்கும்.எங்களுக்கும் சந்தோசமாய் பொழுது போயிருக்கும்.சிறை வாழ்க்கை என்ற சிந்தனையும் வந்திருக்காது.இதைத்தானே கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்லிறது."

அண்ணாமலைத் தாத்தாவின் குட்டிப் பிரசங்கம் பறுவதம் பாட்டிக்கு பகீர் என்று நெஞ்சினில் ஓங்கி அறைந்தது போன்று இருந்தது.ஊருக்கு வந்து இயலாத காலத்தில் பெற்ற பிள்ளைகளும் இல்லாமல், இனியும் வாழ முடியாது என்பதனை உணர்ந்துகொண்டாள் பாட்டி.நிழலின் அருமையினை வெயிலில் புரிந்துகொண்ட பாட்டியும் மாறிய மனசுடன் மீண்டும் தாத்தாவுடன் டொராண்டோவில்  வந்து இறங்கும்போது எம்மைக் கண்டதும் கண்ணீர் மல்க  எமை  வாரியணைத்தது  என்னால் இன்று வரை மறக்க முடியாத ஒன்றாகும்.

---- பேரன்-செ.மனுவேந்தன்

ஆபத்தான இறைச்சி வகைகள்

நவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது.
Bacon, sausage, and ham போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்
ஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிலும் பற்வையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான
நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள்  red meat கூடாது என்கிறார்கள்.
பொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரை போன்றவற்றின் இறைச்சிகள் red meat எனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவை வெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.
அண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது.
பொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.
Canned meat
Cured meat
Ham
Lunch meat
Sausage
Bacon Gelatins
Fresh meat with additives
நடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருட காலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.
அதேபோல புற்றுநோய்களால் இறப்பதற்கான சாத்தியமும்  43% சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.

அவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன
இறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.

ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லது எனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும் குறைந்த அளவே உண்பது உசிதமானது.