ஏப்-11ம் தேதி கலகலப்பூட்ட வருகிறார் வடிவேல்..!
கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க திரும்பியிருக்கிறார்.
இப்படத்தில் மன்னர், தெனாலிராமன் என்ற கேரக்டர்களில் நடிக்கிறார். இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, தனது பாடிலேங்குவேஜை முழுவதுமாக மாற்றி நடித்திருக்கிறாராம். ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அரங்குகளில் மட்டுமன்றி குற்றாலம், அச்சன்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏற்கெனவே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இபோது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.
எனவே, அடுத்தவாரம் படத்தை தணிக்கை சான்றிதழுக்காக அனுப்ப இருக்கிறார்கள். தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் அடுத்த பத்து நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 11ஆம் தேதியே படத்தையும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் யுவராஜ். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து வடிவேலுவின் படம் வெளியாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு என்ன காரணம்:திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் விளக்கம்
கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இங்குவாழும் தமிழர்கள் தான் காரணம் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்தார்.
கர்நாடகத் தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்.விளையாட்டுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்கள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.10 நிமிடங்கள் சரளமாக தமிழ் பேசும் நிலையில் தமிழர்கள் இல்லை. 1.10 கோடி தமிழ்க்குழந்தைகள் படிக்கும் தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளிகள் இல்லை.
ஆனால் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 472 தமிழ்ப்பள்ளிகளை நடத்திவருகிறார்கள். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்மொழியை மறக்கக்கூடாது. நமது மொழி தான் தமிழர்களின் அடையாளமாகும். கர்நாடகத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தமிழ்மொழி மீது தீராத அன்பும், பற்றும் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு கன்னடர்களோ, கர்நாடக அரசோ அல்ல, கர்நாடக தமிழர்கள் தான் காரணம். நமது குழந்தைகளை தமிழ் கற்க அனுப்பினால் தானே தமிழ்ப்பள்ளிகளை நடத்த முடியும் என்ற நிதர்சனத்தை தமிழர்கள் உணர வேண்டும். தாய்மொழியில் கற்று தேர்ந்தவர்கள் தான் உலகம்போற்றும் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்.
தமிழக அரசியலில் 25 சதம்பேர் தமிழர்கள் அல்லாதவர்கள் கோலோச்சுகிறார்கள்.சாதி, மதங்களால் பிளவுப்பட்டிருப்பதே இதற்கு காரணம். கர்நாடக அரசியலில் தமிழர்களால் மிளிரமுடியாமைக்கும் கர்நாடகதமிழர்கள் காரணம். நமது தலைவன் யார் என்று தெரியாமல் அரசியல் உரிமைகளை எப்படிவென்றெடுக்க முடியும் இதில் கன்னடர்களை குறைக்கூறுவதைவிடுத்து, கர்நாடகத்தில் உள்ள கட்சிகளில் இணைந்து தமிழர்கள் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் நாளடைவில் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களாக வாழுங்கள், இங்குள்ள மக்களோடு தோழமையோடு வாழ பழகுங்கள் என்றார் அவர். விழாவில் திரைப்பட இயக்குநர் வி.சேகர், கூட்டமைப்பு நிறுவனர் பி.வி.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
16 புதிய டெக்னீஷியன்களுடன் யாம் இருக்க பயமே!
‘யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்லப்பட்ட முருக பக்தி கொண்ட வாக்கியமாகும்.
இந்த வாக்கியத்துக்கு எதிர்மறையான கருத்தைக் கொண்ட ‘யாம் இருக்க பயமே’ என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தை ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.
திகில் படங்களை கண்டு இருக்கிறோம், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்களை கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக, ‘யாம் இருக்க பயமே’ நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும் என்று கூறுகிறார் இதன் இயக்குனர் டி.கே.
‘கழுகு’ கிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு இணையாக ரூபா மஞ்சரி நடிக்க, ஓவியா மற்றும் ஆதவ் கண்ணதாசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகும் ராசியுள்ள ’சூது கவ்வும்’ கருணாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் மிகச் சிறப்பான ஒரு விஷயம், பதினாறு புதிய தொழில் நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
சைவம் படத்திற்காக முடியை இழந்த நாசர்
நவரச நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்வதில் வல்லவர் நாசர். படத்தில் தனது கதாபாத்திறத்திற்கு ஏற்ப தனது உடல் மற்றும் முக மொழிகளை மாற்றி கொண்டு நடிப்பார்.
அந்த வகையில் இயக்குநர் விஜயின் சைவம் படத்தில் முதியவர் கதாபத்திரத்திற்கு பாதி வழுக்கை விழுந்தவராக அவர் தோற்றம் இருக்க வேண்டியதிருந்தது. இதற்காக தனது முடியை குறைத்துள்ள நாசர், அசல் வழுக்கை தலையுடைய முதியவர் போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்..
அதே நேரத்தில் மற்றபடங்களில் நாசரின் தோற்றம் பாதிக்கமால் இருக்க நாசரின் முடிபோன்ற அசல்விக் ஒன்றை ஒப்பனை கலைஞரும், அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத் செய்துள்ளார். இதனை பயன்படுத்தி மற்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
சந்தானத்துடன் இணையும் சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!
‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் மீண்டும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்குப் பிறகு காமெடி நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படததில் சந்தனத்திற்கு ஜோடியாக புதுமுகம் அஷ்னா சவேரி நடிக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம்-பவர் ஸ்டார் கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனது. அதனால் படமும் ஹிட் ஆனது.
அதே மாதிரி இந்தப் படத்தில் ஒரு அம்சத்தை சேர்த்திருக்கிறார். ஆனால் இதில் பவர் ஸ்டாருக்கு பதில் சந்தானத்துடன் இணைந்து தேவயானியின் கணவர் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் நடித்திருக்கிறார். இதுவரை சந்தானம்தான் ஹீரோக்களை ‘கலாய்த்து’ காமெடி செய்திருப்பதை பார்த்திருப்போம். முதன் முறையாக இந்த படத்தில் சந்தானத்தையே கலாய்க்கும் நடிகராக ராஜகுமாரன் நடித்திருக்கிறாராம்.
“காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப, கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியான்னு” ராஜகுமாரன் பேசற ‘பன்ச்’ வசனங்கள்லாம் படத்துல பட்டையக் கிளப்புற மாதிரி இருக்காம். இந்தப் படத்தை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஈரம்’, ‘வேட்டைக்காரன்’ உட்பட பல படங்களில் நடித்தவரும், ‘முத்திரை’ படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார்.
ஏப்ரலில் கலக்க வருகிறார் நக்கல் நாயகன்
‘அட்ரா சக்க, அட்ரா சக்க, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” போன்ற டைலாக்குகளை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் கவுண்டமணி.
உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
நக்கல், நையாண்டி, கமெண்ட்டுகள் என அன்றே திரைப்படங்களில் சொல்லி இன்றும் ரசிக்கப்பட்டு வரும் கவுண்டமணி ‘49 ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதால் படத்தின் டீஸரை மார்ச் 31ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் படத்தின் இசை வெளியீடும், மே மாதத்தில் படமும் வெளிவர உள்ளது.
கௌதம் மேனன் உதவியாளராக பணிபுரிந்த ஆரோக்கியதாஸ் இப்படத்தினை இயக்க ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிக்கின்றது.
‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றுதல்களையும் தடுப்பதாகும்.
இப்பெயரில் உருவாகிவரும் இப்படம் இப்போதுள்ள விவசாயிகளின்6 பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் காமெடியாக சொல்லும் படமாக அமைய உள்ளது.
ஒரு புறம் நாடாளுமன்ற தேர்தல், மறுபுறம் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் சூடு பிடிக்கப் போகிறது.
No comments:
Post a Comment