தமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே!

தற்காலத்தில், உலகெலாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் நடாத்தும் இந்து முறைக் கல்யாண வைபவம், பலவிதமான, அர்த்தமற்ற, நீளமான சடங்குகளைக் கொண்டுள்ளனவாகக் காணப்படுகின்றன. பண்டைய தமிழரிடம் இப்படியான செயல்பாடுகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் ஒன்றும் பழைய இலக்கியங்களில் காணமுடியாது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

போட்டிக்குப் பெரும் மேடை அமைத்து, 2,3, 4 புரோகிதர்கள் மந்திரம் ஓதி, அக்கினி வளர்த்து, தாலி கட்டி, அம்மி மிதித்து, அருந்ததி காட்டும் சடங்குகள் எல்லாம்  சிலப்பதிகார காலத்தில் தோன்றி இருக்கலாம். இது ஆரிய/சம்ஸ்கிருத தாக்கங்களினால் ஏற்பட்டது. அதற்கு முன்னர் மிக இலகுவான முறையிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டன.



ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் என்னும்
வாழ்க்கைப் பந்தத்தில் இணையும்போது, அவர்கள் என்றென்றும் நல்ல செழுமையுடன் வாழவேண்டும் என்று, உண்மையிலேயே மனதார விரும்பும், அவர்கள் வாழ்க்கையில் நெருக்கமான, கரிசனை உள்ள, நல்ல மனம் கொண்ட ஓர் 50க்குக் குறைவானவர்களை மட்டும்தான் இந்த திருமண வைபவத்திற்கு அழைக்கப்படல் வேண்டும். உங்கள்மேல் பொறாமையும், அழுக்காறும் கொண்ட சொந்தங்களையே அழைக்காது விலத்தி விடலாம். வருவோர் எண்ணிக்கையை 800-1000 என்று கூட்டுவதற்காக, மணம் முடிக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் தெரிந்தே இருக்காத, அவர்கள் தம் வாழ்நாளில் கண்டே இருக்காத பலரை எல்லாம் அர்த்தமில்லாமல் வரவைக்கின்றார்கள். அவர்களின் பெற்றோர்கள் வீதியில் கண்ட, கோவிலில் பார்த்த, வேலை இடத்தில் தெரிந்த, வேறு குழுவில் சந்தித்த, சிரித்த, கேட்ட, நின்ற, இருந்த, விழுந்து தூக்கிய, கைகாட்டிய,  கல்யாணம் பற்றி விசாரித்த, சொந்தம் என்று சொன்ன, சேர்ந்து படித்த, மற்றும் பிரபலமானவர்கள் என்று நினைத்த பல முகங்களைக்  கூட்டி வைத்து  இம்முக்கிய தருணத்தை அறு, அறு என்று அறுக்கின்றார்கள். இப்படி வருபவர்கள், வெறும் கடமைக்காகத் வந்து, எதோ ஒரு மூலையில் இருந்து, மற்றயவர்களுடன் கூடியவரைக்கும் வம்பளந்து கொண்டிருக்கும்போது, சாப்பாடு நேரம் என்று செவியில் விழத்தான் மேடையைத் திரும்பிப் பார்ப்பார்கள் மணமக்கள் பக்கம்! அவர்களுக்கு மணமக்களைப் பற்றித் தெரிந்தால்தானே இவர்களைப் பற்றி அக்கறை கொள்ள! அவர்கள் சிந்தனை எல்லாம் தங்கள் பிள்ளைகளைப் பிரத்தியேக வகுப்புக்கு மாலையில் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பது பற்றியதே!
பழைய இலக்கியங்களில், திருமண கிரியைகள் பற்றி அவ்வளவாகக் கூறப்படாவிட்டாலும், -தெரிந்தால் சொல்லுங்களேன்!-அகநாறு நூலில் ஓரிடத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டிருக்கின்றது:

'அனைவரும் வயிறார அன்னம் உண்டும் எஞ்சியிருக்க, அழகிய அதிகாலை, முழு நிலவில், நட்சத்திரங்கள் ஒளி மின்னும் நற்சகுன வேளையில், வரிசையாக மரம் நட்டுப் பந்தல் இட்டு, தரையில் மணல் பரப்பி, வீட்டினுள் தீபம் ஏற்றி, மணமக்களுக்குப் பூமாலை இட்டு, அழகாக அலங்காரத்துடன் வரும் (ஆண்பிள்ளைகளின்!) தாய்மார் தமது பானைகளில் இருந்து மலர் இதழ்களும், அரிசியும் கலந்த தண்ணீரை மணமகளின் தலையில், மங்கள ஓசையுடன் ஊன்றி, 'உன்னை விரும்பும் உனது கணவனுடன் கற்புடை மனைவியாக என்றென்றும் வாழ்வாயாக' என்று வாழ்த்தி வைபவத்தை முடித்து வைக்கின்றார்கள். (இப்படி மணமகனுக்கும் கூறுவதாக இல்லை; என்றாலும் இதுதான் அன்றைய முறை என்று அடித்துக் கூறவும் இயலாது). இதன்பின்னர், அன்றிரவு, மணமகளுக்குப் புத்தாடை அணிந்து மணமகனின் அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
 தற்காலத்திலும் நமது கல்யாண வைபவங்களையும் கூடியமட்டும் மிகவும் இலகுவாக்கித் தமிழருக்கு என்று சம்பிரதாயத்தை உருவாக்கலாமே!

தமிழ் நெறியில் திருமணம் நடத்துவது எப்படி என்று புலவர் இரா. இளங்குமரனார் உட்படப் பலர் சில இலகுவான வழிமுறைகளை விளக்கி இருக்கின்றார்கள்.  அ+து:

நமக்கு வேண்டிய மரபு - நம் பண்பாடு - பகுத்தறிவு,  இன நலம் என்பவற்றைப் பாதுகாத்துப் போற்றும் வகையில் அமைக்கப்படுவது இத் தமிழ்நெறி திருமணம். எளிமை, இனிமை, நிறைவு என்பவை சார்ந்தவையாக இத் திருமணமுறையும், பிற சடங்குகளும. முற்றிலும் தமிழையும், தமிழ் நெறியாம் திருக்குறளையும் கொண்டு நிகழ்த்தப் பெறுவன. இவை பாராட்டுதல், வாழ்த்துதல் என்பனவே உடையவை, தேவையில்லாதவை இடம் பெறாதவை. மகளிர், பெற்றோர், சான்றோர் ஆகியோரை முதன்மைப்படுத்தி நிகழ்த்தப் பெறுவன. நலம் விரும்பிகளோடு மட்டுமே நடத்தப் பட வேண்டியவை.

திருமணம் நிகழ்முறை:
* மணமக்கள் இருவரையும் மணவுடை, மணமாலை ஆயவற்றுடன் ஒரே நேரத்தில் அழைத்து மண இருக்கையில் மணமகனுக்கு வலப்பக்கம் மணமகளும், இடப்பக்கம் மணமகனும் அமரச் செய்தல்.

* மங்கல விழாத் தலைவர், முன்னிலையர், மங்கலவிழா நிகழ்த்துநர் ஆகியோரை முன்மொழிந்து அமரச் செய்தலும், வழி மொழிதலும்.

* தலைவர் விழாத் தலைமை ஏற்று மணமக்கள் வீட்டார் சார்பாக வரவேற்றுக் கூறலும், வரவேற்கக் கூறலும் அறிமுக உரையும் சிறப்புச் செய்தலும்.

* மணவிழாவை இவர் நிகழ்த்துவார் எனத் தலைவர் கூறுதல்.

* மணவிழா நிகழ்த்துதல்
* மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்குமாறு செய்து மீண்டும் இருக்கையில் அமரச் செய்தல்.

* இயற்கை இறைவழிபாடு
-விரும்பிய வழிபாடு

* மொழி வாழ்த்து
-விரும்பியவாறு

* திருக்குறள் போற்றி!
- முக்கிய அத்தியாயம் ஒன்றிலிருந்து.
* மணவிழாத் தொடங்கவுரை
வந்துள்ள பெருமக்கள், பெற்றோர், உற்றார், உறவினர், உறவு, அன்று, நண்பு ஆகிய அனைவரையும் வணங்கி அவர்கள் இனிய இசைவுடன் மங்கல விழா நிகழ்த்துவதாகக் கூறுதல்.

* ஒப்படைத்தல்
- மணமக்களின் பெற்றோர்கள் மணமக்களின் கைகளைப் பிடித்து ஒப்படைத்தல்.

* தாய் மண் வழிபாடு/ உலக நலவழிபாடு
-எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய்நாட்டு மண் வழிபாட்டை மணமக்கள் செய்கின்றார்கள் என்று கூறித் தட்டில் வைக்கப்பட்டுள்ள மண்ணின் மேல் பூக்களை மும்முறை தூவச்செய்தல் வேண்டும்.

*மணமக்கள் உறுதி மொழி
-ஒருவருக்கொருவர் என்றென்றும் உறு துணையாய் இருப்போம் என்று பெரியோர் முன்னிலையில் சத்தியம் செய்தல்.

*ஆசிர்வாதம்
 வந்திருந்தோர் சென்று ஆசீர்வாதம் செய்தல்.

* நன்றி நவிலல்

*முடிவுரை
திருமணம் நடந்து முடிந்ததாகப் பிரகடனப் படுத்துதல்.

* போசனம்
இறுதியில் அனைவரும் உண்டு களிக்கலாம்.
ஓடி, ஓடி உழைத்த பணம் எல்லாவற்றையும், வெறும் பகட்டுக்காக வீணே செலவு செய்து கரைக்காது, இப்படியான இலகுவான ஒரு திருமண வைபவத்தை நடத்தி மகிழ எத்தனை பேர் முன்வருவார்கள்? சேமித்த தொகையைப் புதுமணத் தம்பதியர்களுக்கு அவர்களின் வாழ்க்கையைத் தொடங்க வழங்கலாமே!

பின்னுட்டம்:ஆடம்பர கல்யாணம் லிமோ, குதிரை, பல்லக்கு, யானை, ஹெலிகொப்டர், பூங்கா அனைத்தினையும் கடந்து சென்று ஆடிய இவ் ஆட்டத்தின் போது மணமக்களின் உயிர்களையே பறித்துவிட்டது பாருங்கள்.

ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்

1 comment:

  1. ஆரியர்களின் புராணக் கதைகளில் எப்படிக் குடித்து கும்மாளமிட்டார்களோ அப்படியே இன்று தமிழர் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆலயங்களும் ஆரியரின் 100 வீதம் ஆக்கிரமப் பட்டுவிட்டது.அதுதான் தெய்வம் அதுதான் வழிபாடு என்று மக்கள் மூழ்கித் தவிக்கிறார்கள்.

    ReplyDelete