குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. அவர்கள் கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வர வேண்டும். ஆனால், பலபோது நமக்கு எரிச்சல் தான் வருகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் நாம் முக்கிய வேலையில் ஈடுபட்டிருக்கும் நேரம்.
நாம் முக்கிய வேலையில் ஈடுபட்டிருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும் அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும்வரை தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். இதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பதுதான். எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
முறை
1: பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால் ‘‘எனதன்புச் செல்லமே முக்கிய வேலையாக இருக்கிறேன். வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்’’ என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
காரணம், சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன் ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
முறை
2: சுருக்கமாக ஒரு பதிலை சொல்லி விடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலைக் கொடுத்து விடலாம். ஆனால், வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம்பிடிக்கலாம்.
முறை
3: வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலை அல்லது பொய்யைச் சொல்லி சமாளிப்பதே நடை முறையில் உள்ளது. ஆனால், உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால், நீங்கள் சொல்லும் பதிலிலிருந்து வேறு கேள்விகளை குழந்தைகள் எழுப்பக் கூடும். ஒரு கட்டத்தில் நமக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு தந்தையே பொய் சொல்கிறார் நாமும் பொய் சொல்வதில் தவறில்லை என எண்ணத் தூண்டும்.
பதில் தெரியாதபோது தெரியாது என்று சொல்லி விடுங்கள். குழந்தைகளிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பதில் தெரியாத இடத்தில் தெரியாது என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கண்ட வழிகளில் அணுகலாம்.
முறை
1: அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன் என்று கூறலாம்.
இதன் மூலம் பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.
முறை
2: இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள் என்று சொல்லலாம்.
இதன் மூலம்
- பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
- புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுகிறது.
- தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்கிறோம்.
முறை
3: உதாரணமாக, குழந்தை மோட்டார் வண்டியைப் பற்றி கேள்வி கேட்டால் கேள்வி மோட்டார் வண்டியுடன் தொடர்புபட்டது. இக்கேள்வியை இன்னாரிடம் கேட்டால் பதில் தெரியும் என்று கூறலாம்.
இதன் மூலம் கேள்வி எதனுடன் சம்பந்த முடையது யாரிடம் கேட்டால் பதில் தெரியும் என சிந்திக்க வைக்கிறோம்.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்க வேண்டும். சிறிது காலம் கழித்து இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே, எப்படித் தெரிந்து கொள்வது எனக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து இப்படிச் செய்யலாமா, இல்லை வேறு விதமாகச் செய்யலாமா எனத் தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.
அனுப்பியவர்:பரந்தாமன்
அனுப்பியவர்:பரந்தாமன்
No comments:
Post a Comment