அன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி
படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை வாழும் அண்ணாமலைத் தாத்தா- எம்மோடு வாழும்
பாட்டி தொலைபேசி உரையாடல் நல்ல பொழுது போக்காக இருந்தது. நானும் பாட்டியின் அறைப்
பக்கமாக என் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டேன்.
"பறுவதம் கேட்டியே! உவள் செல்லம்மா உன்னை நாவுறு படுத்திறாள்."
"ஏன்,என்னவாம்?"
"நேற்று Pharmacy இலை செல்லம்மாவை கண்டனான்.அவள் ஒரு பெரிய bag நிறைய மருந்து வேண்டிக்கொண்டு நிண்டாள்.நானும் வஞ்சகமில்லாமல் என்ன உவ்வளவு
மருந்து எண்டு கேட்டன்.அவளும் உந்த உலகத்து வருத்தமெல்லாம் சொல்லிபோட்டு, பறுவதத்திற்கும் என்ர வயதுதான். ஒரு வருத்தமும் இல்லை,எண்டு ஒரு சிரிப்புச் சிரிச்சாள் பார்.எனக்கு
உள்ளுக்கை ஆத்திரம் தான் வந்தது பறுவதம்."
பாட்டியும் தனது குரலை உயர்த்திக்கொண்டார்.
"ஏனாம், ஆடு, பண்டி, கணவாய், றால்,முட்டை எண்டு ஒவ்வொரு நாளும் வாய்க்குள்ளை
அடையேக்கை எதோ தாங்கள் அனுபவிக்கப் பிறந்தவை போலவும், சாவு எல்லாருக்கும் ஒருநாள் எண்டும் தத்துவம் பேசுவினம். இப்ப அதெல்லாம் எங்க போட்டுது.எங்களு மட்டும்
சாப்பிட வாயில்லையோ? சாவு எப்பவும் வரட்டும்.இருக்கு மட்டும் பிள்ளையளுக்கு தொந்தரவு குடாம ஓரளவு எங்களால முடிஞ்ச மட்டும் வருத்தம்,துன்பம் வரக்கூடாது எண்டால் சாப்பாட்டில கொஞ்சம் கட்டுப்பாடா இருக்க
த்தான்வேணும். கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசையே?"
"சரியாய் சொன்னாய் பறுவதம். வருத்தத்தை தேடுறதும் அவைதான். அனுபவிக்கிறதும் அவைதான்."என்றார் அண்ணாமலைத் தாத்தா.
''அது மட்டுமே, இந்த நாடுகளில, மருந்துகள் இலவசம் எண்டதும், ஒருக்கால் தும்மினா /இருமினால் கூட டொக்டர் க்கு இலவச போனில அடிச்சு அவரை சந்திக்க நேரம் ஒதுக்கிறது , பிறகு பக்கத்தில டொக்டர் அலுவலகம் இருந்தாலும் ,வேலையால வந்த பிள்ளையளைக்கொண்டு காரில ஏறி போய் அந்த டொக்டர்ட்டை இல்லாத வருத்தம் எல்லாம் சொல்லி மருந்து எழுதிக்கொண்டு வந்து பார்மசியில அள்ளுறது. பிறகு அந்த மருந்துகள் கவனிப்பாரில்லாமல் கிடக்கும். இதுதானே இங்கை நடக்குது. இப்பிடியான துஸ்பிரயோகங்களிலாள , இருக்கிற இந்த சலுகைகள் இனி பிள்ளையளின்ர காலத்தில இல்லாமல் போகும் எண்டோ, அல்லது பிள்ளையளுக்கும் மற்றும் வேலைசெய்வோருக்கும் வரிச்சுமை ஏறும் என்றோ இவர்களுக்குக் கவலை இல்லை. தாங்கள் மட்டும் வாழ்ந்திட்டுப் போவம் என்ற சுயநலம் இவர்களுக்கு.''
''ஐயோ பறுவதம் ,நியாயத்தை சொன்னா சிந்திக்கிற சனங்களெண்டா கதைக்கலாம். தாங்கள் செய்யிறதுதான் சரி எண்டு பிடிவாதம் கொள்ளுறவையோட கதைக்க முடியுமே!!''
''ஓமோம், உதெல்லாம் சொல்லி விளங்கப்படுத்த குழந்தைப் பிள்ளையலே, அவையவை உணர்ந்தெல்லே நடக்கவேணும்.சரி ,மேள் வேலைக்கு வெளிக்கிடுகிறாள்.சரி பிறகு கதைக்கலாம்.''
'' சரி பறுவதம் '' என்றவாறே தொலைபேசியினை துண்டித்துக்கொண்டார் அண்ணாமலைத் தாத்தா.
நானும் அம்மாவின் வழமையான அர்ச்சனைக்கு முன் காலைக்
கடன்களுக்காக படுக்கையிலிருந்து எழுந்துகொண்டேன்.
ஆக்கம்:பேரன் செல்லத்துரை மனுவேந்தன்
0 comments:
Post a Comment