உயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்

 1902ம் ஆண்டில் W.W.Jacobs என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை Monkey;s Paw( குரங்கு நகம்) என்பதாகும். இது பின்னர் ஓரங்க நாடகமாகவும், பல தடவை திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டது.

ஒரு சிறிய அன்பான குடும்பம். தந்தை, தாய், ஒரு அன்பான மகன். மூவர் மாத்திரமே. தொலைதூரமெல்லம் போய்வரும் ஒரு நண்பர், இந்தியாவில் கிடைத்ததென்று ஒரு குரங்கு நகத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். மூன்று விருப்பங்களைக் கேட்டால் அது தரும் என்று சொல்கிறார். மனைவி பணத்தேவை வர பணம் கிடைக்கவேண்டுமென்று கேட்கிறார். பணம் அப்படியே கிடைக்கிறது. ஆனால் பெரிய இழப்போடுதான் அது வருகிறது. அவர்களின் மகன் வேலை செய்யும் தொழிற்சாலையில் விபத்தில் இறந்துவிட நட்ட ஈடாக கிடைக்கிறது. அடுத்த விருப்பமாக, மகன் மீண்டும் திரும்பி வரவேண்டுமென்று தாய் கேட்கிறார்.. உடனே கதவு தட்டிக் கேட்கிறது. இறந்து 10 நாட்களாகியபின்னர், அடக்கம் செய்தபின்னர், விபத்தினால் சிதைந்து போன மகனின் கோலம் எப்படியிருக்கும் என்று தெரிந்த தகப்பன், நகத்தை அவசரமாக எடுத்து "நீ போ" என்கிறான். சத்தம் நின்றுவிடுகிரது.

இந்த ஓரங்க ஆங்கில நாடகநூல், நான் கொழும்பில் இருக்கும்போது, எனக்கு
கிடைத்தது. வாசித்தபோது இதை தமிழில் மேடையேற்றலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நண்பருக்கு இரவல் கொடுத்து அது திரும்பி வராமல் போக அதை மறந்தும் விட்டேன்.

கனடா வந்ததின் பின்னர் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது. அதாவது இதை திரைப்படமாக்கப் போவதாகவும், இதன் திரைக்கதையை எழுதுவதோடு, கதையின் ஒரு முக்கியமான பாத்திரமான தந்தையாக நடிக்கவேண்டுமென்றும் கேட்டார்கள்.

எனக்கு நன்றாகத் தெரிந்த கதை. நான்கு பாத்திரங்களுடன் மேலும் பாத்திரங்களைச் சேர்த்து, தமிழ்மயப்படுத்தி திரைக்கதை, வசனத்தை எழுதினேன்.

ஜனகன் பிக்ஷர்ஸ் சிறீமுருகன் என்பவர் தயாரிப்பாளர். ரவி அச்சுதன் இயக்கம்,
படப்பிடிப்பு என்பவற்றை பார்த்துக்கொள்ள, படத்தில் எனது மனைவியாக ஆனந்தி சிறீதாஸ் (சசிதரன்) மகனாக ரமேஷ் புரட்சிதாசன், எங்கள் குடும்ப நண்பனாக சிறீமுருகன், குடும்ப மருத்துவராக கீதவாணி ராஜ்குமார் என்று முக்கியமான பாத்திரங்களில் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

மிசிசாகாவில் ஒரு நண்பர் வீட்டில்தான் பெரும்பான்மையான காட்சிகள் படமாகின. அதே வீட்டுக்காரரின் தொழில் நிறுவனத்திலும், வெலெஸ்லி மருத்துவமனையிலும் முக்கிய காட்சிகள் சில எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிவடைந்தபின்னர், படத்தொகுப்பு, இசை சேர்த்தல், குரல் கொடுத்தல் போன்ற வேலகள் ஆர்.கே.வி.எம்.குமாரின் கவனிப்பில் நடந்து முடிய, படம் வெளியிட தயாராகி விட்டது.

படம் வெளியாகிய முதள் நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கு நிறைந்த காட்சி என்பது கனடா தமிழ்ப் படத்திற்கு அதுவே முதல்தடவை. எதுவாக இருந்தாலும், பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியும்வரை, நானும், ஆனந்தியும் Projection Room உள்லே இருந்து கொண்டோம். படம் முடிவடைந்து பலத்த கரகோஷம் எழுப்பபட தான் வெளியே வந்தோம்.

கதையின் தன்மையையிட்டு சர்ச்சைகள் இருந்தாலும் எங்கள் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக ஆனந்தி சிறப்பாக நடித்திருந்தார். நல்ல விமர்சனங்கள் வந்தன. மீண்டும் பல தடவைகள் திரையிடப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு வீட்டிற்கு போனபொழுது, அங்கிருந்த ஒரு முதியபெண் மகனை இழ்ந்து தகப்பனும், தாயும் அழுத காட்சியின் பாதிப்பு தனக்கு இப்போழுதும் இருக்கிறது, என்று நினவு மீட்டினார். மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனடாவில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அடிகோலியது உயிரே உயிரேதான். அதற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்.
அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..தொடரும்

அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..

No comments:

Post a Comment