உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே. ஆம்! வாழ்வதற்கே என்றால் எப்படிப்பட்ட
வாழ்க்கை? ஏதோ உண்டோம். உறங்கினோம். விழித்தோம் என்கிற வாழ்க்கையா?வெந்ததைத் தின்றோம் விதிவந்தால் செத்தோம்!’ என்கிற வழக்கு மொழிக்கு ஏற்ப வாழ்வதெல்லாம் வாழ்வாகாது. வாழ்க்கை என்பது மகிழ்ச்சி நிறைந்ததாக, மன நிறைவானதாக, எல்லா வளமும் நலமும் பொருந்தியதாக அமைய வேண்டும். () அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்குத் தவறான பொருள் கொண்டு, தானாக வாழ்க்கையில் வளம் சேர வேண்டும் என்று தளர்ந்து வாழ்வதால் என்ன பயன்? உலகமும் இந்தப் பிரபஞ்சமும், செயல்விளைவு தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற பேருண்மையை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. எதுவும் இந்த உலகத்தில் தானாக நிகழ்ந்துவிடாது என்பதுதான் உண்மை.

இன்றைய உழைப்பு
எந்த வசதியையும், பணத்தையும், பதவியையும், பெயரையும், புகழையும் பெறுவதற்கு ஒருவிலைகொடுத்தாக வேண்டும். உழைப்பை, சிரமத்தை, காலத்தைத் தராமல் சும்மா எதுவும் கிடைக்காது. There is no free Lunch என்கிற ஆங்கில வார்த்தைகள் இதைத்தான் உணர்த்துகின்றன. உழைப்பையும், சிரமத்தையும், இடைஞ்சல்களையும் உதறித் தள்ளிவிட்டு உல்லாசமாக வாழ்க்கையைக் கழித்தால் பின்னாளில் சிரமங்களும், இடைஞ்சல்களுமே வாழ்க்கை என்றாகிவிடும்.

கல்லா, கடவுளா?
புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் ஊரில் இறை வழிபாட்டிற்காக ஒரு கோயிலைக் கட்டுவது என்று அவ்வூர் மக்கள் முடிவெடுத்தார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதல்லவா நடைமுறை.

ஊர்ப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிற்பியை அணுகி கோயிலுக்குத் தெய்வச்சிலை செய்து தருமாறு கேட்டார்கள்.. அதற்கு ஒத்துக்கொண்ட சிற்பியும் சிலைக்காக கல்லைத் தேடிச் சென்றபோது ஓர் பொருத்தமான கல்லைக் கண்டார். சிற்பி அந்தக் கல்லில் தெய்வச் சிலை செதுக்குமுன் அந்தக் கல்லோடு சற்று பேசினார்.

சிற்பி: உன்னை நான் தெய்வச் சிலையாக வடிக்க எண்ணுகிறேன். அனுமதி தருவாயா?

கல்    : என்னைத் தெய்வச் சிலையாக வடிக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?

சிற்பி: கூர்மையான உளியாலும் கனமான சுத்தியாலும் உன் உடலில் உள்ள தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுத்துவிடுவேன்.

கல்: ஆம். இந்தச் சிரமத்தை மட்டும் பொருத்துக் கொண்டால் உன் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.

கல்: என் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு எந்தத் துன்பமும் வேண்டாம். சிரமும் வேண்டாம். ஆளை விடுங்கள்.

சிற்பி: இந்தச் சிறிய ஒரு சிரமத்தை மட்டும் ஏற்றுக்கொண்டால் நீ உயர்ந்த பதவியை அடைவாய். உலகம் உன்னைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள். உன் காலடியில் சரணடைவார்கள். உனக்கு பாலபிஷேகமும் நெய் அபிஷேகமும் நடக்கும். உயர்ந்த இடத்தில் உன்னை வைத்து உலகமே கூத்தாடும்.

கல்: எனக்கு சும்மா இருக்கிற சுகம்போதும். நான் அடிவாங்கத் தயாரில்லை.

சிற்பி பண்பாடு மிக்கவர். கட்டாயப்படுத்தி அக்கல்லை சிலையாக வடிக்க விரும்பவில்லை. அருகில் இருந்த மற்றொரு பொருத்தமான கல்லைக் கண்டார். அதனிடமும் அனுமதி வேண்டினார். அந்த இரண்டாவது கல் சிற்பியிடம் சொன்னது, “நீங்கள் அந்தக் கல்லிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். நீங்கள் கூறியவைகிடைக்குமானால் நான் தயார், எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளுவேன்என்றது. சிற்பி இந்த இரண்டாவது கல்லைத் தெய்வச் சிலையாகச் செதுக்கினார்.

ஊர் மக்கள் நாள் குறித்து நேரம் மங்கள இசை முழங்கி மந்திரங்கள் சொல்லி, கோயில் கருவறையில் சிலையை நிறுவி குடமுழுக்க நடத்தினார்கள். மக்கள் அனைவரும் இறைவழிபாட்டிற்காக தேங்காய், பூ, கற்பூரம், ஊதுபத்தி,பழம், வெற்றிலை பாக்குகளோடு அர்ச்சனை செய்கிற அர்ச்சகர் தேங்காயை உடைப்பதற்கு வசதியில்லாத்தால், ஒரு கல்லைக் கொண்டு வந்து வைக்குமாறு சொன்னார். கோயில் நிர்வாகிகளோ கல் தேடிச் சென்று சிற்பிக்கு அனுமதி மறுத்த கல்லை தூக்கிவந்து கருவறைக்குப் பக்கத்தல் வைத்தார்கள். அர்ச்சகர்கள் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கன பக்தர்களின் தேங்காயை இன்றைக்கும் அந்தக் கல்லில்தான் உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இளமையில் உழைப்பு
எந்தக் கல் சிறிதுகாலம் சிலையடிக்கிற சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள மறுத்ததோ அந்தக்கல்தான் தன்வாழ்நாள் முழுவதும் அடிவாங்கிக்கொண்டு அல்லல்பட்டுக் கிடக்கிறது.

இளைஞர்கள் தங்களைத் தகுதிப்படுத்தக் கொள்கிற காலத்தில் முயற்சி செய்யாமல் சோம்பல் வாழ்க்கை வாழ்ந்தால் வாலிபம் கடந்த வாழ்க்கைப் பருவத்தில் துன்பம், வறுமை, கவலை, துயரம் மட்டும் வாழ்க்கையாகிவிடும். கவிப்பேர்ரசு வைரமுத்துவின் வைர வரிகளை எண்ணிப்பாருங்கள்.

இளமைக்கு நீ வேலைக்காரனாக இருந்தால்
முதுமைக்கு நீ எஜமான்னாக இருப்பாய்

இனிய வாழ்க்கை
இளமைக்காலத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்மைச் செதுக்குகிற வேலையைத்தானே செய்கிறார்கள். மற்றவர்கள் நம்மைச் செதுக்க அனுமதிக்காதபோது அல்லது நம்மை நாமே செதுக்கிக்கொள்ள மறுக்கிறபோது கரடு முரடான, பண்படாத, அறிவில் ஒளியூட்டப்படாத்த மனிதர்களாகத்தான் நாம் வாழ முடியும். அஃறிணை விலங்குகளைப்போல் அறிவு வளர்ச்சி இல்லாமல் உடல் வளர்ச்சி மட்டும் இருந்தால் வாழ்க்கை வளப்படுவது எங்ஙனம் நிகழும்.

உளிபட்டால் சிலையாகலாம்,உழைத்திட்டால் வளமாகலாம்.
நன்றி - நா. மாசிலாமணி



No comments:

Post a Comment