தமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்

தமிழ்நாட்டில் அறிவுஜீவி என்று பெயர் வாங்க ஏற்கனவே இரண்டு வழிகள் உண்டு. முதலாவது எல்லாராலும் மதிக்கப்படும் யாராவது ஒரு தலைவரின் பலவீனமான ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவரை மோசமான மனிதர்-மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத தலைவர் என்று பேசுவது. இதன்மூலம்அட முட்டாப்பசங்களா..உங்களுக்குத் தெரியாததை நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா?’ என்று நிறுவுவது.

இதற்குக் கொஞ்சம் மூளையும் வாதத்திறமையும் தேவைப்படும் என்பதால் இருக்கும் இரண்டாவது வழிசாமியெல்லாம் ஒன்னும் கிடையாது..எங்கே இருக்கு காமிஎன்று நாத்திகம் பேசிவிடுவது. இணையத்தின் புண்ணியத்தில் அறிவுஜீவி என்று பெயர் எடுக்க மூன்றாவது வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எந்தப் படத்தைப் பார்த்தாலும்காப்பி...காப்பிஎன்று கத்துவது!

 சில படைப்பாளிகள்(?) ஏதாவது ஒரு வேற்றுமொழிப்படத்தை அப்படியே சீன் பை சீன் அல்லது 50%க்கும் அதிகமான காட்சிகளை அப்படியே ரீமேக் செய்துவிடுகிறார்கள். அந்த படங்களை காப்பி என்று சொல்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தான். ஆனால் ரோஜா படத்தை Sun Flower(1970) படத்தின் காப்பி என்று தூற்றும்போதும், ஹே ராம் படத்தை Barabbas (1961)-ன் காப்பி என்று சொல்லும்போதும், நமக்கு சொல்பவர்களின் நோக்கத்தின்மீது சந்தேகம் வருகிறது.


ரோஜா படம் சத்தியவான் சாவித்திரி கேரக்டரை காஷ்மீர் பிரச்சினையின் ப்ளாட்டில் வைத்துப் பின்னப்பட்ட கதை. ஹே ராம் படம், நாமறிந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையும் காந்தி கொலையையும் மிக்ஸ் செய்து சொல்லப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம். சாவித்திரி-காஷ்மீர்-இந்தியா-பாகிஸ்தான் என எல்லாமே நம் மண் சார்ந்த விஷயமாக இருக்கும்போது, எங்கே இருந்து வருகின்றன Sun Flower-ம் Barabbaas-ம்?

அதை அறிவதற்கு முன் நாம் உலக சினிமா வரிசையில் போற்றப்படும் இரு படங்களைப் பற்றிப் பார்ப்போம். முதல் படம், ஃப்ரெஞ்ச் திரைப்பட மேதை Robert Bresson இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான A Man Escaped (1956). இரண்டாம் உலகப்போரின்போது நாஜிக்களால் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்படும் ஹீரோ, எப்படி அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான் என்பதே கதை. உள்ளே இருப்பவர்கள் மற்றும் வெளியே இருப்பவர்களின் உதவியுடன், சிறுசிறு பொருட்களை பலநாட்களாகச் சேகரிக்கிறான் ஹீரோ. அதன்மூலம் எப்படி தப்பிக்கிறான் என்று படம் விளக்குகிறது.

அடுத்து நாம் பார்க்க வேண்டிய படம் The Shawshank Redemption (1994). மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு வரும் ஹீரோ, எப்படி அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான் என்பதே கதை. உள்ளே இருப்பவர்கள் மற்றும் வெளியே இருப்பவர்களின் உதவியுடன், சிறுசிறு பொருட்களை பலநாட்களாகச் சேகரிக்கிறான் ஹீரோ. அதன்மூலம் எப்படி தப்பிக்கிறான் என்று படம் விளக்குகிறது!! இரு படங்களின் அடிப்படைக்கதை ஒன்று தான். கதை சொல்வதில் மட்டும் ஒரு வித்தியாசம் உள்ளது. முதல் படம், சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது. ஹீரோ தப்பிக்க திட்டமிடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளும் பார்வையாளனுக்கு தெளிவாக சொல்லப்படுகின்றன.

இரண்டாவது படம், சர்ப்ரைஸ் வகையைச் சார்ந்தது. ஹீரோ தப்பிக்கத்தான் சிறுசிறு பொருட்களாக சேகரிக்கிறான் என்று நமக்கு கடைசிவரை தெரிவதேயில்லை. ஹீரோவின் நண்பரின் பார்வையிலேயே படம் நகர்கிறது. முதல் படம், ஹீரோவின் பார்வையிலேயே நகர்கிறது. ஒரு சஸ்பென்ஸ் படத்தையும், ஒரு சர்ப்ரைஸ் படத்தையும் சுவாரஸ்யமாக்குவது எப்படி என்று அறிய இந்தப் படங்களின் திரைக்கதை உதவும். அதிருக்கட்டும், இப்போ மேட்டருக்கு வருவோம்.

இப்போது ஒரு பேச்சுக்கு இரண்டாவது படத்தை நமது கமலஹாசன்தப்பிச்சோம்லஎன்ற பெயரில் எடுத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். நமது சினிமா அறிவுஜீவிகள் எப்படி கழுவி ஊற்றியிருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்:

- ஒரிஜினல் படத்தில் (A Man Escaped) இன்னொரு சிறைவாசியின் மனைவி அவனை ஏமாற்றி விட்டதாக வருகிறது. அதையே கமல் தப்பிச்சோம்ல படத்தில் ஹீரோவின் மனைவி ஏமாற்றியதாக வைத்திருக்கிறார்

- ஒரிஜினல் படத்தில் தன்னை விட வயதான பக்கத்து செல் ஆளிடம் ஹீரோ நட்பு கொள்வதாக வருகிறது. அதையே கமல்ரெட்கேரக்டருடன் நட்பு கொள்வதாக வைத்திருக்கிறார்

- ஒரிஜினல் படம் டீசண்டாக இருக்கிறது. இதில் ஹோமோசெக்ஸ், நடிகையின் போஸ்டர் என கமல் தனது அறிவுஜீவித்தனத்தை காட்டிவிட்டார்.(நல்லவேளை, ஹோமோசெக்ஸ் சீனில் லிப்-கிஸ் இல்லை!)

- கமல் படத்தில் ஜெயிலில் இருந்து வெளிவரும் வயதானவர் தற்கொலை செய்துகொள்ளும் சீன் வருகிறது. அது ஜப்பானியப் படமானசளக் புளக்கில் இருந்து உருவப்பட்டது!

- ஒரிஜினல் படத்தில் சுரங்கம் தோண்டி தப்பிப்பதாக வரும். அப்படியே காப்பி அடித்தால் கண்டுபிடித்துவிடுவோம் என்பதால், இதில் வான்வழியே தப்பிப்பதாக உல்டா செய்திருக்கிறார்.

உஸ்ஸ்..நான் அறிவுஜீவு இல்லை என்பதால் என்னால் இவ்வளவு தான் முடிகிறது, படம் பார்த்துவிட்டு நீங்கள் தொடரலாம்.

The Shawshank Redemption படத்தின் மூலமாக ஒரு நாவல் தான்
சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நாவல் டால்ஸ்டாயின் ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாக அதை எழுதியதாக Stephen King சொன்னாரே ஒழிய, எங்கேயும் A Man Escaped படம் பற்றி யாரும் பேசவில்லை. அப்படியென்றால் காப்பி அடித்துவிட்டு ஏமாற்றினார்களா? இல்லை, இதைத் தான் நாம் ஒத்த சிந்தனை என்று சொல்கிறோம். சிறையில் இருந்து தப்பித்தல் என்பது ஒரு கான்செப்ட். Grand Illusion, Great Escape போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன. யாரும்அய்யய்யோ..காப்பிஎன்று கூப்பாடு போட்டு, படைப்பாளியின் கழுத்தை நெறிப்பதில்லை.

ஒரே விஷயத்தை இந்த இயக்குநர்/திரைக்கதை ஆசிரியர் எப்படி கையாள்கிறார் என்று கவனிப்பது தான் உண்மையான புத்திசாலித்தனமே ஒழிய, காப்பி என்று கத்தி அறிவுஜீவி தோற்றத்தை ஏற்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. நமது இயக்குநர்களைப் போலவே அவர்களும்இந்த படத்தை எப்படி எடுத்தோம்னா..’ என்று பேசத்தான் செய்கிறார்கள். காரணம், திரைப்படம் என்பதில் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையும் இயக்கமுமே முக்கியம். ஆனால் நாம் செய்வது என்ன? ஏதாவது ஒரு சீன், ஏதோ ஒரு கொரிய,ஜப்பானிய,ஆங்கிலேயே அல்லது சோமாலியா படத்தில் இருந்தால்கூடப் போதும், அந்தப் படம் முழுக்கவே காப்பி என்று ஒதுக்கிவிடுகிறோம்.

உலகத்தில் எந்த மொழியிலும் வராத கதையைத் தான் எடுக்க வேண்டும். இதுவரை உலகில் வெளியான எந்தவொரு படத்திலும் வராத சீனைத் தான் ஒருத்தன் எழுத வேண்டும் என்றால், அது நடக்கிற காரியமா? இது படைப்பாளியின் மேல் ஏவப்படும் உச்சபட்ச வன்முறை அல்லவா? ஒரு கவிதையை இதே பாணியில் விமர்சிப்பீர்களா? அப்படி ஆரம்பித்தால், ஒரு கவிஞராவது ஒரு வார்த்தையையாவது எழுதிவிட முடியுமா?

நாயகனையும் God Father என்போம். தேவர் மகனையும் God Father என்போம். நமது ஒரே நோக்கம், குறை சொல்வது தான். இதற்கு இன்னொரு முக்கியக் காரணம், ‘தமிழர்களால் சிந்திக்க முடியாது. வெள்ளைக்காரனே அறிவாளிஎனும் அடிமை மனோபாவம். மகாநதி படம், Taken படத்திற்குப் பின் வந்திருந்தால் கமலஹாசனை என்ன பாடு படுத்தியிருப்போம்? ஆனால் மகாநதி முந்திக்கொண்டதால், Taken படம் மகாநதியின் காப்பி என்று சொல்ல வாய் வந்ததா? வராது, காரணம் தாழ்வு மனப்பான்மை. அதில் இருந்து என்று மீளப்போகிறோம்?
நன்றி:செங்கோவி

0 comments:

Post a Comment