எங்கே போகிறோம்?-அழ பகீரதன்

ஊருக்குப் பொதுவாய்..
கூடி வாழ்ந்த காலம்
தேடி நண்பர் உற்றாருடன் பேசி மகிழ்ந்திருந்த காலம்
நேற்றுப் போலிருக்கிறது
ஆற்றல் எமக்குள் கூட்டி உதவி ஒத்தாசை புரிந்து
உறவுடன் மகிழ்ந்த காலம்
பணம் இல்லை பல வசதி இல்லை
குணம் ஒன்றே எம் சொத்தாய்
கூடி வாழ்ந்திருந்தோம்
குடிசையில் மரநிழலில் குளிர்மையில் குதூகலித்தோம்
ஒரு நேரச் சோறேனினும் வயிறார சூழ்ந்திருந்துண்டோம்
எம் உறவுகள் பற்றி எம் பிரச்சனை பற்றி
எம் ஏழ்மை பற்றி எம் அடிமை நிலை பற்றி
எம் உரிமை பற்றி நிலவொளியில் பேசியிருந்தோம்
இன்றோ
தேச விடுதலை யுத்தம் ஓய்ந்த காலம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிலர் உய்ந்தார்
குடிசைகள் வீடுகள் ஆயின
எல்லைகள் காட்ட மதில்கள் எழுந்தன
உள்வீட்டில் நலம் விசாரிக்காது வானொலியில் நலம் கேட்கும் கோலம்
சக்தி வாந்தி எடுக்கும்
மேட்டுக்குடிகளின் சின்ன வீட்டு பிரச்சினைகள்
எங்கள் வீட்டு சின்னத் திரைக்குள் எங்கள் பேச்சாயின

உறவுகள் கூடுதல் இல்லை
உரிமைகள் பற்றிப் பேசுதலில்லை
உறவுகள் ஏழ்மை நிலையில்
அக்கறை ஏதுமின்றி சொத்துச் சேர்க்கும் மும்மரம்
ஏழைகள் பாடு அவர் படு
ஊருக்குப் பொதுவாய் கோயில் வான் முட்ட எழுந்தால் போதும்
ஏற்றம் எமக்கெனும் எண்ணம் !!

அழ பகீரதனின் ''இப்படியும் '' கவிதைத் தொகுப்பிலிருந்து..

No comments:

Post a Comment