தெனாலிராமன் - விமர்சனம்!

   மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாளன். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும்தெனாலிராமன்’.

தன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், அவனைச் சிந்திக்க வைக்க சில செயல்களை செய்து, நாட்டு மக்கள் நலமாய் வாழ வழி செய்யும் ஒரு நாயகன். கிட்டத்தட்டஇம்சை அரசன்படத்தை நினைவுபடுத்துகிற கதையமைப்பு தான் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘டும் டும் டும்என்றும்அடடா டா அடடடடாஎன்று வடிவேலு அவருக்கே ஏற்ற பாணியில் ராஜா வேடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்துகிறார். சின்னக் குழந்தையாக நடித்துக் காட்டி அசத்தினாலும், சீரியஸ் வசனங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகிறார் தெனாலிராமனாக வரும் இன்னொரு வடிவேலு.

சீன நாட்டு வியாபாரிகள் விஜயநகரில் தங்களின் முதலீட்டை செய்ய துடிக்கும் நிலையில், அமைச்சர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் மன்னரும் அதை அனுமதிக்கிறார். மக்களின் அவஸ்தைகளை மன்னருக்கு புரியவைக்க தெனாலிராமன் போடும் திட்டத்தால் மக்களோடு மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் மன்னர். மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதோடு கூழ் குடிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடும் மன்னர்ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னாட்டு மக்களோடு வாழும் போது பல உண்மைகள் விளங்குகிறது. சீன நாட்டு வியாபாரிகளால் தன் நாட்டு சிறு வியாபாரிகள் வறுமையில் வாடுவதும், சீனாக்காரர்கள் குறைந்த சம்பளத்தில் மக்களை அதிக வேலைகள் வாங்குவதும் என அனைத்து விஷயங்களையும் மன்னர் உணர்ந்துகொள்கிறார்.
பிறகென்ன, நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது, அமைச்சர்கள் செய்த துரோகம் அம்பலமாகிறது, சீன நாட்டு சகுனிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். தன் தந்திரத்தை பயன்படுத்தி சீன நாட்டு கயவர்களிடமிருந்து மன்னரை மீட்டு மீண்டும் நல்லாட்சியை தொடரச் செய்கிறார் தெனாலிராமன்.

பாடல்களில் ஆட்டமாய் ஆடி கலக்கியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவின்ரம்பப... ரம்பப...’ பாடல் குழந்தைகளுக்கு குதூகலம் தான். அந்தப்பாடலில் பாடகர் முகேஷின் குரலுக்கும் இசையமைத்த டி.இமானின் விரலுக்கும் ஈடுகொடுத்திருக்கிறது வடிவேலுவின் இடுப்பு! ஆணழகு என்ற மெல்லிசை பாடல் மதுரமாய் இனிக்கிறது. நெஞ்சே... நெஞ்சே... என வடிவேலு உணர்ச்சிபெருக்கோடு பாடும் பாடலின் பாடல் வரிகள் நெகிழவைக்கிறது. ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இருப்பது தான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னாஎன்ற கலை வித்தகர் ஆரூர்தாஸின் வசனத்திற்கு இதயம் கைத்தட்டுகிறது.

காமெடி மட்டுமல்ல தன்னால் கருத்துக்களை பேசியும் நடிக்க முடியும் என்பதையும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் அழுத்தமாய் ஆழமாய் பதிவு செய்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அவரின் நீண்ட கால இடைவெளியை மறக்கடிக்கிற வகையில் அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். மீனாட்சி தீக்ஷித் கண்களாலும், இடையாலும் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

அந்நிய முதலீட்டால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியது வரும் என்பதை வெள்ளித்திரை வழியாக பாமரனுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட புரிகிற வகையில் எளிமையாய் பதிவு செய்கிறது தெனாலிராமன். குடும்பத்துடன் குதூகலிக்க சம்மர் சீசனை கொண்டாட சரியான படம் தெனாலிராமன்.


தெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்!

0 comments:

Post a Comment