இனி வெளிவரும் திரைப்படங்களில்...

சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படம் பூஜை: டைரக்டர் ஹரி பேட்டி
கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் டைரக்டர் ஹரி இயக்கும் பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது. சூட்டிங்கில் நடிகர் சத்தியராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தியேட்டரில் இருந்து வெளியே வருவது போலவும், சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யாவை வில்லன்கள் தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் நடிகர் சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் தோன்றினார். சூட்டிங் குறித்து டைரக்டர் ஹரி கூறியதாவது:–


பூஜைபடம் என்னுடைய 13–வது படம். இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா, சித்தாரா, கவுசல்யா போன்ற இன்னும் பல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இந்தப் படம் குடும்பம், ஆக்ஷன் கொண்ட படம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது கோவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமராகாவியம் படம் பார்த்து அழுத ஆர்யா!
நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம்அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ஆர்யா மற்றும் அவரது நண்பர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டுள்ளனர். படம் பார்த்து முடிந்தவுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடன் யாருடனும் பேசமால் திரையரங்கை விட்டு வெளியேறிய ஆர்யா, நேராக அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வரச்சொல்லி தனது படக்குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்து ஆர்யா கூறும்போது,
லவ் யூ என்ற மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம்தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது. இப்படம் ஒரு இனிமையான காதல் கதையை நம் கண்முன் நிறுத்தப் போவது நிஜம்.

முழுக்க முழுக்க கிராமிய கலைஞர்கள் நடிக்கும் திருடு போகாத மனசு
அஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம்திருடு போகாத மனசு’. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா? என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் முழுக்க முழுக்க கிராமியக் கலைஞர்களான செந்தில் கணேஷ், சாய் ஐஸ்வர்யா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் சத்யா, ராஜேஷ், ராஜலட்சுமி, கனகாமணி, ஆறுமுகம், தேன்மொழி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தை செல்ல.தங்கையா என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஸ்வநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற கதாநாயகர்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர். அதே வரிசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் கதாநாயகனே பாடியுள்ளார். பாடல்கள் மண் வாசனை மாறாமல் கிராமியப் பாடல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடங்களிலேயே நடைபெற்று முடிவடைந்தது. இம்மாதம் வெளிவருகிறது.
திகில் கலந்த காமெடி படமாக அரண்மனை

விஷன் மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார். இப்படத்தில் சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை செய்துள்ளார்.

படத்தைப் பற்றி சுந்தர்.சி கூறும்போது, “இதுவரை நகைச்சுவைப் படமாக எடுத்துவந்த நான் முதன்முதலாக திகில் கலந்த காமெடி படமாக இப்படத்தை எடுத்திருக்கிறேன். மன்னர் காலத்து சொத்தான பெரிய அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறேன். இதில் வினய் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தானம் வேலைக்காரன் கதாபாத்திரத்தில் வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடித்திருக்கிறார். மேலும் ஹன்சிகா இப்படத்தில் புது தோற்றத்தில் வருகிறார். நான் இப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்என்று கூறினார்.

திகில் படத்தை இயக்க ஏன் முடிவு செய்தீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “தற்போது பெண்கள் திகில் படங்களை ரசிக்கிறார்கள்என்றார் சுந்தர் சி.

திகில் படங்கள் எல்லாம் பங்களாவில் எடுக்கிறீர்களே என்? என்று கேட்டதற்கு, “பெரும்பாலான திகில் படங்கள் எல்லாம் பங்களாவை சுற்றித்தான் அமைந்திருக்கும். காஞ்சனா, சந்திரமுகி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் இப்படமும் இருக்கும்என்றார்.

ரீமேக் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, நான் எடுத்த கதையை எனக்கு மறுபடியும் எடுக்க பிடிக்காது என்றார் சுந்தர் சி.

சந்தானத்தை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘சந்தானத்தை வைத்து படம் பண்ணும்போது சௌகரியமாக இருக்கிறது. குறிப்பாக இதுவரை என் படத்தில் நடித்த வரைக்கும் இவ்வளவு சம்பளம் வேணும் என்றும் கால்ஷீட் பற்றியும் சந்தானம் பேசியது கிடையாது. அது எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்ததாக எடுக்க போகும் படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க பேசி வருகிறேன்என்றார்.

தற்போது அரண்மனை இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாகிறது என்றும் சுந்தர் சி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment